

அமெரிக்கப் பாடகர் பரேல் வில்லியம்ஸின் ‘ஹேப்பி’இசை வீடியோ பாடல் கடந்த ஆண்டு நவம்பர் 21-ல் வெளியானது. அன்றிலிருந்தே அப்பாடலைப் பார்க்கும் அனைவரையும் அது சந்தோஷத் தெப்பத்தில் இட்டுத் தாலாட்டுகிறது. உலக மக்களில் பெரும்பாலானோர் ஹேப்பியை முணுமுணுத்தபடியே திரிகிறார்கள். இந்தியாவில் உள்ள பல நகரங்களில் காற்றோடு காற்றாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த ஹேப்பி பாடல் இப்போது கோயம்புத்தூரைத் தஞ்சமடைந்துள்ளது.
சென்னை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களின் ஹேப்பி இசை வீடியோக்கள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரவி, பலத்த வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில், கோயம்புத்தூரையும் இணைத்திருக்கிறார் அருண் சிவக்குமார். “என் நண்பர் சுரேஷ்தான் ‘கோயம்புத்தூர் இஸ் ஹேப்பி’ இசை வீடியோவைத் தயாரிப்பதற்கு யோசனை சொன்னார். சொந்த ஊர் என்ற காரணத்தால் மட்டுமே கோயம்புத்தூரைத் தேர்ந்தெடுக்கவில்லை, கோயம்புத்தூரின் விருந்தோம்பலும், இயற்கை வளமும் பதிவுசெய்யப்பட வேண்டியது என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. அந்த
மக்களின் மகிழ்ச்சியை படமாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப திருப்தியா உணர்றேன்” என்று ஹேப்பியாகச் சொல்கிறார் இயக்குநர் அருண்.
யூ ட்யூபில் வெளியான ஆறே நாட்களில் 10,000த்திற்கும் மேற்பட்ட ஹிட் இதற்குக் கிடைத்திருக்கிறது. இந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எனப் பலரும் பரேல் வில்லியம்ஸின் ஹேப்பி பாடலுக்கு நடனமாடுகிறார்கள். ரேஸ் கோர்ஸ், வேளாண் பல்கலைக்கழகம், நீலாம்பூர் டெகாத்லான், வ.உ.சி. பூங்கா, ஆர்.எஸ். புரம், மருதமலை, விமான நிலையம் எனக் கோயம்புத்தூரின் அடையாளங்களாக இருக்கும் பெரும்பாலான இடங்களில் இப்பாடலைப் படமாக்கி இருக்கிறார்கள்.
இப்பாடலில் இடம்பெறும் காட்சிகளில் பெரும்பாலானவை படப்பிடிப்பு இடத்திலேயே முடிவு செய்து எடுக்கப்பட்டிருக்கின்றன.
மகிழ்ச்சியை இயல்பாகப் பதிவுசெய்ய பல கேன்டிட் ஷாட்கள் உதவியிருக்கின்றன. இந்தியாவின் மற்ற நகரங் களின் வீடியோக்களில் இருக்கும் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் தொனியில் இருந்து ஓரளவிற்கு மாறுபட்டு எடுத்திருப்பது சிறப்பம்சம். படத்தொகுப்பில் இருக்கும் புதுமையும் ‘கோயம்புத்தூர் இஸ் ஹேப்பி’ வீடியோவிற்கு வலு சேர்த்திருக்கிறது.
“மகிழ்ச்சியாக இருப்பதற்கு எந்தத் தடையும் கிடையாது. மக்களின் மகிழ்ச்சியைப் பதிவுசெய்வதும்கூட ஒருவிதமான மகிழ்ச்சிதான்” என்கிறார் அருண்.
சொல்லி வைத்தாற்போல், இந்தியாவில் எல்லா ஹேப்பி வீடியோக்களிலும் இளைஞர்கள் மட்டுமே நடனமாடி இருக்கிறார்கள். ஆனால் பரேல் வில்லியம்ஸின் அசல் ஹேப்பி வீடியோவில் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியாக இருப்பது அழகாகப் பதிவாகி இருக்கும். நம் நாட்டில் இளைஞர்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் போலும்.
ஒருவகையில் அதிலும் உண்மை இருக்கவே செய்கிறது.