Last Updated : 16 Jun, 2015 11:45 AM

 

Published : 16 Jun 2015 11:45 AM
Last Updated : 16 Jun 2015 11:45 AM

மாநிலங்களை அறிவோம்: மகாபாரதப் போர்க்களம்- ஹரியாணா

கடவுளின் இல்லம், பசுங்காடு என்று ஹரியாணாவுக்கு அர்த்தம். அபிராயனா வம்சம் ஆண்டதால் ஹரியாணா வந்ததாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. கி.மு.1328-ல் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டோ ஹரியாணாவை பூலோக சொர்க்கம் என்கிறது.

சிந்துசமவெளி , முந்தைய ஹரப்பா நாகரீகம், மற்றும் வேதகால நாகரிகம் செழித்து இருந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு கிடைத்த பாண்டங்கள், சிற்பங்கள், அணிகலன்களை வைத்து மகாபாரதப் போர் இங்குள்ள குருஷேத்திரம் எனும் பகுதியில்தான் நடந்தது என்றும் ஒரு வாதம் உள்ளது.

ஹர்ஷவர்த்தன், பிரித்திவிராஜ் சவுகான், ஷெர்ஷாசூரி, மொகலாயர், மராத்தியர்கள், டெல்லி சுல்தான் என்னும் முக்கியமான அரசுகளின் பகுதி இது.

நுழைவு வாயில்

மொகலாய அரசின் நிறுவனர் பாபர் முதல் பானிப்பட் போரில் இப்ராஹிம் லோடியை வீழ்த்தினார். பின்னர் வந்த ஹெம் சந்திர விக்கிரமாத்தியனுக்கு எதிராக அக்பரின் பாதுகாவலர் பைராம்கான் போரிட்டது இரண்டாம் பானிப்பட் போர்.

18-ம் நூற்றாண்டில் மொகலாயர் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆதிக்கத்துக்கு வந்த மராத்தியர்கள், ஆப்கானிஸ்தானின் அகமது ஷா துரானியை எதிர்த்து போரிட்டது 3-வது பானிப்பட் போர். இரண்டாவது ஆங்கிலேயர்- மராத்தியர் போர் மூலம் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி 1803-ல் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்துக்கு வந்தனர்.

மகாபாரதத்தின் குருக்ஷேத்ர போர், பானிப்பட் போர்கள் மற்றும் ஹூணர்கள், துருக்கியர் மற்றும் ஆப்கானிஸ்தானியர் என பலர் இந்தியாவுக்குள் நுழைய முயன்று தீர்க்கமுடன் நடத்திய போர்கள் அனைத்தும் ஹரியாணாவில் நிகழ்ந்தவை. இதனால் ஹரியாணாவுக்கு ‘வட இந்தியாவின் நுழைவு வாயில்’ என்ற பெயரும் வந்து சேர்ந்தது.

ராவ் துலா ராம்

1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக தீரமிக்க போராட்டத்தை ஹரியாணா வெளிப்படுத்தியது. இதில் முக்கியமான பாத்திரம் வகித்தது வீரர் ராவ் துலா ராம். போராளிகளுக்குத் தேவையான ஆயுதங்கள், பொருட்களை டெல்லிக்குச் சாமர்த்தியமாக அனுப்பினார்.

ஆங்கிலேயருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தினார். புரட்சியை ஆங்கிலேய படைகள் ஒடுக்கிய நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறி ரஷ்யா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களிடம் ஆங்கிலேயரை விரட்ட உதவி கோரினார். அவரது திட்டம் நிறைவேறும் முன்பே காபூலில் உயிரிழந்தார். ஹரியானாவைப் பொறுத்தவரை அவரே கதாநாயகன்.

புதிதாய்ப் பிறந்தது

விடுதலைக்குப் பிறகு, பஞ்சாப்பில் இருந்து 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 1966 நவம்பர் 1-ம் தேதி புதிய ஹரியாணா மாநிலம் பிறந்தது.

சண்டிகரை உள்ளடக்கிய காராட் தாலுகாவின் சில பகுதிகள் ஹரியாணாவில் இணைக்கப் பட்டாலும், சண்டிகர் தனி யூனியன் பிரதேசமானது. இப்போது ஹரியாணாவுக்கும் பஞ்சாப்புக்கும் அதுதான் தலைநகர்.

