Last Updated : 22 Oct, 2017 12:52 PM

 

Published : 22 Oct 2017 12:52 PM
Last Updated : 22 Oct 2017 12:52 PM

பெண்ணுக்கு நீதி 06: விளையாட்டுக் கருவியான வாகரத்து

நீ

திமன்றங்கள் மனித உரிமைகளின் சரணாலயங்கள். அந்த நீதிமன்றங்களிலும், மனித உரிமைகளை மரணிக்க வைக்கிற செயல்களை செய்யத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள். இந்த வழக்கின் நாயகனும் நீதிமன்றத்தை விளையாட்டு மைதானமாக்கி, பெண்களின் வாழ்க்கையோடு விளையாடியவர்தான்.

நயவஞ்சக விவாகரத்து

சென்னை அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார் சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாகத் தெரிந்தார். சங்கரின் முதல் மனைவி ஜெயந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களின் எட்டு ஆண்டுத் தாம்பத்தியத்தில் மதுக் கடைகள் மூடப்பட்ட காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி போன்ற ஒரு சில நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் மது குடித்தார் சங்கர். இதனால் தனது சம்பளத்திலிருந்து சல்லிக்காசுகூட வீட்டு செலவுக்காகக் கொடுக்கவில்லை.

இதனால் தம்பதியிடையே அடிக்கடி சண்டை வந்தது. இதேபோல் ஒருமுறை சங்கர் மது அருந்திவிட்டு வந்தபோது இருவருக்கும் சண்டை முற்றி ஜெயந்தியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் சங்கர். அந்த வழக்கில் எதிர்த்து வாதாட ஜெயந்திக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை, அவரிடம் சென்று சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். இதனால் ஜெயந்தியால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. அதனால், சங்கருக்கு ஒருதலைபட்ச விவாகரத்து கிடைத்துவிட்டது.

விவாகரத்து கிடைத்த ஒரு மாதத்தில் சங்கர் தனது தூரத்து உறவுமுறையில் திருமணமாகாமல் இருந்த ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவர் பெயர் நிர்மலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 30. அவரைக் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்துகொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்தார். ‘ஜெயந்தியை என்ன செய்வாய்?’ என்று நிர்மலா கேட்க, தான் வாங்கியிருந்த விவாகரத்து உத்தரவின் நகலை எடுத்துக் காட்டினார்.

அந்தத் தீர்ப்புக்குப் பின்னால் மறைந்திருக்கும் சங்கரின் வஞ்சம், சூழ்ச்சி எதையும் அறியாத நிர்மலா மகிழ்ச்சியடைந்தார். விரைவிலேயே சங்கர்-நிர்மலா திருமணம் அரங்கேறியது. முதல் கல்யாணத்தில் லகரம் பெயரவில்லையே, இந்தத் திருமணத்தின் மூலமாவாது சொத்து சுகம் கிடைக்கும் என்று திட்டமிருந்தார் சங்கர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தன் உண்மை முகத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

சங்கர் கொடுத்த இன்னல்கள் தாங்காமல் நிர்மலா தன் தாய் வீட்டுக்குப் போய்விட்டார். உடனடியாக, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சங்கரிடமிருந்து ஜீவனாம்சம் கோரினார்.

செல்லாததான திருமணம்

வழக்குப் போட்டது தெரிந்தவுடனேயே, சங்கர் மீண்டும் ஜெயந்தி வீட்டுக்கு போய்விட்டார். ஜெயந்தியிடம் ஆசை வார்த்தைகள் பேசினார். ‘வாழாவெட்டி’ என்ற வார்த்தையால் மனரீதியாக நொந்து போயிருந்த ஜெயந்திக்கு, அவ்வார்த்தைகள் தேவைப்பட்டன. ‘விவாகரத்து செய்துவிட்ட சங்கரோடு, ஜெயந்தி வாழ முடியாது’ என்று ஊரார் சொன்னார்கள். ‘நீ இல்லாமல் ஒரு தலைபட்சமாக விவாகரத்து வழங்கப்பட்டது, அதனால் நீ மனு செய்து அந்த தீர்ப்பை ரத்து செய்துவிடலாம்’ என்று ஜெயந்தியிடம் சொன்னார் சங்கர்.

