Last Updated : 15 Nov, 2016 11:23 AM

 

Published : 15 Nov 2016 11:23 AM
Last Updated : 15 Nov 2016 11:23 AM

பிளஸ் டூ-இயற்பியல் தேர்வுக்குத் தயாரா? - புரிந்துகொண்டு படித்தால் இயற்பியல் இனிது!

இந்த ஆண்டு வெளியான பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளில், பிற பாடங்களை விட இயற்பியலில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது அந்தப் பாடத்துக்கு மாணவர்கள் அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. படம் வரைதல், அமைப்பு செயல்விளக்கம் என பல்வேறு கூறுகளை ஒருசேரப் படிக்க வேண்டியிருப்பதால், இயற்பியலை சற்று சிரமமாக மாணவர்கள் கருதலாம். ஆனால் புரிந்துகொண்டு ஆர்வத்துடன் படித்தால் இயற்பியல் வெகு இனிமையான பாடமாக அமையும்.

கணித வினாக்களில் கவனம்

நேர விரயத்தைத் தவிர்க்க, கணித வினாக்களுக்கு முதலில் விடையளிக்கலாம். கணித வினாக்களை தீர்க்கையில், சரியான சூத்திரத்தை எழுதுதல், தீர்வுகளை உரிய அலகுடன் எடுத்து எழுதுதல் போன்ற படிநிலைகளில் விடை அமைய வேண்டும். ஒரே மாதிரியான வினாக்களிலிருந்து குழப்பத்தைத் தவிர்க்க, உரிய சூத்திரங்களை நினைவு கொள்வதில் கவனம் வேண்டும். கேட்கப்பட்ட கணித வினாக்களில் உள்ள குறியீடுகளை, சூத்திரத்தின் குறியீடுகளை ஒப்பிட்டுக்கொள்வது ஒரு உத்தியாகும். அவசியமான கணித வினாக்களுக்கு மடக்கை அட்டவணை புத்தகத்துடன் தீர்ப்பதே நல்லது.

படங்களுக்கு பயிற்சி அவசியம்

வட்டம், செவ்வகம், நீள் வட்டம், அரைக்கோளம் உள்ளிட்டவற்றை உபகரணங்கள் இன்றி இப்போதிலிருந்தே வரைந்து பயில்வது தேர்வுக்குப் பெரிதும் உதவும். வெறுமனே வரைவதோடு நுணுக்கமானவற்றைச் சரியாகக் குறிப்பதற்கும் இப்பயிற்சியே கைகொடுக்கும். மின்சுற்றுகள், ஒளிப் பரிசோதனைகள் குறித்த படங்களில் மின் குறியிடுவது, அம்புகளைக் குறிப்பது போன்றவற்றில் கவனம் தேவை. படங்களைப் பக்கத்தின் மூலையில் வரையாது தாளின் மையத்தில் பென்சிலால் மட்டுமே வரைய வேண்டும்.

நேர விரயம் தவிர்க்க

ஒரு மதிப்பெண் பகுதியில், மொத்தமுள்ள 30 வினாக்களில் 16 பாட நூலின் பயிற்சி வினாக்களிலிருந்துதான் கேட்கப்படும். 2 வினாக்கள் அதே பயிற்சி வினாக்களை சற்றே மாற்றியும், 2 வினாக்கள் பெரும்பாலும் முந்தைய தேர்வு வினாக்களிலிருந்தும் கேட்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் கடினமாக இருக்கும் ஏனைய 10 வினாக்கள், பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படுகின்றன. இவ்வகையில் நூற்றுக்கு நூறு எடுக்க விரும்பும் மாணவர்களை சோதிக்கும் பகுதியாக ஒரு மதிப்பெண் வினாக்கள் அமைகின்றன.

கேள்வியைப் பலமுறை வாசித்து அதன் பொருளை உணர்ந்த பின்னரே சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மின்புலம், மின்அழுத்தம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் பிசகுவதால் தவறாக விடையளிக்க நேரிடும். பிற பகுதிகளுக்கு விரைவாக விடையளித்துவிட்டு மறு சுற்றில் விட்டுப்போன ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பொறுமையாக விடை தரலாம்.

