Last Updated : 29 Nov, 2016 11:04 AM

 

Published : 29 Nov 2016 11:04 AM
Last Updated : 29 Nov 2016 11:04 AM

தேர்வுக்குத் தயாரா? - உயிரி-தாவரவியலில் உயர் மதிப்பெண்கள்

மருத்துவப் படிப்பை இலக்காகக் கொண்ட மாணவ மாணவியருக்கு, பிளஸ் டூ உயிரியல் பாடமே ‘கட் ஆஃப்’ மதிப்பெண்களைப் பிரதானமாகத் தீர்மானிக்கிறது. உயிரியல் பாடத்தில் விலங்கியலைவிடத் தாவரவியலில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எளிது. ஆனால், கவனக் குறைவினால், ஒன்றிரண்டு மதிப்பெண்கள் பறிபோவதும் இப்பாடத்தில் நடக்கும்.

மதிப்பெண்களை அள்ள

தாவரவியலில் மொத்தமுள்ள 6 பாடங்களில், 1,2 மற்றும் 5 ஆகிய 3 பாடங்களையோ அல்லது 1, 4 மற்றும் 5 ஆகிய 3 பாடங்களையோ மட்டுமே முழுமையாகப் படித்து 75-க்கு 69 மதிப்பெண்கள் எளிதாகப் பெறலாம். இவற்றில் 2-வது பாடமானது அளவில் பெரிது என்பதோடு 10 மதிப்பெண் வினாக்கள் அதிகம் உடையது. ஆனால், 4-வது பாடத்தில் இவை கிடையாது.

இந்த 3 பாடங்களில் இருந்தும் தலா ஒரு 10 மதிப்பெண் வினா கேட்கப்படும். 3 பாடங்களின் வரிசைக்கிரமமாக முதலிரண்டு பாடங்களில் (பாட எண்1, மற்றும் 2 அல்லது 4-வது பாடம்) தலா 1 ஐந்து மதிப்பெண் வினாவும், 3வதில் (5-வது பாடத்தில்) 2 ஐந்து மதிப்பெண் வினாக்களும் இடம் பெறும். இதுவே 3 மதிப்பெண் பகுதியில் முறையே 2, 1 மற்றும் 3 எனக் கேட்கப்படும். கூடுதல் 3 மதிப்பெண் கேள்வி ஒன்று பாட எண் 2-லிருந்து கேட்கப்படும். ஒரு மதிப்பெண் பகுதியில் இதே எண்ணிக்கை, 3, 2 மற்றும் 3 என்பதாக அமையும். இந்த வகையில் 69 மதிப்பெண்களை உறுதி செய்துவிட்டுச் சொச்ச மதிப்பெண்களுக்கு, முந்தைய தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களில் பயிற்சி பெறலாம்.

தேர்வு எழுதும்போது எச்சரிக்கை

உயிரியல் பாடத் தேர்வினைப் பொறுத்தவரை, அவசியக் குறிப்புகளைத் தெளிவாக எழுதினால் போதும். வண்ணங்களைப் பயன்படுத்துவது, அடிக்கோடிடுவது, அழகுபடுத்துவது ஆகியவை நேர விரயமே. பதில்களை எழுதப் பாடநூலில் உள்ள வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, 3 மதிப்பெண் பகுதியில் ‘தாவரங்கள் மூப்பு அடைவதைத் தாமதிக்கச் செய்யும்..’ என்பதில் ‘தடை செய்யும்..’ என்று எழுதி மதிப்பெண்ணை இழந்தவர்கள் ஏராளம். அதே போல வினாத்தாளில் இடம்பெறும் ஒவ்வொரு வினாவினையும் அதன் கடைசி வார்த்தை வரை படித்துப் புரிந்து கொண்ட பிறகே விடையளிக்க வேண்டும்.

குறிப்பிட்ட தாவரக் குடும்பத்தின் ’உணவுத் தாவரங்கள்’ என்று கேட்டிருந்தால் அத்தாவரத்தின் அறிவியல் அல்லது சாதாரணப் பெயர்களில் எதை வேண்டுமானாலும் எழுதலாம். மாறாக ‘அறிவியல் பெயர்கள்’ எனக் கேட்டிருந்தால் அவற்றை மட்டுமே எழுத வேண்டும். ஒரு மதிப்பெண் பகுதியில் ‘இரு சொல் பெயரிடும் முறையை’ அறிமுகப்படுத்தியவர்கள், பயன்படுத்தியவர்கள் ஆகியவற்றை மாற்றி எழுதினால் மதிப்பெண் போச்சு!

நூற்றுக்கு நூறு!

மருத்துவ மேற்படிப்புகள் என்றென்றும் மதிப்பு குறையாதவை. அவற்றுக்கான போட்டியில் பிளஸ் டூ உயிரியல் தேர்வு மதிப்பெண்களே அடித்தளம் என்பதால், இப்பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுப்பது மாணவர்களின் கனவாக இருக்கும். ஆனால், அதைக் கடினமாக்கும் வகையில் சுமார் 5 மதிப்பெண்கள் வரையிலான கடினமான கேள்விகள் வினாத்தாளில் இடம்பெறுவது உண்டு. அவற்றைக் கவனமாக எதிர்கொள்ள முடிந்தால், நூற்றுக்கு நூறு சாத்தியம்.

3 மற்றும் 5 மதிப்பெண் கேள்விகளில் 3 அல்லது 5 என அதே எண்ணிக்கையிலான பாடக்குறிப்புகளில் விடை எழுதும்போது கூடுதல் கவனம் வேண்டும். உதாரணமாக, ‘சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள்’ குறித்த 5 மதிப்பெண் கேள்விக்கான பதிலில் 5 பாயிண்டுகள் மட்டுமே இருக்கும்.