அவர் சொன்னபடி ஜெயந்தி மனு செய்து, அதற்கு சங்கர் ‘ஆட்சேபணை இல்லை’ என்று சொன்னதால், அந்த விவாகரத்து உத்தரவு ரத்து செய்யப்பட்டது. சங்கர் சந்தோஷப்பட்டார். எதற்காக? ஜெயந்தியுடன் வாழக் கிடைத்த வாய்ப்புக்காகவா? இல்லவே இல்லை. பின் எதற்காக?

அதற்கடுத்த மாதங்களில் குற்றவியல் நீதிமன்றத்தில் நிர்மலா தொடர்ந்த ஜீவனாம்ச வழக்கு விசாரணைக்கு வந்தபோது,‘நிர்மலா என்னுடைய இரண்டாவது மனைவி. சட்டரீதியான முதல் மனைவி ஜெயந்தி இருக்கும்போது, சட்டவிரோதமாக வந்த இரண்டாவது மனைவிக்கு நான் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை’ என்று விதண்டாவாதம் செய்தார் சங்கர். விவாகரத்து வழக்கு ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையில், ஜெயந்தியை முதல் மனைவி என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நிர்மலாவின் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

உதவிக்கு வந்த ‘44’

நிர்மலா உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். அந்த மேல்முறையீட்டில், சங்கர் பெற்ற விவாகரத்து ஆணையை நம்பியே அவரை திருமணம் செய்துகொண்டதாகவும், தான்தான் அவரது சட்டரீதியான மனைவி என்றும் வாதிட்டார். சட்டமும் நீதியும் வேறுவேறாக இருக்க முடியுமா? குழம்பியது நீதிமன்றம். முதலில் நீதிமன்றத்தைக் கருவியாகப் பயன்படுத்தி ஒரு பெண்ணை ஏமாற்றி, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

மீண்டும் அந்த நீதிமன்றத்தையே கருவியாக்கி, அப்படித் திருமணம் செய்துகொண்டவரின் அந்தஸ்தை கேள்விக்குறியாக்கியுள்ளார் சங்கர். விளையாட்டைப் போல வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் சங்கரின் செயல், சட்டரீதியானதுபோல மேம்போக்காகத் தெரிந்தாலும், அந்தச் செயலின் நியாயமற்ற தன்மை வெளிப்படையாகவே தெரிந்தது.

இதற்குச் சட்டம் என்ன சொன்னது? இந்திய சாட்சியச் சட்டப் பிரிவு 44 உதவிக்கு வந்தது. இதன்படி உண்மைகளை மறைத்தும், ஏமாற்றியும், எதிர்தரப்பினருடன் கூட்டு சேர்ந்து நயவஞ்சகமாகவும் பெறப்படும் எந்த நீதிமன்ற உத்தரவுக்கும் உயிர் கிடையாது, அது செல்லுபடியாகாது. இந்த அடிப்படையில், உயர் நீதிமன்றம் நிர்மலாவுக்கு சங்கர் ஜீவனாம்சம் மட்டும் வழங்க உத்தரவிட்டது.

சங்கர் என்ன காரணத்துக்காக விவாகரத்து வாங்கினார்? தனக்கு தெரியாமலேயே எப்படி அவரால் விவாகரத்து வாங்க முடிந்தது? விவாகரத்து வாங்கிய பிறகு, அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? வாங்கிய உத்தரவை ஏன் ரத்து செய்ய ஒப்புக்கொண்டார்? இதைப் பற்றியெல்லாம் ஜெயந்தி யோசிக்கவே இல்லை. யோசித்திருந்தால் சங்கரின் சூழ்ச்சியிலிருந்து நிர்மலாவாவது தப்பித்து இருக்கக்கூடும். இவர்களைப்போல நாட்டில் எத்தனை ஜெயந்திகள், நிர்மலாக்கள்? இவர்கள் எல்லாம் எப்போது விழித்துக்கொள்வார்கள்?

(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு: judvimala@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x