

எ
ங்கே செல்ல வேண்டும் என்று தெரியாமல், நீண்ட பயணத்தை மேற்கொள்வீர்களா? இல்லைதானே! இலக்கில்லா வாழ்வும் அப்படிப்பட்டதுதான். வாழ்க்கை தங்களை அலைக்கழிப்பதாகப் பலர் உணர்கிறார்கள். “கடினமாகத் தானே உழைக்கிறோம், இருப்பினும் ஏன் முன்னேறவில்லை” என்று வருந்துகிறார்கள். இவ்வாறு நினைப்பதற்குக் காரணம், தங்களுக்கு என்று எந்த இலக்கும் வகுக்காமல் இருப்பதுதான்.
முதலில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். பின்னர் அதைச் செயல்படுத்துங்கள். உத்வேகம் அளிக்கும்வண்ணம் சாமர்த்தியமான இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். அந்த இலக்கானது, வரையறுக்கக்கூடியதாக, அளவிடக்கூடியதாக, அடையக்கூடியதாக, பொருத்தமானதாக, காலவரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இலக்கை அடைவதற்கு நாம் ஏற வேண்டிய படிக்கற்களை வரையறுத்து, எழுதி வைத்துக்கொள்வது நல்லது. ஒவ்வொரு படியையும் கடந்த பின்பு, அதை நீக்கிவிடுவது ஊக்கமளிக்கும்.
சாதனையாளர்கள் தங்களுக்கென்று தெளிவான இலக்குகளைக் கொண்டிருகிறார்கள். இலக்குகள், நீங்கள் பெற்ற அறிவை ஒருமுகப்படுத்தி, உங்களுடைய நேரத்தை முறைப்படுத்தி, உங்களுக்கு வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் அளிக்க உதவும்.
இலக்குகளைப் பல்வேறு நிலைகளில் நிர்ணயம் செய்ய வேண்டும்:
முதலில் நமது வாழ்நாளுக்கான லட்சியத்தை முடிவு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு அடுத்த பத்து வருடங்களில் எதை அடைய விரும்புகிறோம் என்பதை நிர்ணயம் செய்வது.
பின்பு வாழ்நாள் இலக்கை எளிதில் அடைவதற்காக, அந்தப் பெரிய இலக்கைச் சிறிது சிறிதாக உடைத்து, நாம் தினசரி அடையக்கூடிய இலக்குகளாக மாற்ற வேண்டும்.
இறுதியாகத் தினமும் அதை அடையும்வண்ணம் நாம் செயலாற்ற வேண்டும்.
முதல் படி: வாழ்நாள் இலக்கை நிர்ணயித்தல்
வாழ்நாள் இலக்கு என்பது, நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் நம்மை நாமே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
வேலை – தொழில்துறையில் எந்த அளவு உயர வேண்டும் அல்லது எதை அடையப் போகிறோம்?
சம்பாத்தியம் – எந்தெந்த நிலைகளில் எவ்வளவு சம்பாதிக்க விரும்புகிறோம், வேலை பற்றிய லட்சியத்துடன் இது எந்த அளவுக்குப் பொருந்துகிறது?
கல்வி – எதில் தேர்ச்சி பெற விரும்புகிறோம், பிற இலக்குகளை அடைவதற்கு, என்ன கற்க வேண்டும்?
மனப்பாங்கு – நம்முடைய எந்தக் குணம், நம்மைப் பின்னுக்குத் தள்ளுகிறது, எது நம்மைப் பாதிக்கிறது, அந்தக் குணத்தை எப்படி மாற்றுவது?
உடல்நலம் – எவ்வளவு எடை இருக்க வேண்டும், அதற்கு எந்த அளவுக்கு உடற்பயிற்சி தேவை?
மனமகிழ்ச்சி – மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
இரண்டாம் படி: சிறிய இலக்குகளை நிர்ணயித்தல்
வாழ்நாள் இலக்கை நிர்ணயித்த பின்னர் அதை ஐந்தைந்து வருடங்களில் அடையக்கூடிய வண்ணம் உடைத்துச் சிறியதாக்க வேண்டும். பின்பு அந்த ஐந்தை ஒரு வருடமாக, பின்பு ஆறு மாதமாக, பின்பு ஒரு மாதமாக, பின்பு ஒரு வாரமாக, இறுதியில் தினமும் அடையக்கூடியதாக மாற்ற வேண்டும். தினமும் என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டுவைப்பது, உங்களுடைய முயற்சியை அளவிடவும், செல்லும் பாதையை ஆராயவும் உதவும்.
வேலை – நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக வேண்டும்
கல்வி – எம்.பி.ஏ. படிக்க வேண்டும்
உடல்நலம் – நான் அடுத்த வருடம் மராத்தான் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்
நிர்வாக இயக்குநர் ஆகும் இலக்கை எப்படிச் சிறியதாகப் பிரிக்கலாம் என்று கீழே பார்ப்போம்:
ஐந்து வருட இலக்கு: துணை நிர்வாக இயக்குநர் ஆக வேண்டும்.
ஓராண்டு இலக்கு: மேலாளர் ஆக வேண்டும்
ஆறு மாத இலக்கு: பகுதி நேரத்தில் எம்.பி.ஏ. படிப்பதற்குச் சேர வேண்டும்
ஒரு மாத இலக்கு: நிர்வாக இயக்குநரிடம் பேசி, பணியைத் திறம்படச் செய்ய, இன்னும் என்னென்ன படிக்க வேண்டும் என்று கேட்டறிய வேண்டும்
ஒரு வார இலக்கு: தற்போதைய நிர்வாக இயக்குநரைச் சந்திப்பதற்கு நேரம் கோர வேண்டும்
இந்த முறையை எல்லா இலக்குகளுக்கும் பயன்படுத்தினால், அவற்றை அடைவதற்கான பாதை நமக்குத் தெளிவாகப் புலப்படும்
சிறியதோ பெரியதோ ஒரு இலக்கை அடைந்தவுடன், அதற்காக மகிழ்ச்சி அடைவது முக்கியம். சின்னச் சின்ன முன்னேற்றங்களுக்கும் நாமே நம்மை முதுகில் தட்டிக்கொடுத்துக்கொள்ள வேண்டும். இது நமக்குத் தன்னம்பிக்கை, உத்வேகத்தையும் ஒருங்கே அளிக்கும்.
இறுதியாக, முயற்சி மட்டும்தான் கையில் உண்டு. அதன் வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை. உயிருடன் வாழ்வதைவிட மிகப் பெரிய இலக்கு எதுவுமில்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வது அளவுக்கு அதிகமான ஏமாற்றங்களைக் கடப்பதற்கு உதவும்.