Last Updated : 01 Nov, 2016 11:41 AM

 

Published : 01 Nov 2016 11:41 AM
Last Updated : 01 Nov 2016 11:41 AM

பிளஸ் டூ கணிதத் தேர்வுக்குத் தயாரா? - சொல்லி அடிக்கலாம் சதம்

பள்ளிப் பருவத்தில் நூற்றுக்கு நூறு என்றாலே கணிதப் பாடம்தான் நினைவு வரும். அந்த அளவுக்கு உழைப்புக்கு உரிய மதிப்பெண்களைக் கணிதம் பெற்றுத் தரும். அதே நேரம் கவனம் பிசகினால் கவிழ்த்துவிடுவதிலும் கணிதத்துக்கே முதலிடம். பொறியியல் உயர் கல்வியை இலக்காகக் கொண்டவர்களுக்குக் கை கொடுப்பதிலும் கணக்குப் பாடம் முக்கிய இடம் பெறுகிறது.

புரிந்து படியுங்கள்

இதர பாடங்களில் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் இருந்தாலும், மனப்பாடம் மூலம் தேர்வை ஒப்பேற்றுவது சாத்தியமாகலாம். ஆனால் கணிதத்தில் அதற்கு இடமே இல்லை. வகுப்பில் பாடத்தைக் கவனிப்பது, குறிப்பிட்ட பாடத்துக்கு அடிப்படையான பாடச் செயல்பாடுகளில் தெளிவடைவது, பயிற்சிகளை உடனுக்குடன் செய்துபார்த்துச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது ஆகியவை அவசியம். இதில் குறிப்பிட்ட கணக்கைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் தொடர்ந்தால், அது படிப்பதன் மொத்த நேரத்தையும் பாழாக்கிவிடும். எனவே ஆசிரியரிடமும் நன்றாகப் படிக்கும் நண்பர்களிடமும் அப்போதைக்கு அப்போது தெளிவு பெற்றுப் படிப்பதே நல்லது.

முயற்சியும் பயிற்சியும்!

மற்றப் பாடங்கள் போலன்றி, கணிதத்தில் படிப்பது என்பது முறைப்படி மீண்டும் மீண்டும் பயிற்சி எடுப்பதில் இருக்கிறது. அப்படி எழுதிப்பார்ப்பதிலும், துல்லியம், துரிதம், தெளிவு ஆகியவற்றில் கவனம் அவசியம். ஒரு கணக்கைப் போட்டுப் பார்க்கும்போது, தடுமாற்றம் வரும் இடங்களை மாணவர்கள் தனியாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையான தேர்வறைத் தடுமாற்றங்கள் அதே இடத்திலே மீண்டும் நிகழும். எனவே, ஒவ்வொரு மாணவரும் தனது தனித்திறமையை அடையாளம் காண்பதுபோல, கணக்கில் எங்கு தடுமாறுகிறோம் என்பதையும் அடையாளம் கண்டு அவற்றில் தீவிரப் பயிற்சி எடுக்க வேண்டும். ஏனெனில் ஒரு கணக்கில் செய்யும் பிழை, நேர விரயமும் தடுமாற்றமும் அடையச் செய்யும். இதனால் அடுத்தடுத்த கணக்குகளைத் தீர்ப்பதிலும் குழப்பம் ஏற்படலாம்.

பாடநூலே அடிப்படை

இதர பாடங்களுக்கு ‘கைடு’கள் உபயோகிக்கும் பழக்கம் பரவலாக இருக்கிறது. கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை கைடுகளைவிட, பாடநூலை அடிப்படையாகக் கொண்டு பயில்வதே சிறந்தது. தவறு ஏற்படும் இடங்கள், கடினப் பகுதி, அளவில் பெரிய வினாக்கள், மாற்றுத் தீர்வு முறைகள், முக்கிய வினாக்கள் ஆகியவற்றை நுணுக்கமாக அணுகப் பாட நூலே அடிப்படையாகும். இந்த அடிப்படையில் தனக்கான பிரத்யேகக் குறிப்புகள் அடங்கிய தனித்துவக் குறிப்பேட்டை மாணவர்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.

அல்லது கணித நோட்டிலேயே ஆசிரியர் வழிகாட்டுதலில் இவற்றையும் குறித்துவரலாம். இந்தக் குறிப்புகள் தனியொரு மாணவரின் புரிதல், பாடத்தின் எளிதான/கடினமான பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு திருப்புதல் தேர்வுக்குப் பின்னரும் இதில் அவசியக் குறிப்புகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.

