Last Updated : 24 Mar, 2015 12:06 PM

 

Published : 24 Mar 2015 12:06 PM
Last Updated : 24 Mar 2015 12:06 PM

வெற்றிப்பாதை: பிளஸ் 2-க்குப் பிறகு...

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவடையும் நிலையை எட்டிவிட்டது. அதன்பிறகுதான் பெற்றோர்களுக்கான தேர்வு தொடங்குகிறது. எந்த வேலைவாய்ப்புக்கு என்ன படிப்பு படிக்க வேண்டும், எதற்கு மார்க்கெட் இருக்கிறது, எந்தக் கல்லூரியில் சேர்ப்பது...

இந்தக் கணக்குகளோடு தன் மகன்/மகளின் ஆர்வம் மற்றும் அவர்கள் பெறப்போகும் மதிப்பெண் ஒத்திசையுமா? என ஆயிரம் கேள்விகளுக்குப் பெற்றோர் விடை கண்டாக வேண்டிய தேர்வு இது.

மாணவர்களுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் என்பது ஒரு துருப்புச் சீட்டுதான். மற்றபடி அதை வைத்துக்கொண்டு எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மேற்கல்வியை இனி வரும் 2 மாதங்களில் தீர்மானித்தாக வேண்டும்.

பிரமாதமான மதிப்பெண்களோடு பெரும் செலவில் பொறியியல் சேர்ந்து, பின்னாளில் ஐடி நிறுவனங்களில் ரூ10 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்; சொற்பச் செலவில் ‘விஷுவல் எஃபெக்ட்ஸ்‘ டிப்ளமோ அல்லது ‘சி.ஏ.‘ வாயிலாக மாதம் லட்சத்தில் வருவாய் ஈட்டுபவர்களும் உண்டு. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பை முடித்துவிட்டு, முழு மூச்சாக வங்கி அல்லது அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு முதல் குடிமைப்பணிக்கான தேர்வுகளில் இறங்குபவர்களும் இருக்கிறார்கள்.

மதிப்பெண் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு திட்டமிடுவதைவிட பல்வேறு பரிசீலனைகளை மற்றும் முன் தயாரிப்புகளை சரி பார்த்துவிடுவது சில பல குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.

கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் மட்டுமல்ல கல்விச் சந்தையில் பொக்கிஷமாக ஒளிந்திருக்கும் செலவு வைக்காத சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளும் உண்டு. இது தவிர வழக்கமான கல்லூரி படிப்போடு கணினி பயிற்சிகள் உள்ளிட்ட இணையாகப் படிக்க வேண்டிய பல கூடுதல் படிப்புகளும் உள்ளன. அரசு, தனியார் சேவை நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகளும் உள்ளன.

படிப்புக்கு உதவும் துறை சார்ந்த பகுதி நேர வேலை அல்லது பயிற்சி, கூடுதல் பட்டங்களும் நிறைய இருக்கின்றன. மகளிர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற படிப்புகள், பொறியியல் படிப்பு என்ற மாயை குறித்தும், அதுதான் படித்தாக வேண்டுமெனில் தகுந்த கல்லூரிகளை அடையாளம் காண்பது எப்படி என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

வெளிநாட்டில் படிப்பைத் தொடர விரும்புபவர்கள் மேற்கொள்ள வேண்டிய சரிபார்ப்புகள், எழுத வேண்டிய தேர்வுகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். அறிமுகமாகும் புதிய படிப்புகள், அடிப்படை பாடப் பிரிவா அதன் நவீனக் கிளைப் பிரிவா, எதை எடுத்துப் படிப்பது என்பது குறித்தும் அறிந்துகொள்வது நம்முடைய தேர்வை எளிதாக்கும்.

இந்தப் பாடத்தைத்தான் படிப்பது என்று தீர்மானித்த பிறகு உரிய கல்லூரியை எப்படித் தேர்வு செய்வது?, வளாகத் தேர்வுகள், தர மதிப்பீடுகள், ஆய்வகப் பரிசோதனைக் கூட வசதிகள், விடுதி மற்றும் உணவகம் எனப் பலவற்றையும் அலசி ஆராய்ந்து சரியான கல்லூரியை அடையாளம் காண்பது என்பது குறித்து வல்லுநர்களின் ஆலோசனைகள் நமக்குக் கூடுதல் வழிகாட்டியாய் அமையும்.

இவை மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே தங்கி உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவ மாணவிகள் எதிர்கொள்ளும் உடல், மன, சமூக ரீதியிலான தடுமாற்றங்களையும், படிப்புக்குப் பங்கமின்றி அவற்றைத் தாண்டிச் செல்வதற்கான ஆலோசனைகளும் அவசியம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவருவது வரை விடுமுறை இடைவெளியைப் பயனுள்ள வகையில் மாணவர்கள் எதிர்கொள்ள முடியும். எப்படி என்று அடுத்த வாரம் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x