Published : 24 Oct 2017 12:24 PM
Last Updated : 24 Oct 2017 12:24 PM

மாணவர் மனம் நலமா? 04 - திரும்பத் திரும்பச் செய்தால்?

ன்னுடைய 19 வயது மகன் மும்பையில் சட்டப் படிப்பு படித்துவருகிறார். தவறான நண்பர்களுடனான சகவாசத்தால் கஞ்சா புகைக்கும் பழக்கம் சில காலம் அவருக்கு இருந்தது. இதைத் தொடர்ந்து குழப்பமான எண்ணங்கள் உருவாவது, காதுகளில் சில குரல்கள் கேட்பது எனப் பிரச்சினைகள் ஏற்பட்டன. மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றபோது, ‘ஸ்கிஸோஃபெர்னியா’ என்கிற மனநோய் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். ஆறு மாதமாக சிகிச்சை கொடுத்துவருகிறோம். இந்நிலையில் தற்சமயம் முக்கியமான விஷயங்கள் எதிலும் அவருக்கு நாட்டமில்லை. படிப்பிலும் ஆர்வம் குறைந்துவருகிறது. அவர் முழுவதுமாகக் குணமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

- சரஸ்வதி, நிலக்கோட்டை

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

வளரிளம் பருவத்தில், நண்பர்கள் சேர்க்கை முக்கியமானது. அவர்களின் நடையுடை பாவனைகள், பழக்கவழக்கங்கள் எளிதில் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. கஞ்சா புகைப்பதாலும் மனப் பிரச்சினைகள் உண்டாகலாம். இந்நிலையில், உங்களுடைய மகனுக்கு ‘ஸ்கிஸோஃபெர்னியா’ இருப்பதாகச் சொல்கிறீர்கள்.

ஸ்கிஸோஃபெர்னியா எனப்படும் மனநோய், எந்த வயதிலும் வரலாம். இருந்தாலும் வளரிளம் பருவத்தில் மிக அதிகமாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. மரபணுவின் மூலம் பரம்பரைக்குக் கடத்தப்படுதல், உடலில் ஏற்படும் ரசாயன மூலக் கூறுகளில் மாறுபாடுகள், வளர்ந்த, வளர்த்த விதத்தில் தவறான போக்கு போன்றவற்றால் இது ஏற்படலாம். எல்லா வகையான ஸ்கிஸோஃபெர்னியாக்களும் தீவிரமாவதில்லை. முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அதிகப் பிரச்சினைக்கு உள்ளாகலாம். நீங்கள் சொல்வதிலிருந்து, தற்சமயம் சிகிச்சைக்குப் பிறகு, சற்று முன்னேற்றம் இருப்பதாகத் தெரிகிறது.

ஸ்கிஸோஃபெர்னியாவுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, நேர்மறையான, எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும். யாருமே இல்லாதபோது, காதுகளில் ஆணின் குரலோ அல்லது பெண்ணின் குரலோ முன்பு ஒலித்திருக்கலாம். சிகிச்சைக்குப் பிறகு அவை மறைந்துபோவது நேர்மறையாக விளைவாகும். ஆனால், மறுபுறம், ஆர்வமில்லாமல் இருப்பது, முன்புபோல வேலையில் ஈடுபட முடியாமல் போவது ஆகிய எதிர்மறையான விளைவுகளும் உண்டாவது இயல்புதான். மருந்துகளும் புனரமைப்பு சிகிச்சை முறைகளும் கண்டிப்பாக எதிர்மறையான விளைவுகளையும் நாளடைவில் மாற்றும்.

உங்கள் மகன் மேற்கொண்டிருந்த படிப்பில், ஆர்வம் ஏற்படுத்த முயலுங்கள். கண்டிப்பான அறிவுரையைத் தவிர்த்துவிட்டு தோழமையோடு எடுத்துச் சொல்லுங்கள். உங்களுடைய மனநல மருத்துவரிடம் கலந்தாலோசித்து, புனர்வாழ்வு சிகிச்சை முறைக்கு ஏற்பாடுசெய்யுங்கள். நிச்சயம் பலனிருக்கும். எனக்குத் தெரிந்து, ஸ்கிஸோஃபெர்னியாவுக்கு சிகிச்சை எடுத்தவர்களில் இன்ஜினீயர்கள், தொழிலதிபர்கள் என வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய செயல்திறன் பாதிப்படையாமல் குணமடைந்திருக்கிறார்கள்.

ன்னுடைய மகன் குமரேசன் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். சில நாட்களாக அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. படிக்கும்போது தன்னை மீறிச் சில எண்ணங்கள் திரும்பத் திரும்ப வருவதாக வருத்தப்படுகிறார். அவற்றைத் தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார். மேலும் படித்ததையே திரும்பத் திரும்பப் படிக்கிறார் சிலநேரம், அரைப் பக்கத்தைப் படிக்கக்கூட ஒரு மணிநேரம் ஆகிறது. இதுவரை நல்ல மதிப்பெண்கள் பெற்றுவந்தவர் தற்போது மிகவும் பயப்படுகிறார். தக்க ஆலோசனை சொல்லுங்கள்.