பெரும்பாலான மாணவர்கள் கடந்த 5 வருடங்களின் வினாத்தாள்களை மட்டுமே அடிப்படையாக வைத்துத் திருப்புதலைச் செய்வார்கள். அதிக மதிப்பெண்களை இலக்காகக் கொண்டவர்கள், இந்த வகையிலான திருப்புதலோடு பாடநூலை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துப் பயிற்சிகளையும் செய்து பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு ஜூன் 2016 பொதுத்தேர்வு வினாத்தாளின் 6 மதிப்பெண் பகுதியில், முந்தைய வினாத்தாள்களில் இருந்து 7 வினாக்கள் கேட்கப்பட்டாலும், இதுவரை கேட்கப்படாத 9 வினாக்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நேர மேலாண்மையிலும் பயிற்சி

கணிதப் பாடத்தைப் பொறுத்தவரை சகல மாணவர்களும் நேர மேலாண்மையில் சிரமத்தை உணர்கிறார்கள். போதிய பயிற்சியின்மையே இதற்குக் காரணம். ‘புளூ பிரிண்ட்’ அடிப்படையில், வினாத்தாளின் கேள்வி ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கும் நிமிடங்கள், சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் நிமிடங்களை ஒதுக்கிப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

தேர்வுகளுக்கு மட்டுமன்றி அன்றாடம் படிப்பதில் தொடங்கி இந்த நேர மேலாண்மையைக் கடைபிடிப்பது அவசியம். அமைதியான சூழலை அமரும் இடத்திலும், மனதிலும் ஒதுக்கிக்கொள்வது, தேவையான பொருட்களை அருகிலே வைத்துக்கொள்வது, கவனம் சிதறாது சேர்ந்தாற்போல 5 அல்லது 6 கணக்குகளில் விரைவாகப் பயிற்சி பெறுவது போன்றவை நேர மேலாண்மைத் தேர்ச்சிக்கு உதவும்.

திருப்புதல் திருத்தம் தரும்

கணிதத்தில் படிப்பதற்கு ஒதுக்கும் நேரம் என்பதில் திருப்புதலுக்கே அதிகம் தேவைப்படும். இத்தகைய பயிற்சிகளின்போது அவசியமானவை:

# 3 மணி நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துப் பழகுதல்.

# ஒவ்வொரு வினாவுக்கும் முழு மதிப்பெண் பெறுமளவுக்கு நேர்த்தியாக விடை தர முயற்சிப்பது.

# பிழையின்றியும், அடித்தல் திருத்தல்கள் இன்றியும் விடைகளை எழுதுவது.

# கணித அடிப்படைக் குறிகள் மற்றும் அடைப்புக் குறிகள் இடுவதில் தெளிவு.

# படி நிலைகளுக்கான மதிப்பெண்களை உணர்ந்து விடையை எடுத்து எழுதுவது.

# எழுதுவதற்குப் பேனாவையும், படம் வரைவதற்குப் பென்சிலையும் பயன்படுத்துவதோடு, தேவையற்ற வண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது.

# 1 மதிப்பெண், 3 மதிப்பெண், 6 மற்றும் 10 மதிப்பெண் பகுதிகள் வாரியாகக் குறுந்தேர்வுகளாகத் திருப்புதல் பழகிய பிறகு, முழுமையான திருப்புதல் தேர்வுகளில் இறங்கலாம்.



வெற்றிக்கு வழிகாட்டும் பெட்டகம்

கடந்த ஆண்டு சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆனதில், பொதுத்தேர்வுக்குத் தயாரான மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அவர்களுக்குக் கைகொடுப்பதற்காக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆசிரிய வல்லுநர்களைக் கொண்டு ‘கற்றல் பெட்டகம்’ என்ற பிரத்யேகக் கையேடுகள் வழங்கப்பட்டன.

வெள்ளத்தால் பள்ளி செல்ல முடியாமலும், பாட நூல்களைப் பறிகொடுத்தும் தவித்த மாணவர்களுக்கு, இந்தக் ‘கற்றல் பெட்டகம்’ கையேடுகள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற உதவின. தொடர்ந்து இவை மேம்படுத்தப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்டன. இவை கல்வித் துறை வாயிலாகப் பள்ளிகளுக்கு சி.டி.யாக வழங்கப்பட்டுள்ளன. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (http://www.tnscert.org/) இணையதளத்திலிருந்தும் நேரடியாக இவற்றைப் பதிவிறக்கம் செய்து, பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பயன் பெறலாம்.

இதே போன்று தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், மதிப்பெண் வாரியாக வினாக்கள் பகுப்பு, விடைத்தாள் மதிப்பீட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுடன் மாதிரி வினாத்தாள்களையும் உள்ளடக்கிய கையேடு வெளியிடப்படுகிறது. இதனைச் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தில் அமைந்துள்ள பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். பள்ளி வாயிலாகவும் வேண்டிய பிரதிகளை மொத்தமாக மாணவர்கள் பெற முடியும். மேலும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாட வாரியாகப் பயிற்சி வினாக்களைத் தொகுத்து வெளியிடும் ‘தீர்வு புத்தகமும்’ மாணவர்களுக்குத் தேர்வு நோக்கில் பயனளிக்கக்கூடியது.



(இக்கட்டுரைக்கான குறிப்புகளை வழங்கியவர்: எம்.எஸ்.இக்னேசியஸ் பாபு, முதுநிலை கணித ஆசிரியர், தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x