Published : 24 Sep 2017 11:45 AM
Last Updated : 24 Sep 2017 11:45 AM

எசப்பாட்டு 2: யாருக்கு இதம் தருகிறது குடும்பம்?

ரா

ணுவத்தில் நான் இருந்தபோது வட இந்திய நண்பர்கள் பலர் மனைவியை ‘ஃபேமிலி’ என்று சொல்வதைக் கவனித்திருக்கிறேன். ஃபேமிலி என்றால் குடும்பம் என்றுதான் பொதுவாக நாம் பொருள்கொள்கிறோம். ஆனால், நம் நாட்டில் பலரும் ஃபேமிலியை மனைவி என்ற பொருளில்தான் பயன்படுத்திவருகிறார்கள். “என்ன சகா, குடும்பத்தோட வந்திருக்கீங்களா?” என்று கேட்டால், “இல்லையில்லை... நானும் ஃபேமிலியும் மட்டும்தான் வந்திருக்கோம். பிள்ளைகள் ஊர்ல இருக்காங்க” என்று சொல்கிறவர்கள் உண்டு. இதுபோல ஃபேமிலி என்றால் மனைவி என்கிற பொருளில் மிக இயல்பாகப் பேசுவோரை நிறையப் பார்த்துவிட்டேன். குடும்பம்னா அதுக்கு மையமாக இருப்பது மனைவிதான் என்று நம்மாட்கள் மனதில் அழுத்தமாக இருக்கிறது என்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இன்னொரு பக்கம், “ஆண்கள் உரிமைப் பாதுகாப்பு சங்கம்” என்று பேர் வைக்காமல் ஏன் சார் இந்திய குடும்பப் பாதுகாப்பு அமைப்புன்னு பேர் வச்சிருக்கீங்க?” என்று Save Indian Family Foundation தலைவர் ஸ்வரூப் சர்க்காரைக் கேட்டால் அவர் கோபத்தோடு, “நாங்க குடும்பம்னு சொல்றது கணவன், அவனுடைய அம்மா, அப்பா, அக்கா, தங்கைகள் ஆகியோர் கொண்ட குடும்பத்தைத்தான்”என்கிறார்.

“அப்போ உங்க மனைவி ?”

“அவளைக் காப்பாத்ததான் எத்தனை மாதர் சங்கம் இருக்கு? எத்தனை தொண்டு நிறுவனம் இருக்கு? ‘எங்க குடும்ப’த்துக்குத்தான் பாதுகாப்பு தர இந்தக் கேடுகெட்ட நாட்டில் யாருமே இல்லை”

குடும்பத்துக்குள் மனைவி இல்லையா?

கணவனை மையமாகக் கொண்டதுதான் குடும்பம் (மனைவி அதில் வெளி ஆள்) என்பது இந்த ‘ஆபாச’த்தினரின் வாதம் (ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்பதன் சுருக்கிய வடிவம் - ஆபாசம்). பெண் இல்லாத வீட்டை அறை என்கிறோம். பெண் வந்தால் அது வீடாகிறது; குடும்பமாகிறது. குடும்பத்தின் மையம் ஆணா பெண்ணா என்ற விவாதம் அர்த்தமற்றது. இருவரும் இணைந்த ஓர் நிறுவனம்தான் குடும்பம். கணவனும் மனைவியும் பெரும்பாலும் ரத்த உறவுடையவர்கள் அல்லர். இந்தியாவில் ரத்த உறவுக்குள் மண உறவு என்பது இன்னும் ஆங்காங்கு நீடிக்கிறது என்றாலும் அது எண்ணிக்கையில் மிகவும் சுருங்கிவிட்டது. ரத்த உறவு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவரவர் குடும்பத்திலிருந்து துண்டித்துக்கொண்டு ரத்த சம்பந்தமில்லாத கணவனும் மனைவியும் சேர்ந்து புதிய ஒரு குடும்பத்தை நிறுவுகிறார்கள். குழந்தைகள் என்கிற புதிய ரத்த உறவுகளை உருவாக்குகிறார்கள்.

புதிய குடும்பத்தை அவர்கள் உருவாக்கினாலும் அவர்களின் உணர்விலும் நினைவுகளிலும் ‘தங்கள் குடும்பம்’ எனத் தொடர்வது அவர்களின் முந்தைய ரத்த உறவுக் குடும்பம்தான். தூரத்து ஊர்களில்/நாடுகளில் போய் வாழ நேர்ந்தாலும் அவர்கள் உணர்வால் ‘அந்தக் குடும்பத்தின்’ உறுப்பினர்களாகத்தான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இது இயல்பானதுதான்.

ஆணைப் பாதுகாக்கும் குடும்பம்

ஆண் தன் முந்தைய ரத்த உறவுக் குடும்பத்தோடு சாகும் வரைக்கும் உயிரோட்டமான உறவைக் கொண்டிருப்பதும் பெண் புகுந்த வீட்டையே தனக்கான நிரந்தர இருப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பண்பாட்டுக் கொடுமையும்தான் இதில் முரணானது. நாற்றங்காலிலிருந்து பிடுங்கி நடப்பட்ட செடியாகப் பெண் ஆக்கப்பட்டிருக்கிறாள். இது பெண்களின் உளவியலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து இலக்கியங்கள்கூட அதிகம் பேசியதில்லை. ஆகவே, குடும்பம் என்பதே இந்தியாவில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம்தான் என்பதை புரிந்துகொள்ளாததுபோல நடிப்பவர்கள்தான் தனியாக இன்னும் ஒரு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை உருவாக்கிக்கொண்டு காமெடி பண்ணுகிறார்கள்.

