

உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான் எனச் சிலரை நாம் கடிந்துகொள்வோம். ஆனால் சிலருக்கு விளையாட்டுகூடத் தீவிரமான விஷயம்தான். விளையாட்டு என்ற உடன் பாரம்பரிய விளையாட்டோ கால்பந்து, ஓட்டம் போன்ற விளையாட்டோ என்று நினைத்துவிடாதீர்கள். இது நவீன விளையாட்டு. ஆம், வீடியோ கேம்தான். அமெரிக்காவில் ஒருவர் 1982-ம் வருடத்திலிருந்தே வீடியோ கேம்களைச் சேகரித்துவந்துள்ளார். வங்கியில் பணம் போட்டுவைப்பது போல் வெகு கவனமாக அவர் வீடியோ கேம்களைத் தொடர்ந்து பாதுகாத்துவந்துள்ளார். இது என்ன வேலை வெட்டி இல்லாத வேலை எனத் தோன்றும். ஆனால், அதுதான் இல்லை. இன்று அவர் கின்னஸ் சாதனை படைத்துவிட்டார். அவரது சேககரிப்பு காரணமாக உலகச் செய்திகளில் அவர் வலம்வருகிறார்.
அவர் நியூயார்க் நகரத்தில் வசித்து வரும் மைக்கேல் தாம்ஸன். அவரிடம் மொத்தம் 11 ஆயிரம் வீடியோ கேம்கள் உள்ளன. குடும்பச் சூழ்நிலை காரணமாக தன்னிடம் உள்ள அனைத்து கேம்களையும் ஏலம் விட்டுவிட்டார். இதன் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் தொகை 75 ஆயிரம் அமெரிக்க டாலர்; கிட்டத்தட்ட 4 கோடியே 51 லட்சம் ரூபாய். உலகத்திலேயே அதிக வீடியோ கேம்களை மைக்கேல் தாம்ஸன் வைத்திருந்ததாக கின்னஸ் சாதனைப் புத்தகம் தெரிவித்துள்ளது.