Published : 01 Oct 2017 12:33 pm

Updated : 01 Oct 2017 12:33 pm

 

Published : 01 Oct 2017 12:33 PM
Last Updated : 01 Oct 2017 12:33 PM

பெண்ணுக்கு நீதி 3: மரணம் எழுப்பிய கேள்வி

3

“என்ன ஆச்சு?”

“நான் கொளுத்திக்கிட்டேன்”


“எதற்கு?”

“என்னைக் கெடுத்துட்டாங்க”

“யார்? தெரிஞ்சவங்களா, தெரியாதவங்களா?”

“என் அப்பா சுப்பையா.”

சுருக்கென்ற வார்த்தைகள். மழலை விடைபெறாத மொழியில் திக்கித் திணறி தழலை அள்ளிக் கொட்டினாள் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிறகு அவள் வாய் திறக்கவே இல்லை. அது அவள் கொடுத்த மரண வாக்குமூலம் ஆகிவிட்டது. உடல் முழுக்கத் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுப் பிஞ்சு, தன் தற்கொலை முயற்சியில் ஜெயித்தியிருக்கலாம். தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை, தன் மரணத்தின் மூலம் துடைத்துவிட்டதாகவும் நினைத்திருக்கலாம். அந்தத் தகாத தகப்பனுக்கு, சிறுமி்யைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதற்கும் தற்கொலைக்குத் தூண்டியதற்குமாகச் சேர்த்து இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது சென்னை மகளிர் நீதிமன்றம்.

சம்பவம் நடந்த அன்று, தீபா தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் படுத்திருந்த அறை 10-க்கு 7 அடி அளவே கொண்ட ஒரு சிறு அறை. அந்த அறைதான் வீடு. அம்மா ஊருக்குப் போயிருந்தார். அன்று அவளுக்கு என்ன நடந்தது என்பதை தீபாவே சொன்னதுதான் மேலே சொன்ன மரண வாக்குமூலம்.

நீதியை எரித்த தாய்

தீபா மறுநாள் பள்ளிக்குச் செல்லவில்லை. அடிவயிற்று வலி என்று மரவட்டையாய்ச் சுருண்டு படுத்திருந்தாள், ஆற்றுவாரும் தேற்றுவாருமின்றி. எதுவுமே நடக்காதது போல அப்பா வேலைக்குப் போய்விட்டார். மதியமானதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தன்னை எரித்துக்கொண்டாள் தீபா. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீபாவின் அலறல் கேட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீபாவின் அம்மா தீபாவின் வழக்கை ஆதரிக்கவில்லை. மாறாகத் தன் கணவர் குற்றமற்றவர் என்று சொன்னார். தன் மகளுக்கு யாருடனோ தொடர்பு எனவும் அதைக் கண்டித்ததால் தீக்குளித்துவிட்டார் என்றும் சொன்னார். ஆனால், மருத்துவ அறிக்கையோ தீபா வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை உறுதிசெய்தது. தீபாவின் மரண வாக்குமூலமும் மருத்துவரின் சாட்சியமும்தான் நீதி வெல்ல உதவின. ஒரு தாய் உண்மையை மறைத்து, காமுகனான கணவனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? வறுமையா? சமூகத்தின் பார்வையை எதிர்கொள்ள முடியாத இயலாமையா? இரண்டுமாகத்தான் இருக்க முடியும். உள்ளத்தால் எரிந்ததால் உடலாலும் எரிந்து போனவள் மகள். உள்ளம் எரிந்தபோதும் மீதியுள்ள வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள நீதியை எரித்தவர் தாய்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்குப் பெரும்பாலும் பழகியவர்களும் நெருங்கிய உறவினவர்களுமேகூட காரணமாக இருக்கிறார்கள். இது ‘கலிகாலம் முத்திப்போச்சு’ என்ற வார்த்தைகளுடன் உதாசீனப்படுத்திவிடக்கூடிய சாதாரண விஷயமல்ல. இந்தக் கட்டுரையில் வரும் தீபாவைப் போன்ற 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளிடம், அவர்களின் சம்மதத்துடனோ அல்லது சம்மதமின்றியோ யாரும் பாலியல் உறவுகொள்வது சட்டப்படி குற்றம்.

