போட்டித் தேர்வு: பட்ஜெட் என்றால் என்ன?

போட்டித் தேர்வு: பட்ஜெட் என்றால் என்ன?
Updated on
2 min read

தொகுப்பு: முகமது ஹுசைன்

மத்திய பட்ஜெட் என்பது ஒரு நிதியாண்டுக்கான வரவுசெலவு களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலைக் கொண்டது. வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்க வரி, சரக்கு வரி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயே அரசின் முதன்மை வருமானம்.

கல்வி, சுகாதாரம், நலத்திட்டங்கள் போன்றவற்றுக்கு அரசு நிதியளிக்கிறது. மேலும், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதங்களும் வெடிமருந்துகளும் வாங்குதல், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் - ஓய்வூதியம் போன்றவற்றுக்கும் அரசு நிதியளிக்கிறது.
மக்கள் நலனுக்காகப் பணத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்பதை அமைச்சகங்களும் துறைகளும் திட்டமிடு வதற்கு மத்திய பட்ஜெட் உதவுகிறது. மேலும், உண்மையான செலவு, வளர்ச்சி, பொருளாதாரக் குறியீடுகளையும் அது கண்காணிக்கிறது.

பட்ஜெட்டும் அரசியலமைப்பும்

இந்திய அரசிய லமைப்பின் 112-வது பிரிவு இந்தியாவின் மத்திய பட்ஜெட்டை ‘இந்தியக் குடியரசின் வருடாந்திர நிதி அறிக்கை’ என்று குறிப்பிடுகிறது. இந்திய அரசியலமைப் பின் 112-வது பிரிவின்படி, ஒவ்வொரு நிதியாண்டுக்குமான அரசின் வருமானம், செலவு, திட்டமிடலை உள்ளடக்கிய நிதி அறிக்கையை, நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்.

நிதியாண்டு

1867-க்கு முன்னர் இந்திய நிதியாண்டு மே 1 -ல் தொடங்கி ஏப்ரல் 30-ல் முடிவடைந்தது. தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய நிதியாண்டு, பிரிட்டிஷ் அரசின் நிதியாண்டுடன் இணைந்ததாக இருக்குமாறு 1867-ல் மாற்றி யமைக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவின் நிதியாண்டு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1-ல் தொடங்கி மார்ச் 31-ல் முடிவடைகிறது.

குடியரசுத் தலைவரின் பங்கு

பட்ஜெட் தாக்கல்செய்யும் நாளை முடிவுசெய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருடையது. பட்ஜெட் நாளில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்குமுன், குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் சந்திப்பது ஒரு சம்பிரதாயம்.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் உரையை நிதியமைச்சர் இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.
i) பொருளாதார ஆய்வு
ii) புதிய வரித் திட்டங்களின் அறிமுகம், புதிய திட்டங்களை அறிவித்தல்.
பொருளாதார ஆய்வு முறை 1951-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய வரவு -செலவுத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறையாகப் பொருளாதார ஆய்வு முறை அமைகிறது. பொருளாதார ஆய்வை நிறைவேற்றும் பொறுப்பு, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையைச் சார்ந்தது. பொருளாதார ஆய்வுக்குத் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் நிதியமைச்சரும் ஒப்புதல் அளிப்பார்கள்.

பொருளாதார ஆய்வைக் கல்லூரி மதிப்பெண் அறிக்கையுடன் (progress report) ஒப்பிடலாம். அரசின் கடந்த ஆண்டு பொருளாதாரச் செயல்பாட்டை அளவிடும் மதிப்பீட்டு அறிக்கையாக இந்த ஆய்வு விளங்குகிறது. அதன் விரிவான புள்ளிவிவரத் தரவுகள் பொருளாதாரக் குறியீடுகளையும் சமூகக் குறியீடுகளையும் கோடிட்டுக் காட்டுகின்றன.
i) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், வெளி நாட்டு வர்த்தகம், வேளாண் உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி போன்ற பொருளா தாரத்தின் அனைத்து அம்சங்களையும் பொருளாதாரக் குறியீடுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
ii) மக்கள்தொகை, பாலினம், கல்வி, சுகாதாரம், கைபேசிப் பரவல், குடும்பங் களின் செலவினம், குடும்பங்களின் சேமிப்பு ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்களைச் சமூகக் குறியீடுகள் வழங்குகின்றன.

(இப்போது விற்பனையாகிவரும் ‘இந்து தமிழ் பொது அறிவு 2019’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரையின்  சுருக்கமான வடிவம். போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள், திருப்புதல் செய்துவருபவர்களுக்கு உதவும் இதுபோன்ற பல கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in