Last Updated : 10 Feb, 2015 02:46 PM

 

Published : 10 Feb 2015 02:46 PM
Last Updated : 10 Feb 2015 02:46 PM

மதிப்பெண் பெறுவதில் வரலாறு படைக்கலாம் - வெற்றிப்பாதை: பிளஸ் 2

நம்மைவிட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் குடிமைத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு, பள்ளிக்கூடம் முதலே வரலாற்றுப் பாடத்தை முதன்மையாக எடுத்துப் படிப்பதும் ஒரு காரணம். வேறு பாடப் பிரிவுகள் கிடைக்காத நிலையில் மட்டுமே இவற்றைத் தேர்வு செய்யும் போக்கு, தமிழ்நாட்டில் சமீப காலமாய் மாறி வருகிறது.

தொழிற்கல்வி படித்து குடிமைப் பணிக்குத் தயாராகுபவர்கள், அங்கே தேர்வு செய்யும் பாடம் பெரும்பாலும் வரலாறாக இருப்பது கண்கூடு. மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசின் பல தேர்வுகளிலும் வெற்றி பெற வரலாற்றுப் பாடம் கைகொடுக்கும்.

பிளஸ் 2 வரலாறு பாடத் தேர்வுக்குப் பக்கம் பக்கமாய்ப் படிக்கும் சிரமத்தை எளிதாக்கித் தருகிறார், வரலாறு முதுகலை ஆசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக ஓய்வுபெற்ற திருச்சி பி.வி.தேவராஜ்.

புரிந்து படிப்போம்

ஒரு புறம் கதைதானே என்ற அலட்சியமும், மறுபுறம் பக்கம் பக்கமாய் படிக்க வேண்டிய ஆயாசமும் வரலாற்று மாணவர் களுக்கு அடிக்கடி வந்து போகும். ஆர்வத்தோடு புரிந்து படித்தால், பாடம் தீயாகப் பற்றிக்கொள்ளும்.

1, 3, 6 மற்றும் 10 மதிப்பெண் வினாக்களை படிக்கையில் அவற்றில் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதையும், வேறுபாடு உள்ளதையும், பெரிய பதிலில் உள்ளடங்கி இருக்கும் சிறு விடைகளையும் உள்வாங்கிக்கொண்டு படித்தால் படிப்பதற்கான நேரம் குறையும். படிப்பதை எளிமையாகவும் உணரலாம்.

கைகொடுக்கும் இந்திய வரலாறு

இந்திய வரலாறு மற்றும் உலக வரலாறு எனப் பாட நூலின் இரு பெரும் பிரிவுகளில் இந்திய வரலாறு மட்டும் படித்தாலே கணிசமான மதிப்பெண்களைப் பெறலாம். சுமாராகப் படிப்பவர்களுக்கும் இப்பகுதி பாடத் தலைப்புகள் எளிதாக இருக்கும். சாய்ஸ் வினாக்களிலும் இப்பகுதி வினாக்களைத் தேர்வு செய்து, அவர்கள் எழுதுவார்கள்.

அதற்காக உலக வரலாற்றை ஒதுக்கிவிடக் கூடாது. முந்தைய வினாத்தாள்களில் இருந்து அதிகம் கேட்கப்பட கேள்விகளை மட்டுமாவது பயிற்சியில் சேர்த்துக்கொள்வது, மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கும்.

1 மதிப்பெண்: புத்தக வினாக்களே போதும்

பகுதி ‘அ’வில் இடம்பெறும் 45 ஒரு மதிப்பெண்களையும் அள்ளப் பாட நூலில் இடம்பெற்றிருக்கும் வினாக்களில் தேர்ந்தெடுத்துப் படித்தாலே போதும். இவற்றுடன் திருப்புதலின்போது குறைந்தது 2 ஆண்டு முந்தைய தேர்வு வினாத்தாள்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

சரியான விடையைத் தேர்ந்தெடு-20; கோடிட்ட இடத்தை நிரப்புதல்- 10; பொருத்துக-5; சரியான குறிப்பைக் கண்டறிக-5; சரியா, தவறா-5 எனப் பல பிரிவுகளில் 1 மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும்.

3 மதிப்பெண்: முத்தான குறிப்புகள் மட்டும்

பகுதி ஆ என்பது, 20-ல் இருந்து 15 என்றளவில் சாய்சுடன் குறிப்புகள் கேட்கப்பட்டிருக்கும். 3 மதிப்பெண்ணைப் பொறுத்தவரை, விடை என்பது எத்தனை குறிப்புகளைக் கொண்டிருந்தாலும், 3 முக்கியக் குறிப்புகளின் கீழ் விடையளித்தால் போதும்.

6 மதிப்பெண்: இந்திய வரலாறு போதும்

பகுதி இ என்பதில் 12 வினாக்களில் இருந்து 10 வினாக்களுக்குப் பதில் அளிப்பதாக இருக்கும். வினாக்கள் ஒவ்வொன்றும் ‘அல்லது’ வகையிலும், கேள்வி எண் 77 கட்டாய வினாவாகவும் அமைந்திருக்கும். 12 வினாக்களில் 8 இந்திய வரலாறு பகுதியிலிருந்தும், 4 உலக வரலாறு பகுதியிலிருந்தும் கேட்கப்படும். இதில் கட்டாய வினா, உலக வரலாறு பகுதியிலிருந்தே கேட்கப்படுகிறது.