பாலியல் கல்வி அவசியம்

நவீன தகவல் தொழில்நுட்பமும் காட்சி ஊடகங்களும் பதின்பருவ சிறுவர், சிறுமியரிடையே பாலியல் வேட்கையை மிக முன்னதாகவே அறிமுகப்படுத்திவிடுகின்றன. ரகசியங்களற்ற இணையவெளி, அவர்கள் தடை செய்யப்பட்ட ஆப்பிளைச் சுவைக்க ராஜபாட்டை அளிக்கிறது. இப்படியொரு சூழலில் பதின்பருவத்தினரின் இச்சைகளைக் கொச்சைப்படுத்தாமல் பாலியல் புரிதலின் பாலபாடங்களைப் பள்ளியிலிருந்தே தொடங்கலாம். பாலியல் கல்வி பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்குப் பாலியல் கல்வி வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் இன்றைய சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

பாலியல் குறித்த முறைசாரா அறிமுகம், காட்சி ஊடங்கள் வாயிலாக இளம் வயதினரின் மூளையில் முகாமிடும் முன்பாகப் பதின்பருவத்தினரின் வயதுக்கேற்ற வகையில் அவர்களது நண்பர்களைப் போல சந்தேகங்களைத் தீர்க்கிற வகையில், அச்சங்களைப் போக்குகிற வகையில் பாலியல் கல்வி பாடத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். எது எதற்கோ வெளிநாட்டினரின் அனுபவத்தையும் அறிவையும் நாடும் நாம், அவர்கள் வளரிளம் பருவத்தினரின் பாதையை எப்படி வடிவமைக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். துரித உணவு கலாச்சாரத்தின் காரணமாக அவற்றில் கலந்துள்ள வளர்சிதை மாற்றத்தை மாற்றியமைக்கும் வேதிப்பொருட்களின் அளவுக்கு அதிகமான சேர்க்கையால் பல குழந்தைகள் உரிய வயது வரும் முன்பே வாலிபத்தின் அடையாளங்களை வரித்துக்கொண்டுவிடுகிற வாழ்வியல் விபரீதத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, வெளிநாடுகளில் தொடக்கக் கல்வி நிலையிலேயே பாலியல் கல்வியை அறிமுகம் செய்கிறார்கள்.

தண்டனை யாருக்கு?

இதில் குடும்பங்களுக்கும் பங்கு உண்டு. நேற்றைய கூட்டுக் குடும்ப வாழ்வில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, மைத்துனர்கள் என்று ஒரு நீண்ட உறவுப் பட்டியல், இளைய சமூகத்துக்குக் கற்பிக்கத் தயாராக இருந்தது. இன்று கூட்டுக் குடும்பம் சிதைந்து, தனிக் குடும்பமாக மாறிவிட்ட பிறகு பாலியல் கல்வி என்பது போதுமான அளவிலும், சரியான புரிதலோடும் கிடைக்க வழி இல்லாமல் போனது. அதனால்தான் பாலியல் வன்முறை சார்ந்த குற்றங்கள் நேர்கிறபோது எப்படி வினையாற்ற வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. பாலியல் வன்முறைக்கு ஆளாகிவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகத்தான் பலர் நினைக்கிறார்கள். தீபாவும் அந்த எண்ணத்தில்தான் தன்னை மாய்த்துக்கொண்டாள். தவறு செய்தவர்கள்தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.

இப்படியொரு சூழலில் கல்வியோடு இணைந்த பாலியல் அறிவைப் பதின்பருவத்தினருக்குப் பக்குவமாகக் கற்பிக்க வேண்டியது சமூகத்தின் கடமை. இன்றைய கட்டற்ற இணையவெளி, சட்டம் போட்டு வைத்த கட்டுப்பாட்டு வேலிகளைத் தாண்டி விரிந்திருக்கிற சூழலில் காட்சி ஊடகங்களும் அச்சு இதழ்களும் இளம் தலைமுறையினரின் பாதையைப் பண்படுத்துகிற வேலையைச் செய்தாக வேண்டும்.

“எங்களை எதிர்காலம் என்று சொன்னீர்கள்

ஆனால் எங்களை எரித்தீர்கள்

உங்களுக்கு ஏது எதிர்காலம்?”

இதுதான் சிறுமி தீபாவின் அக்னிப் பிரவேசம் எழுப்பிய கேள்வி

(பாதைகள் விசாலமாகும்)

கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்

தொடர்புக்கு: judvimala@yahoo.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x