Published : 10 Oct 2017 10:39 AM
Last Updated : 10 Oct 2017 10:39 AM

வரலாறு தந்த வார்த்தை 4: ‘ஈ’யாடுற விஷயம்!

2017

-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில் மருத்துவத்துக்கான பரிசு, ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய மூன்று அமெரிக்க அறிஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பழ ஈயைக் கொண்டு உயிரினங்களின் ‘சிர்காடியன் ரிதம்’ எனும் உயிரியல் கடிகாரம் தொடர்பான ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

நாம் எப்போது தூங்க வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்று நமது உடலுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதுதான் ‘சிர்காடியன் ரிதம்’. அது முறையாக இயங்காதபோது அதாவது நாம் தூங்கும் நேரம் குறைந்தாலோ அல்லது நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட்டாலோ நமக்கு உடல் மற்றும் மன ரீதியாகப் பல ஆரோக்கியச் சீர்கேடுகள் ஏற்படும். இந்த ‘சிர்காடியன் ரித’மை எந்தெந்த மரபணுக்கள் முறைப்படுத்துகின்றன என்பதைப் பற்றிய ஆய்வுக்காக மேற்கண்ட மூவரும் விருது பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய விஷயத்துக்கு ஒரு சின்ன ஈ தான் உதவியிருக்கிறது!

ஈ என்ன தந்தது?

இதே ஈ, ஆங்கில மொழிக்கு ஒரு சொற்றொடரையும் வழங்கியிருக்கிறது. அதுவும் மருத்துவத் துறையிலிருந்து அந்தச் சொற்றொடர் பிறந்திருக்கிறது!

ஒரு பெரிய சாதனையைச் செய்து முடித்த திருப்தியில் சந்தோஷமாக இருப்போம். அப்போது பார்த்து, “அண்ணே… நீங்க டென்த் ஃபெயிலுண்ணே… நான் எட்டாவது பாஸுண்ணே” என்று போகிற போக்கில் நம் மனம் புண்படும்படியோ அல்லது எரிச்சல் அடையச் செய்யும்படியோ ஒருவர் எதையாவது சொல்லிவிட்டுப் போவார். அதனால் நமது மொத்த சந்தோஷமும் வடிந்துவிடும். இப்படியொரு நிலையை வெளிப்படுத்த ஆங்கிலத்தில் ‘Fly in the ointment’ என்றொரு சொற்றொடர் உண்டு.

பண்டைய காலத்தில் மருத்துவர்கள் பெரிய அண்டா அளவுக்கு மருத்துவக் களிம்புகளைச் சேமித்து வைத்திருப்பார்கள். சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அந்த அண்டாவிலிருந்து தேவையான அளவுக்குக் களிம்பை எடுத்துத் தருவார்கள். எத்தனையோ ஆயிரம் பேரைக் குணப்படுத்தும் களிம்பைக் கொண்ட அந்த அண்டாவில் ஒரு சின்ன ஈ விழுந்துவிடும். அதனால், அந்த மொத்தக் களிம்புமே கெட்டுப் போய் பயனற்றதாகிவிடும். இவ்வாறு களிம்பில் ஈ விழுந்துவிடுவதிலிருந்து மேற்கண்ட சொற்றொடர் பிறந்தது.

இந்தச் சொற்றொடரின் ஆரம்பகாலப் பயன்பாடு பைபிளில் தென்படுகிறது. பிரசங்கி 10:1-ம் வசனத்தில், ‘செத்த ஈக்களால் வாசனைத் தைலம் கெட்டுப்போய் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும்’ என்று வருகிறது. எனவே, இனி உங்களின் சந்தோஷமான தருணத்தில் யாராவது உங்களை எரிச்சல்படுத்தினால் ‘Fly in the ointment’ போல ஃபீல் ஆகாமல் அவர் வார்த்தைகளை Fly போல ஒதுக்கிவிட்டு சந்தோஷத்தைத் தொடருங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x