விஞ்ஞானியாக விருப்பமா?

விஞ்ஞானியாக விருப்பமா?
Updated on
1 min read

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research-CSIR) ஆய்வகங்களில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுப் பணிகள் இரவு பகலாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் சர்வதேசத் தரத்திலான ஆராய்ச்சியாளர்களையும், நிபுணர்களையும் உருவாக்கும் நோக்கில் சிஎஸ்ஐஆர்-ன் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்டது அறிவியல் மற்றும் புதுமை ஆராய்ச்சிக் கழகம் (Academy of Scientific and Innovative Rearch-ACSIR). இதன் தலைமையகம் சென்னை தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்தில் செயல்படுகிறது. ஏசிஎஸ்ஐஆர், மத்திய அரசாங்கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனம் ஒருங்கிணைந்த எம்.டெக். படிப்புடன் கூடிய பி.எச்டி. படிப்பை வழங்குகிறது. படிப்புக் காலம் மொத்தம் 5 ஆண்டுகள்.

ஆட்டோ தொழில்நுட்பம், எலெக்டரானிக்ஸ் சிஸ்டம், மெட்டீரியல் இன்ஜினியரிங், டிரான்ஸ்போர்ட்டேஷன், பெட்ரோலியத் தொழில்நுட்பம், எலெக்ட்ரோ கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் உள்படப் பல்வேறு விதமான பொறியியல் பாடப்பிரிவுகளில் 150 இடங்கள் உள்ளன. இதில், பி.இ., பி.டெக். பட்டதாரிகள் சேரலாம். குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் அவசியம். வயது 28-க்குள் இருக்க வேண்டும். அதோடு சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித் தேர்வில் அல்லது ‘கேட்’ தேர்ச்சிபெற்று ஜெ.ஆர்.எப். உதவித்தொகை பெற தகுதி பெற்றிருக்க வேண்டும்.

படிப்பு காலத்தில் ஜெஆர்எப், எஸ்ஆர்எப் உதவித்தொகைகளுடன் பல்வேறு பெல்லோஷிப்புகளும் பெறலாம். 2 ஆண்டுகளில் எம்.டெக். படித்து முடித்ததும் அதில் சிறந்த 28 பேர் தேர்வுசெய்யப்பட்டு சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் பயிற்சி விஞ்ஞானி (Trainee Scientist) பணியில் அமர்த்தப்படுவார்கள். இன்றைய நிலையில் மாதச் சம்பளம் ரூ.70 ஆயிரத்தை நெருங்கிவிடும். 7-வது ஊதியக் குழுவுக்குப் பிறகு ஊதியம் எங்கேயோ சென்றுவிடும். எம்.டெக். முடித்து மற்ற பட்டதாரிகளைப் போல பி.எச்டி. படிப்பையும் தொடரலாம். விஞ்ஞானி பதவிக்கு எம்.டெக். பட்டதாரிகளைத் தேர்வுசெய்யும்போது மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் கல்வி ஆண்டில் (2014-2015) ஒருங்கிணைந்த எம்.டெக்.-பி.எச்டி. படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை ஏசிஎஸ்ஐஆர் கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். தகுதியுடைய பொறியியல் பட்டதாரிகள் ஏசிஎஸ்ஐஆர் இணையதளத்தில் (www.acsir.res.in) மே 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மெரிட் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். இந்தப் பட்டியல் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு ஜூன் 26, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும். நேர்காணல் முடிவு ஜூலை 16-ல் வெளியிடப்பட்டு அட்மிஷன் ஆகஸ்ட் 11, 12-ம் தேதிகளில் நடைபெறும்.

ஏசிஎஸ்ஐஆர் உயர்கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் மூத்த விஞ்ஞானிகளுடன் எம்.டெக், பி.எச்டி. பட்டதாரிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in