Published : 11 Oct 2017 10:36 AM
Last Updated : 11 Oct 2017 10:36 AM

டிங்குவிடம் கேளுங்கள்: இன்றைய குரங்கு ஏன் மனிதனாகவில்லை?

‘அரசியல்’ என்றால் என்ன டிங்கு?

-எ. சாய்சரண், 4-ம் வகுப்பு, கனகதாசா மெட்ரிக் பள்ளி, பருகூர்.

எளிமையாகப் பதில் சொல்லிவிட முடியாத கேள்வி இது. நம்மைச் சுற்றி நடைபெறும் அனைத்து சமூக நிகழ்வுகளும் அரசியல்தான். ஏன் எல்லோருக்கும் 3 வேளை உணவு கிடைக்கவில்லை? சிலர் வசதியாகவும் பலர் ஏழ்மையிலும் இருக்கிறார்களே, ஏன்? தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குகிறோமே ஏன்? தக்காளி ஏன் இவ்வளவு விலை? நினைத்த படிப்பை ஏன் படிக்க முடியவில்லை?... இதுபோன்று நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கேள்வி கேட்பதும் அதற்கான விடைகளைத் தேடுவதும் கூட அரசியல்தான். நீங்கள் வளர வளர நிறையப் படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது, சாய்சரண்.
 

chayoteசெள செள என்பது தமிழ்ப் பெயரா டிங்கு?

-நு. தன் நூன், 9 -ம் வகுப்பு, டவுட்டன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, சென்னை.

சயோட்டி மெசோ-அமெரிக்காவைச் சேர்ந்த தாவரம். கிறிஸ்டோபின், ச்சோ-ச்சோ, பிபினோலா, பியர் ஸ்குவாஷ், சோகோ, செள செள போன்ற பல பெயர்களில் பல்வேறு நாடுகளில் அழைக்கப்படுகிறது. தமிழில் சீமைக் கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் என்றும் அழைக்கிறார்கள். சரி, தன் நூன் என்ற உங்கள் பெயருக்குக் என்ன காரணம் என்று சொல்லுங்களேன்.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், இன்றைய குரங்குகள் ஏன் மனிதனாவதில்லை டிங்கு?

– எம். உஷா, திருப்போரூர்.

பிரமாதமான கேள்வி. பரிணாம வளர்ச்சியில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்வதற்குப் பல லட்சம் வருடங்கள் ஆகும். நம் கண் முன்னே ஒரு மாற்றம் மந்திரம் போட்டதுபோல் நிகழ்ந்து விடாது, உஷா. பாலூட்டிகளைச் சேர்ந்த ஒரு குடும்பம் ப்ரைமேட். இதில் மனிதர், மனிதக் குரங்கு, பழங்கால உலகக் குரங்குளான செர்கோபிதிகோடியா, தற்கால உலகக் குரங்குகளான செபோடியே, லெமூர், டார்சியர், லாரிஸ் போன்றவை அடங்கும். சுமார் 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரே மூதாதையரிடமிருந்து குரங்குகளும் மனிதனும் தோன்றுவதற்கான பரிணாமச் சங்கிலி தொடங்கிவிட்டது.

சுமார் 500 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இவற்றில் அடுத்த கட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன. பல பிரிவுகள் தோன்றின. சுமார் 300 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமிநோடியே என்ற ஒரு தொகுதி பழங்கால உலகக் குரங்குகளிடமிருந்து பிரிந்துவந்தது. இந்தத் தொகுதியில்தான் மனிதக் குரங்குகளும் மனிதனும் உருவானார்கள். சுமார் 32 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மனிதனை நினைவுப்படுத்தும் லூசி என்ற பெண்ணின் எலும்புகள் கிடைத்துள்ளன.

இன்றைய மனிதன் உருவாக எவ்வளவு லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கின்றன பார்த்தீர்களா? எதிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தானோ, அந்த உயிரினம் அழிந்துவிட்டது. அதனால் இன்றைய குரங்குகள் மனிதனாகும் சாத்தியம் இல்லை.

டிஸ்லெக்ஸியா நோய் என் தங்கைக்கு இருக்கிறதாகச் சொல்கிறார்கள். இதைக் குணப்படுத்த இயலுமா? அவள் மற்றவர்களைப்போல் வாழ முடியுமா டிங்கு?

–கே. பிரான்சிஸ்கா ராணி, பாண்டிச்சேரி.

11CHSUJ_TINKU தாமஸ் ஆல்வா எடிசன்right

டிஸ்லெக்ஸியா என்பது நோய் அல்ல. இது கற்றலில் ஏற்படும் ஒரு குறைபாடு. தற்போது இதை எளிதாகச் சரி செய்துவிடலாம். டிஸ்லெக்ஸியா பயிற்சி மையங்களில் சேர்ந்து, சில மாதங்களோ, ஒரு வருடமோ பயிற்சி எடுத்துக்கொண்டால் சாதாரணமானவர்களாக மாறிவிடலாம்.

ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு மேல் நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், வால்ட் டிஸ்னி, ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், எழுத்தாளர் அகதா கிறிஸ்டி, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், தேவதைக் கதைகளின் தந்தை ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள் எல்லாம் டிஸ்லெக்ஸியா குறைபாடு உடையவர்கள்.

 உங்கள் தங்கையும் நாளை சாதனையாளராகவும் மாறலாம், கவலை வேண்டாம் பிரான்சிஸ்கா ராணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x