முதுகெலும்பு

மாநிலத்தின் பொருளாதார வளத்துக்கு வேளாண்மை முதுகெலும்பாக உள்ளது. தானிய உற்பத்தியில் முதன்மை இடம். கோதுமை, நெல், கரும்பு, எண்ணெய் வித்துகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. பருத்தி, காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் உற்பத்தியிலும் முக்கியத்துவம் பெற்ற மாநிலம்.

நாடும் மக்களும்

மாநிலத்துக்கு வடக்கே பஞ்சாபும் இமாச்சல பிரதேசமும், மேற்கிலும் தெற்கிலும் ராஜஸ்தானும் கிழக்கே உத்திரப்பிரதேசமும் எல்லையாக அமைந்துள்ளன. இந்தியாவின் தலைநகர் டெல்லியைக் கருவைச் சுமப்பது போல முழுவதுமாக உள்வாங்கி அமைந்துள்ளது ஹரியாணா.

மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2.5 கோடி. ஆயிரம் ஆண்களுக்கு 877 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு 76.6 சதவீதம்.

ஹரியாணா மக்களின் கலாச்சாரம் சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்து தொடங்குகிறது. பண்டைய மதவழிபாட்டு சடங்குகள், பாரம்பரியங்களை பாதுகாப்பவர்கள். நாட்டுப்புற கலாச்சாரம், பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்களை உயிர்ப்புடன் இன்றும் நிகழ்த்தி வருகின்றனர். பஞ்சாபியர்களைப் போலவே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

தமிழுக்கு அந்தஸ்து

ஹரியாணாவின் தாய் மொழி ஹர்யான்வி. மாநிலத்தின் அனைத்து மக்களாலும் பேசக்கூடிய பஞ்சாபி அலுவல் மொழி. இந்தி இரண்டாவதாக பேசப்படும் மொழி. பாக்ரி, அகிர்வதி உள்ளிட்ட பிற மொழிகளின் புழக்கமும் உண்டு.

ஹரியாணாவில் ஒரு தமிழ் பேசும் குடும்பம் கூட இல்லாத நிலையில் 1969-ல் அந்த மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டது. ‘மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழி பஞ்சாபியாகத்தான் இருக்க வேண்டும். இரண்டாவது மொழியாக எது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்’ என பஞ்சாபி சுபா இயக்கம் அறிவித்தது. இதன்படியே முதல்வராக இருந்த பன்சிலால் முதன்மை மொழியாக பஞ்சாபியையும் இரண்டாவது மொழியாக தமிழையும் அறிவித்தார்.

பஞ்சாபியும், இந்தியும் அதிகளவில் பேசும் ஒரு மாநிலத்தில், புழக்கத்திலேயே இல்லாத தமிழ் மொழி எப்படி என்பது விவாதப் பொருளாகவே இருந்து வந்தது. தமிழ் நீக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதி அளித்து வந்தன. கடைசியாக 2010-ல் தமிழ் நீக்கப்பட்டது.

தொழில் வளம்

தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ள குர்கான், முன்னணி தொழிற்சாலைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய தொழில் நகரமான பரிதாபாத், ஆசியாவின் மிகப்பெரிய காகித ஆலை மற்றும் சர்க்கரை ஆலையை உள்ளடக்கிய யமுனா நகர், கண்ணாடி, இரும்பு, டைல்ஸ் உற்பத்தியில் சாதனை படைக்கும் பாதுர்கர், ஜவுளி தொழில் வளமிக்க பானிப்பட் மற்றும் ஹிஸ்ஸார், அறிவியல் உபகரணங்கள் உற்பத்திக் கேந்திர மாக விளங்கும் ஆம்பலா, மோட்டார் வாகன உற்பத்தியில் முதன்மை பெற்று திகழும் ரோடாக், ஆசியாவின் மிகப்பெரிய தானியச் சந்தையான குருக்ஷேத்ரா ஆகியவை மாநிலத்தின் தொழில் வளத்துக்கு சாட்சியாக நிற்கின்றன.

முத்திரை

விளையாட்டுத் துறையில் சாதனை மாநிலம் இது. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய மற்றும் தேசிய விளையாட்டுகளில் தனி முத்திரை பதித்துள்ளது. கபடி, கோ கோ, ஜுடோ, குத்துச்சண்டை, மல்யுத்தம், வாலிபால் போட்டிகளில் பதக்கங்கள் தான். போர்க்கள வெற்றிகள் மட்டுமல்ல, விளையாட்டிலும் ஹரியாணாவுக்கு வெற்றிகள் குவியவே செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x