கட்டாய வினா

உயிரி-தாவரவியலில் 5 மதிப்பெண் பகுதியில், கேள்வி எண் 25 கட்டாய வினாவாகும். 2006 முதல் நடப்பாண்டு வரையிலான மார்ச் தேர்வுகளின் கட்டாய வினா, முதல் பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டது. அக்டோபர் தேர்வுகளில் மட்டுமே 3 மற்றும் 5வது பாடங்களில் இருந்து இரண்டொரு முறை கேட்டுள்ளனர். முதல் பாடத்திலிருந்து ‘அகில உலகத் தாவரவியல் பெயர் சூட்டும் சட்டத்தின் அம்சங்கள்’ என்ற 9 பாயிண்டுகள் அடங்கிய விடையினைப் படித்து, அவற்றில் 5 பாயிண்டுகளை எழுதி முழு மதிப்பெண் பெறலாம். இந்த ஒரு 5 மதிப்பெண் வினாவுக்குள் 4 மூன்று மதிப்பெண் வினாக்கள் அடங்கி உள்ளன. இதே பாடத்திலிருந்து ‘ஹெர்பாரியத்தின் முக்கியத்துவம்’ பற்றிய வினாவானது மெல்லக் கற்கும் மாணவரும் எளிதில் படிக்கக்கூடியது.

தவிர்க்க வேண்டிய தவறுகள்

10 மதிப்பெண் பகுதியில் வேறுபாடுகளைப் பட்டியலிடும் வினாவுக்குப் பதிலளிக்கையில், தலைப்புகளைக் கவனக்குறைவாக மாற்றி எழுதுவதால் அவ்வினாவுக்கான மொத்த மதிப்பெண் பறிபோகும். இத்தவறுகள் ‘தாவர வகைப்பாட்டியலின் நோக்கங்கள்’, ‘பரிசோதனை வகைப்பாட்டியலின் நோக்கங்கள்’ ஆகியவைக்குப் பதிலிடும்போதும், ‘ஒளி சுவாசம்-இருள் சுவாசம்’, ‘ஒளி வினை-இருள் வினை’ ஆகியவற்றை வேறுபடுத்தும்போது நடக்கிறது. இதே போன்று அக்ரோசென்ட்ரிக், டீலோசென்ட்ரிக், படங்களை மாற்றி வரைவதாலும் மதிப்பெண் இழக்கக்கூடும்.

இத்தகைய தவறுகளைத் தவிர்க்க, வார்த்தைகள் படங்கள் இடையே தொடர்ச்சியான தொடர்பை உருவாக்கி நினைவில் கொள்ளப் பயிற்சி பெறலாம். 3 மதிப்பெண் பகுதியில், உயிரி-தாவரவியலில் 7, உயிரி-விலங்கியலில் 8 ஆகிய வினாக்களை ஒன்றோடு மற்றொன்றைக் குழப்பிக்கொள்வதும் நடப்பதுண்டு.

முக்கியக் குறிப்புகள்

2 , 3வது பாடத்தில் உள்ள சிறிய வரைபடங்களில் இருந்து இரண்டு 3 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன. அதிலும் 3வது பாடத்தின் ‘குரோமோசோமின் அமைப்பு, 4 வகையான குரோமோசோம்கள், பாலீட்டீன் குரோமோசோம், விளக்கு தூரிகை குரோமோசோம், கடத்து RNA-வின் அமைப்பு’ ஆகிய 5-லிருந்து ஒரு 3 மதிப்பெண் வினா நிச்சயம்.

5-வது பாடத்தில் உள்ள சுழற்சி தொடர்பான 7 வினாக்களில் இருந்து ஒரு 10 மதிப்பெண் வினா கேட்கப்படுகிறது. 14 ஒரு மதிப்பெண் வினாக்களில் 3 வினாக்கள், எண்கள் மற்றும் வருடங்கள் தொடர்பானவை. இவை 1, 4, 5-வது பாடங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. 3-வது பாடத்திலிருந்து ஜீன், ஜீனோம் எண்ணிக்கை குறித்த கேள்வி மற்றும் 3 விகிதம் குறித்த கேள்வியிலும் கவனக் குறைவிலான மதிப்பெண் இழப்பு தொடர்கிறது. பாடப் பகுதியில் காணப்படும் ‘முக்கியத்துவம்’ வகையிலான வினாக்களில் இருந்து 5 மதிப்பெண் பகுதியில் கட்டாயமாக ஒரு வினா இடம்பெறுகிறது.

கேள்வி எண்ணை மார்ஜினுக்கு வெளியே மட்டுமே எழுத வேண்டும். குறிப்புகளுக்கான வரிசை எண்ணை, மார்ஜினுக்கு வெளியே எழுதினால் அவை வினா வரிசை எண்ணாகக் கருதப்பட்டு மதிப்பெண் இழப்பை ஏற்படுத்தும். அதே போல வினா எண்ணை மாற்றி எழுதுவது மற்றும் எழுத மறப்பதாலும் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.

3 மதிப்பெண் பகுதியில் ‘விவரி’ எனக் கேட்கப்படும் வினாவுக்குத் தேவையான பாடக் குறிப்புகளை எழுதினால் போதும். ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெறும் (5-வது பாடம்) சுழற்சிகளில் உருவாகும் NADH2, FADH2, NADPH2, ATP ஆகியவற்றில் எண்ணிக்கை கணக்கிடுவதில் கவனம் தேவை.

(பாடக் குறிப்புகளை வழங்கியவர்: கே.ராஜேந்திரன், முதுகலைத் தாவரவியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சுவாமி சிவானந்தா சாலை, ராசிபுரம்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x