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது பாரதியின் ‘இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்கிற வரிகளில் வரும் ‘இதம் தரும் மனை’ என்கிற சொற்றொடர் ஆய்வுக்குரியதல்லவா? மனை யாருக்கு இதம் தருகிறது? யார் இதம் தருகிறார்? இதமானதாக அந்த இல்லத்தை வைத்திருக்கும் கடமை யாருக்குரியதாக இன்றும் இருக்கிறது?

ஆளும் கடமை ஆணுக்கா?

உணர்வுப் பந்தம், பண்பாட்டு அழுத்தம் இரண்டையும் குடும்பத்தைப் பிணைத்து வைத்திருக்கும் இரண்டு அம்சங்கள் எனச் சொல்லலாம்.கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான காதல், குழந்தைகள் மீதான பாசம் போன்ற உணர்வுரீதியான பிணைப்பு குடும்பத்தின் மிக முக்கியமான ஆதார சுருதியாக விளங்குகிறது. காதல், காமம் போன்ற இயற்கையான உந்துதல்களினால் குடும்பத்தில் மனிதகுல மறு உற்பத்தி காலம் காலமாகத் தொடர்கிறது. அதே போல இயற்கையான உந்துதலினால் தாய் தான் பெற்ற குழந்தைகளுக்குப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தெடுக்கிறாள். அதற்கு ஆண் துணை நிற்க வேண்டும். இந்த இயற்கையான உந்துதலுக்கு மேலாக குடும்பம் இயங்குகிற காலத்தின், நிலப்பரப்பின் ஆதிக்கப் பண்பாடு (Dominant Culture) குடும்பத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

(பொன்முடியார்)

என்பதுபோல ஆளும் பண்பாடு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறருக்குமான காலக் கடமைகளைத் தீர்மானிக்கிறது. உலகத்தோடு ஒட்ட ஒழுக வேண்டி இந்தக் கடமைகளைச் சரிவரச் செய்பவரே நல்ல குடும்பத்தாராகக் கருதப்படுவர். பெண்ணுக்குக் காலம் காலமாகக் குழந்தைகளைப் பெற்று வளர்த்துக் குடும்பத்தைப் பேணும் Caring And Nurturing (பேணுவதால் அவள் பெண்; ஆளுவதால் அவன் ஆண்) கடமையே தரப்பட்டுவந்தது. ஆகவே குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் இதம் தரும் கடமை பெண்ணுக்குரியதாகவே தொடர்ந்தது. ஆகவே அடுப்புப் புகையும் கரிச்சட்டிகளும் பானைகளும் அழுக்கு மூட்டைகளும் பெருக்குமாறும் தேங்காய் நாரும் உப்பும் புளியும் அவள் சொத்துக்களும் வாழ்முறைகளுமாகி அவளை மூச்சுத்திணற வைத்தன. மெழுகுவத்தியாக உருகிக் குடும்பத்துக்கு வெளிச்சம் தரும் கடமையைக் கொண்டாள் பெண்.

குலையும் குடும்ப அமைதி?

இது ஏன் இப்படியே தொடர வேண்டும் என்கிற கேள்வி 19-ம் நூற்றாண்டில் எழுந்தது. ‘விலகி வீட்டிலோர் பொந்தில்’ வாழ்ந்துகொண்டிருந்த பெண்களின் கைவாளாகக் கல்வி வந்து சேர்ந்தது. ஜனநாயக யுகத்தில் பெண்களும் படிக்கலாம் என்று வந்த பிறகு, பெண்களும் வேலைக்குப் போகும் காலம் தொடங்கிய பிறகு குடும்பம் என்னும் கோட்டைக்குள் என்ன நடந்தாலும் கேள்வி கிடையாது என்கிற ஆதிக்கப் பண்பாட்டின் மீது கல்லடி விழத் தொடங்கியது. குடும்பத்துக்குள் சமூகம் தலையிட சட்ட ஏற்பாடுகள் முகிழத் தொடங்கின. வீட்டுச் சத்தம் நீதிமன்றத்துக்குப் போக வழி பிறந்தது.

பெண்கள் பாதுகாப்புக்கான அரசியல் சட்டத்தின் 498ஏ பிரிவு, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 என சட்டங்கள் வந்த பிறகுதான் இந்த ஆண்கள் பாதுகாப்பு சங்கங்களும் புற்றுக்குள் இருந்து வெளியேறிச் சீறத் தொடங்கின. இதம் தந்த மனையாட்டிகள் எதிர்க் கேள்விகள் கேட்டுக் குடும்பம் என்னும் எஃகுக் கோட்டைகளில் விரிசல்களை ஏற்படுத்தத் தொடங்கினர். அந்த விரிசல்களின் வழியே வெளியேறிச் சுதந்திரக் காற்றைப் பெண்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஆம். ‘குடும்ப அமைதி’ குலையத்தான் தொடங்கியது. இதம் மட்டுமே தரக் கடமைப்பட்ட பெண் கேள்வியும் கேட்டு எரிச்சலூட்டுகிறாள். தராசில் ஆண் பக்கம் வலுவாகக் குவிந்திருந்த எடைக் கற்கள் சரியத் தொடங்கியுள்ளன. ஆகவேதான் இந்த ‘ஆபாச’ங்களின் குரல். வரட்டும்; அதுவே எப்படியான சமூக உளவியல் இங்கே ஆழமாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இவை உதவும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x