

நம்முடைய உடல் நம்மிடம் பேசுமா? பேசாது என்றுதான் நம்புகிறோம். அதேநேரம் இரண்டு வேளை சாப்பிடாமல் படித்துக்கொண்டோ, வேலை பார்த்துக்கொண்டோ இருக்கிறீர்கள். அப்போது நாம் செயல்படுவதற்குத் தேவையான சக்தியையும், உடலுக்குத் தேவையான ஊட்டத்தையும் உணவிலிருந்து பிரித்து வழங்கும் வயிறு நிச்சயம் சும்மா இருக்காது. "கியான் கியான்" என்று சத்தம் கொடுத்துப் பசியை அறிவிக்கும்.
பசிக்குதே பசிக்குதே
பசிக்கும்போது நம்முடைய வயிறு ஏன் இப்படிக் கத்துகிறது? நம்முடைய இரைப்பையும் குடலும் சுருங்குவதால்தான் இந்தச் சத்தம் எழுகிறது. இரைப்பையும் குடலும் செரிமானத்தின்போது சுருங்குவது இயல்பான ஒன்றுதான். நம்முடைய இரைப்பைக்கு உணவு வந்துசேர்ந்தவுடன், அத்துடன் செரிமானத்துக்குத் தேவையான பல வேதிப் பொருட்களைக் கொண்ட இரைப்பை நீரைக் கலப்பதற்காக, உணவை இரைப்பை இறுக்கி அழுத்துகிறது.
உணவு அடுத்தடுத்த நிலைக்கு நகர்வதற்காக, பெருங்குடலும் உணவை நெருக்கித் தள்ளுகிறது. உணவு செரிமானம் அடைவதற்காக இப்படி இறுக்குவதும் நெருக்குவதும் நிகழும்போது, இரைப்பை-குடலுக்குள் உணவு இருப்பதால் நமக்குப் பெரிதாக எந்தச் சத்தமும் கேட்பதில்லை.
அதேநேரம் ஒரு விஷயம் காலியாக இருந்தால், சத்தம் எழுவது இயல்புதானே. வயிற்றில் உணவு ஏதும் இல்லாமல் இருக்கும்போது, இறுக்கமும் நெருக்கித் தள்ளுவதும் நடக்கும்போது சத்தம் வெளியே கேட்கிறது. ஏனென்றால், அப்போது வயிற்றுக்குள் காற்று மட்டுமே இருக்கும். அது முன்னும் பின்னும் பயணிக்கும்போது, காலியான பகுதியில் எதிரொலியை உருவாக்குகிறது. இதற்கான அறிவியல் சொல் borborygmus.
எஞ்சிய உணவு
இது மட்டுமல்லாமல் தொடர்ச்சியான, அலை அலையான சுருங்கும் செயல்பாடும் வயிற்றில் நடக்கிறது. நாம் உணவு உண்ட ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள் இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு இந்தச் சுருங்கும் அலை பயணிக்கிறது. இதற்கு migrating myoelectric complex என்று பெயர். இது தொடர்ச்சியாக இடம்பெயரும் மின்அதிர்வுதான்.
இந்தச் செயல்பாடு நடப்பதற்கும் காரணம் இருக்கிறது. இரைப்பையில் செரிக்கப்படாமல் இருக்கும் எலும்பு, கொட்டைகள்-விதைகள், நகப் பொருட்கள் போன்றவற்றை இந்தச் சுருங்கும் அலை சுமந்து செல்கிறது. அத்துடன் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் எப்போதும் சிறு குடலில் தங்குமாறு பார்த்துக்கொள்ளவும் இந்தச் செயல்பாடு நடக்கிறது.
பசிக்காக மட்டுமின்றி செரிமானக் கோளாறு, வாயுக் கோளாறு ஏற்பட்டாலும் வயிற்றுக்குள் சத்தம் எழும். அது வேறு மாதிரி இருக்கும்.