மதிப்பெண்கள் அள்ளித்தரும் பகுதி

வினாத்தாளில் அதிகபட்சமாக 45 மதிப்பெண்களை வழங்கும் பகுதியாக 3 மதிப்பெண் வினாக்கள் அமைகின்றன. இப்பகுதியின் 20 வினாக்களிலிருந்து கேட்கப்படும் 15 வினாக்களைத் தெரிவு செய்வதில் கவனம் தேவை. 20 வினாக்களில் 5 கணித வினாக்களாக அமையும். மீதமுள்ள 15 தியரி வினாக்களில் 2 பண்புகள்-பயன்கள் குறித்தும், 1 கேள்வி 9-வது பாடத்திலிருந்து சுற்றுப்படம் வரையச் சொல்லியும் கேட்கப்படுகிறது. கணித வினாக்கள் 2, 4, 8, 9 ஆகிய பாடங்களில் இருந்தே அதிகம் கேட்கப்படுகின்றன.

பண்புகள்-பயன்கள் குறித்த வினாக்கள் பாடநூலில் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், அவற்றைச் சரியாகப் படித்து உரிய முழு மதிப்பெண்ணை பெறலாம். இப்பகுதியில் விடையளிக்கையில், அலகுகளைச் சரியாக எழுதுவது, 10-ன் அடுக்குகளை குறியுடன் குறிப்பது போன்றவற்றில் எச்சரிக்கை வேண்டும். சமன்பாடுகளை உள்ளடக்கிய விடையில் அவற்றை வெளிப்படையாக கேட்காவிட்டாலும், சமன்பாடுகளை எழுதுவதே நல்லது. ஒரு பக்கத்தில் எழுதும் விடை என்றால் அடுத்த பக்கத்துக்குச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

கட்டாய வினாவில் கவனம்

வினாத்தாளில் 5 மதிப்பெண் பகுதியில் மட்டுமே கட்டாய வினா கேட்கப்படுகிறது. 12 வினாக்களில் 7-ஐ தெரிவு செய்து எழுதலாம். இவற்றில் 3 கணித வினாக்களாகும். எந்தப் பாடத்திலிருந்தும் கேட்கப்படும் வாய்ப்புள்ள இந்த கணித வினாக்களில் ஒன்றாக கட்டாய வினா அமைந்திருக்கும். கணக்குகளில் சிரமத்தை உணர்பவர்கள், தீர்க்கப்படாத கணக்குகளைத் தவிர்த்துவிட்டு தீர்க்கப்பட்ட கணக்குகளில் முழுமையாகப் பயிற்சி பெறலாம். 2 மற்றும் 7-வது பாடங்களிலிருந்து தலா 2 ஐந்து மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். இவை தவிர்த்து எளிதில் எழுதக்கூடிய பண்பு-பயன்களைக் குறிவைத்து ஒரு கேள்வியும் கேட்கப்படும்.

படிநிலைகள் பத்திரம்

2 மற்றும் 7-வது பாடங்களிலிருந்து 10 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஏனைய 8 பாடங்களிலிருந்தும் தலா 1 கேள்வியாக அவை கேட்கப்படுகின்றன. இவற்றிலிருந்து நன்கு தெரிந்த 4 கேள்விகளுக்குப் பதில் எழுதலாம். பாடநூலின் 10 மதிப்பெண் பயிற்சி வினாக்களில் ஒருசில கேள்விகள் ஒரே மாதிரியாக இருப்பதால், அவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை உணர்ந்து தேர்வுக்குத் தயாராவது நல்லது. நேர விரயத்தைத் தவிர்க்கக் கணக்கு மற்றும் படங்கள் அடங்கிய வினாக்களுக்கு முன்னுரிமை தரலாம்.

தலைப்பு, வரைபடம், செயல்விளக்கம், முடிவு ஆகிய படிநிலைகளைக் குறிப்பிட்டுப் பதில் அமைய வேண்டும். படத்துக்கு 4 மதிப்பெண் வரை அளிக்கப்படுவதால், அதனைத் தெளிவாக வரைய வேண்டும். இப்பகுதியில் பாடக் கருத்துகளுக்கு பாதகமின்றி சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதலாம்.

(பாடக்கருத்துகளை வழங்கியவர்கள்: ஆர்.வெங்கடேசன், டி.ஏ.அன்பழகன் இருவரும் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் துறை இயக்குநர்கள், திருச்செங்கோடு)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x