

இந்தியாவில் இப்போது 13 ஆயிரத்துக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன, தமிழகத்தில் மட்டும் 550 பொறியியல் கல்லூரிகள். பற்றிப் பேசும்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவைப் (All India Council for Technical Education - AICTE) பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. எனவே இந்த வாரம் AICTE:
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பல பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்வகையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வசதிகளை ஒருங்கிணைக்க ஓர் அமைப்பு தேவைப்பட்டது. இதன்படி ஆலோசனை கூறும் அமைப்பாக 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்டதே ஏ.ஐ.சி.டி.இ. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்க் கல்வித் துறையில் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது.
இதன்படி இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டுமானக்கலை, நகரமைப்பு, விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பம், பயன்பாட்டுக் கலை மற்றும் தொழில், கணிப்பொறி பயன்பாடு குறித்த தொழிற்கல்விப் பாடங்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்பாக அது இயங்கிவருகிறது.
1986-ம் ஆண்டில் இந்தியாவில் தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதன் பிறகு இந்த அமைப்பு
தனி அதிகாரமுடைய அமைப்பாக மாற்றப்பட்டது. பொறியியல் கல்வியைத் திட்டமிடல், தரத்தை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், தரத்தை நிர்ணயித்தல், நிதியுதவி அளித்தல், கண்காணித்தல் மற்றும் சரிபார்த்தல் போன்ற பல பணிகள் இந்த அமைப்பிடம் விடப்பட்டன. ஒட்டுமொத்தமாகத் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சி மற்றும் மேலாண்மையை ஒருங்கிணைக்கும் பணியை இந்த அமைப்பு ஏற்றது.
இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இதுதவிர மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், வடமேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென்மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம் என ஆறு மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தெற்கு மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்த மண்டலத்தில் தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவராக டாக்டர் எஸ்.எஸ். மந்தா செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் ஒன்பது குழுக்கள் தனித்தனியே செயல்படுகின்றன. இந்த அமைப்புக்கென
http://www.aicte-india.org என்ற இணையதளம் உள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட புதிய கல்லூரிகள், அவற்றின் முழு விவரங்கள் ஆகியவற்றை இந்த இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். அங்கீகாரம் பெற்ற
பாலிடெக்னிக் கல்லூரிகளின் பட்டியலையும் இணைய தளத்தில் பார்க்கலாம். கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் பட்டியலைக் கூட இணையத்தில் வெளியிட் டுள்ளார்கள். பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த இணையதளத்தை ஒருமுறை பார்ப்பது நல்லது.
பொறியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவுக்கு இல்லை என்று கடந்த ஆண்டு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த அதிகாரம் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யு.ஜி.சி.) வழங்கப்பட்டுள்ளது.