

ஒருவர் தனது அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால், அந்தத் தகவல்களைப் பணம் உள்ளவர் மட்டுமே பெற முடியும் என்ற சூழல் நிலவக் கூடாது, அது அனைவருக்கும் கிடைக்கும்படியாகப் பொது வெளியில் இருக்க வேண்டும். இதைச் சாத்தியப்படுத்துவதுதான் ஓபன் ஆக்சஸ் நெட்வொர்க்.
ஓபன் ஆக்சஸ் நெட்வொர்க் இயக்கமானது, 1990களில் இருந்தே செயல்பட்டு வருகிறது. சீரியல் க்ரைசிஸ் என்ற பிரச்சினை உருவானபோதுதான் இது மேலும் உந்துதல் பெற்று வலுவடைந்தது.
சீரியல் க்ரைசிஸ் பிரச்சினை
அறிவியல் ஆராய்ச்சியாளர் கள் தங்களது படைப்புகளை சில புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டால் மட்டுமே அவர்களது கண்டுபிடிப்பைத் தரமானதாக உலக அறிவியல் சமூகம் மதிக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நமது திருப்பூரிலிருந்து உற்பத்தியானாலும், க்ரோகடைல், நைக், ரீபாக் உள்ளிட்ட பிராண்டுகளின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிறகு, அது மிகவும் விலை உயர்ந்ததாக விற்கப்படுகிறது. அதே போன்ற ஒரு ‘பிராண்டிங்’ பதிப்பாளர் துறையில் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் இதழ் பதிப்பாளர்கள் ஒரு பத்திரிகைப் பிரதியை 20 ஆயிரம் டாலர், முதல் 30 ஆயிரம் டாலர் வரை விற்கின்றனர். இதுதான் சீரியல் க்ரைசிஸ் எனப்பட்டது. இது 1990களிலேயே ஆரம்பமானது. (சீரியல்- குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் பத்திரிகை. க்ரைசிஸ்-பிரச்சினை)
சாதாரண தனிநபர் அறிவியலாளரும் சரி, ஆராய்ச்சி நிறுவனங்களும் சரி, அதிக விலை கொடுத்து, இதழைப் பெறுவது இயலாத காரியம். இதழ் பதிப்பாளர்கள் தங்களது பிராண்டுகளைப் பயன்படுத்தி, அதிகக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தபோது, ஆராய்ச்சி நூலகங்களின் சங்க (அமெரிக்க, கனட ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்கான சங்கம்- அசோசியேஷன் ஆப் ரிசர்ச் லைப்ரரீஸ்) உறுப்பினர்கள் 600 முதல் 700 பேர் வரை பதிப்பாளர்களை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கினர். அறிவியல் கண்டுபிடிப்பானது ஒரு சில மேல் தட்டுச் சமூகத்தினரிடமே முடங்கி போகக்கூடிய அபாயம் ஏற்படக் கூடாது என்று முழங்கினர். இதுதான் ஓபன் ஆக்சஸ் இயக்கமாக உருவெடுத்தது. இது மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
இது பற்றி மூத்த அறிவியலாளர் சுப்பையா அருணாசலம் கூறுகையில், “அறிவியலாளர் தனது படைப்பைத் தன்னிடமே, அல்லது அவர் வேலை பார்க்கும் நிறுவனமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது வருந்தத்தக்கதுதான், ஆனால், அதைத் தடுக்க முடியாது. ஆனால், ஒரு அறிவியலாளர் தனது கண்டுபிடிப்புகளை உலக அறிவியலாளர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் அங்கீகாரத்தையும், கருத்துகளையும் பெற வேண்டும் என்று நினைத்தால், அது எல்லோருக்கும் கிடைப்பதுதானே நியாயம். மேலும், இதழ் பதிப்பாளர்களின் வேலைக்கேற்ற கட்டணத்தைத் தர வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்து, வடிவமைக்கும் வேலையை மட்டும் செய்யும் அவர்கள் அநியாய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும்போது எதிர்ப்பு வலுக்கிறது. இந்த இயக்கத்தில் முன்னணி பதிப்பாளரான எல்செவியரைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரத்தை நடத்திய திமோதி க்ரோவர்ஸ் முக்கியமானவர்” என்கிறார்.
ஓபன் ஆக்சஸ் நெட்வொர்கை இந்தியாவில் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்து மதன் என்பவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை எலக்ட்ரானிக் பப்ளிஷங் டிரஸ்ட் என்ற அமைப்பு, முத்து மதனுக்கும் கென்யா நாட்டைச் சேர்ந்த ரோஸ்மேரி ஒடண்டோ என்பவருக்கும் இந்த ஆண்டு வழங்கியுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த முத்து மதன், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓபன் ஆக்சஸ் நெட்வொர்கை முன்னெடுத்துச் செல்லப் பங்காற்றி வருகிறார். ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து வெளியாகும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை, அனைவருக்கும் கிடைக்கும்படியாக இணையத்தில் வெளியிடுவதற்கான தகவல் கிடங்கை (ரிபாசிட்டரி) உருவாக்கித் தருகிறார். இந்தியாவில் ஐ.ஐ.டி. ரூர்கேலா, வேளாண் ஆராய்ச்சி நிறுவனமான ஹைதராபாத்தில் உள்ள இக்ரிசாட் உள்ளிட்ட பத்து நிறுவனங்களில் இந்தத் தகவல் கிடங்கை ஏற்படுத்தி, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.
“ஓபன் ஆக்சஸ் நெட்வொர்க் இல்லையென்றால், இந்தியாவில் இருக்கும் அறிவியல் சமூகத்துக்கும், வெளி உலகுக்கும் தொடர்பே இல்லாமல் போய்விடும். முக்கியமாக மருத்துவம் மற்றும் வேளாண் துறையில், இது பெரும் உதவியாக இருக்கும். தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேச அளவில் எந்த விதமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? ஒருவர் ஏற்கெனவே ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்திருந்தால், அதிலிருந்து நமது ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்வதுதானே சரியாக இருக்கும். அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களிலும், இது போன்ற தகவல் கிடங்கை ஏற்படுத்துவதை அரசு கட்டாயமாக்குவது ஓபன் ஆக்சஸ் நெட்வொர்கைப் பிரபலப்படுத்த சிறந்த வழியாக இருக்க முடியும். அப்போதுதான், இந்தியாவில் என்ன நடக்கிறது என்று உலகம் அறிந்து, அதைப் பற்றி விமர்சனங்களும், கருத்துகளும் வரும். அது நமது ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்தும். அமெரிக்காவில் இதைக் கட்டாயமாக்கும் சட்டம் விரைவில் அமலாக இருக்கிறது” என்கிறார் முத்து மதன்.