10 மதிப்பெண்: கதை வேண்டாம்

பகுதி ஈ என்பது 7-ல் இருந்து 5 வினாக்கள் என்ற சாய்சுடன் கேட்கப்பட்டிருக்கும். ‘அல்லது’ வகையிலான இந்தக் கேள்விகளில் கட்டாய வினாவான கேள்வி எண் 84 மட்டும் அல்லது வகையில் 3-ல் இருந்து 1 கேள்விக்குப் பதிலளிக்கலாம்.

10 மதிப்பெண்ணைப் பொறுத்தவரை பக்கம் பக்கமாக எழுதினால் மதிப்பெண் வந்துவிடும் என்பதைவிட கருத்துகளை, அவற்றுக்கான வரையறுக்கப்பட்ட வார்த்தைகளின் எண்ணிக்கையில் கோவையுடன் எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும்.

அதேபோல எந்த வினாவையும் தவிர்க்காது பதிலளிக்க வேண்டும். இதற்குக் கேள்விகளை ஆசிரியர் உதவியுடன் வகைவாரியாகப் பிரித்துப் படிக்கலாம். உதாரணத்துக்கு ‘சீர்திருத்தங்கள்’ என்ற வகையில் மட்டுமே 6 பிரபுக்களின் சீர்திருத்தங்கள் அடங்கியியிருக்கும்.

இதேபோல புரட்சி, கலகம், கிளர்ச்சி தொடர்பான கேள்விகளையும் பிரித்துப் படிப்பது எளிமையாக இருப்பதோடு, அவற்றின் மத்தியிலான வேறுபாடுகளையும் உள்வாங்கிக்கொண்டு குழப்பங்களைத் தவிர்க்க உதவும். இதே ரீதியில் உலக வரலாறு பகுதியிலிருந்தும் இயக்கங்கள், புரட்சிகள், உலகப்போர்கள், பன்னாட்டு அமைப்புகள் என்று தலைப்புகளுக்குள் படிப்பது நல்லது.

கட்டாய வினாக்களில் கவனம்

6 மற்றும் 10 மதிப்பெண் பகுதிகளில் விடையளிக்கையில் அவற்றின் கட்டாய வினாக்களை முதலில் எழுதிவிட்டு பின்னர் ஏனைய வினாக்களுக்குச் செல்வது உசிதமானது. 6 மதிப்பெண் பகுதியின் கட்டாய வினாவான கேள்வி எண் 77, உலக வரலாறு பகுதிலிருந்து மட்டுமே கேட்கப்படுவதால் இந்திய வரலாறு பாடங்களில் மட்டுமே பயிற்சி பெற்றவர்கள், முந்தைய ஆண்டின் முக்கியக் கேள்விகளில் இருந்து இந்தக் கட்டாய வினாவுக்குத் தயாராகலாம்.

கட்டாய வினா தவிர்த்து மற்றொரு உலக வரலாறு பகுதி வினாவுக்குப் பதிலளித்தாக வேண்டும் என்பதால், இந்த வகையிலான தயாரிப்பு கைகொடுக்கும்.

10 மதிப்பெண் பகுதியின் கட்டாய வினாவான கேள்வி எண் 84 என்பது வரைபடம் மற்றும் காலக்கோடு வரைவது ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதில் காலக்கோடு வரைவதான கேள்விக்குப் பதிலளிப்பது, முழு மதிப்பெண் தருவதோடு, நேர விரயத்தையும் தவிர்க்கும். தேர்வுக்கு முந்தைய திருப்புதலின்போது, வரலாற்று மாணவர்கள் தினம் ஒரு காலக்கோடு பயிற்சிக்கு 5 நிமிடம் ஒதுக்குதல் வேண்டும்.

சில கவனக் குறிப்புகள்

தேர்வறையில் திருப்புதலுக்குத் தனியாக நேரம் ஒதுக்கி ஒரு மதிப்பெண் பகுதியில் கேள்வி எண் வரிசையாகப் போடப்பட்டுள்ளனவா என்றும், கேள்வி எண்ணுக்குரிய விடையைத்தான் எழுதியுள்ளோமா என்றும் சரிபார்க்க வேண்டும். தெரிந்த கேள்விகளை முதலில் எழுதும் முனைப்பில், பிற்பாடு பகுதிகளில் மாற்றி மாற்றிப் பதில்களை எழுதுவது தாள் திருத்துபவருக்கு அலுப்பூட்டலாம் என்பதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அடித்து எழுதுவதைக் கூடுமானவரை தவிர்க்கலாம். ஒரு பதிலை அடித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு கேள்விக்கான பதிலை எழுதுவதாக இருப்பின், 2-வது கேள்வியை எழுதி முடித்த பிறகு முதல் கேள்வியை அடித்துவிடலாம். பெரிய கேள்விகளுக்கு விடையளிக்கையில், முக்கிய விவரங்களை - பெயர்களை எழுதுகையில் நீலம், கறுப்பு ஆகிய மைகளிடையே மாற்றி எழுதுவது எடுப்பாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x