- அழகேசன், கோவை

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

உங்களுடைய மகனுக்கு ‘அப்செஷன் மற்றும் கம்பல்ஷன்’ என்று சொல்லப்படும் ‘எண்ணம் மற்றும் செயல் சுழற்சி பிரச்சினை’ இருப்பதாகத் தெரியவருகிறது. ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு நம்மை அதிக அளவில் பாதிக்கும்போது, அதைப் பற்றிய எண்ணம் நமக்குத் திரும்பத் திரும்பத் தோன்றும். இதனால் மனச்சோர்வு ஏற்படலாம். அந்த எண்ணத்திலிருந்த விடுபட்டு வேறு விஷயங்களில் மனதை நிச்சயமாகத் திசை திருப்ப முடியும்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட எண்ணம் (அதுவும் நம்முடைய எண்ணம்) திரும்பத் திரும்ப நம் மனதில் தோன்றும். அந்த எண்ணத்திலிருந்து விடுபட முடியாது. அந்த எண்ணம், சுத்தம் பற்றியோ பயம் சார்ந்ததாகவோ மகிழ்ச்சி தராத பாலியல் உணர்வு தொடர்புடையதாகவோ இருக்கலாம். அந்த எண்ணத்திலிருந்து விடுபட, ஆன்மிக நம்பிக்கையில் ஈடுபட முயல்வது, வேறு விஷயங்களில் மனதைத் திசை திருப்ப முயல்வது போன்றவற்றைச் செய்தும் பலன் இல்லாமல் போவதுண்டு. சிலர் இத்தகைய எண்ணங்களைத் தவிர்க்க, முகத்தைக் கைகளால் மூடுவது, தலை முடியைக் கையால் கோதுவது, தொடையைத் தட்டுவது போன்ற மாறுபட்ட செயல்களில் ஈடுபடுவர். இதன் மூலம் தற்காலிக நிம்மதி அடைவார்கள்.

இவர்களுக்குச் சில நேரம், தாங்கள் மேற்கொள்ளும் செயல்களில் திருப்தி ஏற்படாது. ‘எதிலும் முழுமை வேண்டும்’ என்கிற எண்ண ஆக்கிரமிப்பில், ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பே தீவிரமாக யோசித்து யோசித்து, அந்தச் செயலைத் தொடங்கவே மாட்டார்கள். மூடிய கதவின் தாழ்ப்பாளைத் திரும்பத் திரும்பச் சோதித்துப் பார்ப்பது, ‘அதீதச் சுத்தம் அவசியம்’ என்கிற எண்ணத்தால் அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுவதுண்டு.

சிறு குழந்தைகளுக்கும் அப்செஷன் மற்றும் கம்பல்ஷன் பிரச்சினை ஏற்படுகிறது. இப்பிரச்சினை தொடர்ந்து இருக்கலாம், அல்லது சில மாதங்கள், வருடங்கள் கழித்து மறைந்து போகலாம். சிலருக்கு கம்பல்ஷன் இல்லாமல் வெறும் அப்செஷன் மட்டும் உண்டாகலாம்.

இதற்கு மருந்துகளும், நடத்தை மாற்று சிகிச்சை முறைகளும் நல்ல பலனளிக்கும். திரும்பத் திரும்ப வரும் எண்ணங்கள் மாத்திரைகளால் மாறுவதற்கு வாய்ப்புண்டு. முக்கியமாக, அந்த எண்ணங்களால் மேற்கொள்ளப்படும் செயல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அப்செஷனுக்கும் கம்பல்ஷனுக்கும் இருக்கும் தொடர்பு தவிர்க்கப்பட்டு, அப்செஷன் மறைந்துபோகும்.

எதிர்கொள்ளும் வழிகள்

1. திரும்பத் திரும்ப வரும் எண்ணங்களைச் சரி செய்ய மனநல மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

2. அப்செஷன் வரும்போது அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

3. அந்த எண்ணங்களுக்கான எதிர்விளைவுகளைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம்.

4. அப்செஷன் உண்டாக்கும் பயம் அல்லது வேறுவிதமான உணர்வு நிலைகளிலிருந்து தப்பிக்க, சிலர் கைகளை அசைப்பது, கைகளால் முகத்தை மூடி திறப்பது போன்ற மாறுபட்ட செயல்களில் ஈடுபடலாம். இந்தச் செயல்களைச் செய்தால்தான் அவர்களுக்கு ஒரு திருப்தி ஏற்படும். இத்தகைய செயல்களை உடனடியாகச் செய்வதன் மூலம், அப்செஷனுக்கும் கம்பல்ஷனுக்கும் இடையில் இருக்கும் தொடர்புநிலை மேலும் இறுகிவிடும்.

5. இதற்கு மாற்றாக, அப்செஷனுக்கும் கம்பல்ஷனுக்கும் உள்ள தொடர்பைத் துண்டிக்க, எதிர்வினையாற்றும் செயலைத் தாமதப்படுத்துவது முதல் கட்டமாகக் கைகொடுக்கும்.

6. பின்பு படிப்படியாக எதிர்வினையாற்றுவதை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் அப்செஷனால் ஏற்படும் பயம் விலகி, தொடர்புள்ள எதிர்வினை இல்லாமல் அப்செஷன் மறைந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது.

‘மாணவர் மனம் நலமா?’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி,

தி இந்து-தமிழ் நாளிதழ்,

கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x