Last Updated : 19 May, 2015 12:35 PM

 

Published : 19 May 2015 12:35 PM
Last Updated : 19 May 2015 12:35 PM

பிளஸ் 2-க்கு பிறகு: வரவேற்பு குறையாத ஆசிரியர் படிப்புகள்

வேலைவாய்ப்புச் சந்தையில் பல தலை முறைகளாக ஆசிரியர் பணிக்கான வரவேற்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ஆத்மார்த்தமான வேலை, திருப்தியான ஊதியம், வரையறுத்த வேலை நேரம், பாதுகாப்பான பணிச் சூழல், போதுமான விடுமுறை என்று அரசுப் பணிகளில் ஆசிரியர் உத்தியோகத்துக்கு இன்னமும் மவுசு குறைந்தபாடில்லை.

ஆசிரியராக மாறுவதற்குப் பிளஸ் 2-க்கு பிறகு பயில வேண்டிய பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்து விளக்குகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த கல்வித்துறை முன்னாள் அதிகாரி நா. ஜெயராமன்:

பட்டய ஆசிரியர்: பெண்களுக்கு அதிக வாய்ப்பு

ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வரவேற்பு தற்போது இல்லாது போனாலும், ஆண்களைவிட பெண்கள் மத்தியில் இந்தப் படிப்பில் சேருவதற்குப் போட்டி நிலவுகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே இதற்குக் காரணம். இதற்கான டிப்ளமா படிப்பில் சேர்வதும் எளிது. பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 540 மதிப்பெண் பெற்றிருந்தால் சேர்க்கைக்குத் தகுதியுண்டு.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ‘மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்’ எனப்படும் ‘டயட்’ மையம் செயல்படுகிறது. இது தவிர்த்து ஏராளமான தனியார் பயிற்சி நிறுவனங்களும் உண்டு. உங்கள் பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் குறித்த அங்கீகாரம் உள்ளிட்ட தகவல்களை அருகிலுள்ள ‘டயட்’ நிறுவனத்தில் உறுதி செய்துகொள்ளலாம். இரண்டு வருடப் பட்டயப் படிப்பு முடித்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, அதில் பெற்ற ‘கட் ஆப்‘ மதிப்பெண்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணி வாய்ப்பு பெறலாம்.

பட்டதாரி ஆசிரியர்: பல்முனை வாய்ப்புகள்

6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்புவரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதற்குத் தகுதி பெற ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும். தற்போது கலை, அறிவியல் பட்டம் மற்றும் பி.எட்., ஆகியவற்றை ஒருங்கிணைத்து 5 வருடப் பட்டப் படிப்பாகவும் சில கல்லூரிகள் வழங்குகின்றன. இவற்றை முடித்தவர்கள், அரசு அறிவிப்பை ஒட்டி ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.) எழுத வேண்டும்.

அதுவே 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான முதுநிலை ஆசிரியராக வேண்டுமென நினைத்தால், முதுநிலை பட்டத்துடன் பி.எட். பயின்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.) தகுதித் தேர்வு எழுத வேண்டும். இந்த வகையில் அடிப்படையான அறிவியல் படிப்புகளான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம், ஆங்கிலம் ஆகிய பட்டப் படிப்புகளுக்கு எதிர்காலத்தில் சிறப்பான ஆசிரியர் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆசிரியர் பணியைப் போலவே வட்டார வள மைய பயிற்றுநர் எனப்படும் பதவிக்கும் இதே வகையில் தேர்வு பெறலாம்.

மற்ற ஆசிரியர் பணி வாய்ப்புகள்

அரசுப் பணி கிடைக்கும்வரை தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து அனுபவம் மற்றும் சுமாரான ஊதிய வாய்ப்பைப் பெறலாம். அந்த வகையில் பட்டய மற்றும் பட்டதாரி ஆசிரியப் படிப்புகளை மேற்கொள்வோருக்குச் சிறப்பான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாநில அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவதற்கு டி.இ.டி. தேர்வு போல, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் ஆசிரியர் ஆவதற்கு சி.டி.இ.டி. தேர்வெழுதி மத்திய அரசின் பணியும் பெறலாம்.

இதே வரிசையில் ராணுவத் துறையிலும் தனியாக ஆசிரியர் பணியிடங்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாவட்டக் கல்வி அதிகாரி போன்ற கல்வித் துறை உயரதிகாரிகள், தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு. அதனால், ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பள்ளி ஆசிரியர் ஆவதற்கு தகுதித் தேர்வு எழுதுவது போலத் தற்போது பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகவும் தகுதித் தேர்வு மூலம் பணியைப் பெறலாம். ஆசிரியர் பணித் தகுதிக்குத் தம்மை உயர்த்திக்கொள்பவர்களுக்குப் பல்வேறு வகையான ஆசிரியர் பணியிடங்கள் உட்பட ஏராளமான இதர அரசு பணி வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x