Published : 26 May 2014 03:01 PM
Last Updated : 26 May 2014 03:01 PM

வகை வகையான மருத்துவப் படிப்புகள்

மருத்துவம் மற்றும் அதன் தொடர்புடைய படிப்புகள் 3 முதல் அதிகபட்சம் 5½ ஆண்டுகளாகக் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றில் முக்கியமான படிப்பான எம்.பி.பி.எஸ். படிப்பின் கால அளவு 5½ ஆண்டுகள். பி.டி.எஸ். என்னும் பல் மருத்துவப் படிப்பு 5 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பி.யு.எம்.எஸ். (யுனானி மருத்துவப் படிப்பு), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேத மருத்துவப் படிப்பு), பி.என்.ஒய்.எஸ். (இயற்கை மற்றும் யோக மருத்துவப் படிப்பு), பி.எம்.ஆர்.எஸ். (மருத்துவப் பதிவேடு தொடர்பான படிப்பு) ஆகிய அனைத்தும் 5½ ஆண்டுகளில் - ஓராண்டு பயிற்சி உட்பட- கற்றுத் தரப்படுகின்றன.

பி.பார்ம். (மருந்தியல் பட்டப் படிப்பு), பிபிடி (உடல் இயக்கியல் பட்டப் படிப்பு), பிஓடி (வேலை தொடர்பு உடல் இயங்கியல் படிப்பு) ஆகியவை மொத்தம் 4 ½ ஆண்டுகள் ஆறுமாதப் பயிற்சியுடன் வழங்கப்படுகின்றன. இவை தவிர பி.எஸ்சி நர்சிங், உணவியல் பேச்சுப் பயிற்சி மற்றும் கேட்கும் திறன் ஆகிய பட்டப் படிப்புகளும் 3 முதல் 4 ஆண்டுகள் கற்கலாம். மேலும் பி.எஸ்சி பயோகெமிஸ்டிரி பி.எஸ்சி மைக்ரோபயோலஜி போன்ற மருத்துவம் தொடர்புடைய பட்டப் படிப்புகளும் அறிவியல் பாடப் பிரிவு எடுத்த +2 மாணவர்கள் படிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

மருத்துவப் பட்டயப் படிப்புகள்

மருத்துவ டிப்ளமோ படிப்பில் முக்கியமானது நர்சிங் டிப்ளமோ பட்டயப் படிப்பாகும். இந்தப் படிப்பு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாகும். இந்த வகைக் கல்வியில் அதிக அளவில் +2 அறிவியல் மற்றும் வொக்கேசனல் நர்சிங் பாடத்தில் தேர்வு பெற்ற பெண்கள் சேர வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றைத் தவிர டிப்ளமோ மருந்தியல் ரத்தப் பரிசோதனை, நுண்கதிர் உதவியாளர், எக்ஸ்ரே, ஈசிஜி, மருத்துவமனை மேலாண்மை, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், உணவியல், வார்டு மேலாண்மை, பொது சுகாதார மேற்பார்வை, சுகாதாரக் கல்வி, சுகாதார மனோதத்துவம், குழந்தைகள் மனோநிலை போன்ற டிப்ளமோ பாடப் பிரிவுகளில் +2 அறிவியல் பாடங்களைப் படித்த மாணவர்கள் பயில வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலான மருத்துவப் பட்டயப் படிப்புகள் குறைந்தது ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

மருத்துவச் சான்றிதழ் படிப்புகள்

மருத்துவத் தொடர்புடைய துறைகளில் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை பயிலக் கூடிய சான்றிதழ் படிப்புகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஏஎன்எம், எம்என்ஏ, எப்என்ஏ போன்ற தாதியர், செவிலியர் உதவியாளர் படிப்புகள், இசிஜி இதய பரிசோதனை உதவியாளர், தீவிர சிகிச்சை உதவியாளர், மயக்கமருந்து உதவியாளர், எலும்பு சிகிச்சை உதவியாளர், கண் சிகிச்சை உதவியாளர், ரத்த சுத்திகரிப்பு உதவியாளர், அறுவை சிகிச்சை உதவியாளர் என மருத்துவத் துறையில் உள்ள அனைத்துப் பிரிவுகளில் உதவி செய்ய உதவும் சான்றிதழ் படிப்புகள் இருக்கின்றன. இவை குறைந்த செலவில் குறுகிய கால அளவில் பயின்று பயன் பெறக்கூடிய படிப்புகள்.

வேலை வாய்ப்பு

மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்புடைய படிப்பு முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிறைந்த சம்பளத்துடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் மருத்துவப் படிப்புகளில் தனியாகவே தொழில் செய்து சம்பாதிக்கவும் பரிசோதனைக் கூடங்கள் வைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்டுரையாளர் திருச்சி அரசு மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறை நிபுணர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x