Last Updated : 17 Feb, 2015 12:44 PM

 

Published : 17 Feb 2015 12:44 PM
Last Updated : 17 Feb 2015 12:44 PM

தொழிற்கல்வி பாடங்களில் தொய்வின்றி மார்க் அள்ள..

பொறியியல், மருத்துவம் தவிர இதர மேல்படிப்புகளே இல்லையா என்று ஐயப்படும் அளவுக்கு, இன்றைய பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோரின் முனைப்புகளும், எதிர்பார்ப்புகளும் அமைந்திருக்கின்றன. அந்த மாயையைக் களையும் வண்ணம், எளிமையான பாடங்களில் சேர்ந்து பங்கமில்லாத எதிர்காலத்தை அமைத்துக்கொள்கிறார்கள், பிளஸ் 2-வில் தொழிற்படிப்பு பாடங்களை எடுத்துப் படிக்கும் மாணவர்கள். அந்த மாணவர்களுக்கான ஆசிரிய வல்லுநர் ஆலோசனைகளின் முதல் பகுதி:

1. வேளாண் செயல்முறைகள்

வி.கே. சரவணன், மூவானூர் அரசு மேல்நிலைப் பள்ளி திருச்சி மாவட்டம்.

மொத்தம் 21 பாடங்கள் என்றபோதும், புளூ பிரிண்ட் அடிப்படையில் படித்தால் சிரமமிருக்காது. உதாரணத்துக்கு 21 பாடங்களில் 12-ல் இருந்து மட்டுமே 4 மார்க் கேள்விகள் வரும். மெல்லக் கற்கும் மாணவர்கள்கூட 4 மார்க் கேள்விகள் குறைவாக இருக்கும் அலகுகளான 3,4,9,12,14 ஆகியவற்றை மட்டுமே படித்து, ஐந்து 4 மார்க் கேள்விகளுக்கு நிச்சயமாக விடையளிக்கலாம். 10 மார்க் கேள்விகளுக்கும் இது போல, 8,10,13,15,21 ஆகிய 5 அலகுகளைப் படித்து ஐந்து, 10 மார்க் கேள்விகளை எதிர்கொள்ளலாம். 20 மார்க் கேள்விகள் 4 கேட்கப்படும். 6,14,17 ஆகிய பாடங்களின் 10 மார்க் கேள்விகளை மட்டுமே படித்து 4-ல் 3 கேள்விகளை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

இந்தப் பாடத்தின் பெரும் பிரச்சினையாக மாணவர்கள் உணர்வது, நேரமின்மைதான். ஆகையால், 4 மார்க் என்றால் 4 பாயிண்ட், 10 மார்க் என்றால் 10 பாயிண்ட் என்று திட்டவட்டமாக எழுதி, அடுத்தடுத்த கேள்விகளுக்குச் சென்றுவிட வேண்டும். எளிதான வினாக்கள் என்ற சுவாரஸ்யத்தில் பக்கம்பக்கமாக எழுத ஆரம்பித்தால், நேரம் பறி போய்விடும்.

2. கட்டடப் பட வரைவாளர்

ஆ.சிவநேசன், அரசு மேல்நிலைப் பள்ளி, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்.

எளிமையான 1 மார்க், 4 மார்க் கேள்விகளோடு 6, 7 ஆகிய அலகுகளில் இருந்து கேட்கப்படும் எளிதான தலா ஒரு 20 மார்க் கணக்குக் கேள்வியையும் குறிவைத்துப் படித்தால், 110 மார்க் உத்திரவாதமாகக் கிடைக்கும்.

இத்துடன் கூடுதல் மதிப்பெண் பெற விரும்புபவர்கள் 1,6,7,8 ஆகிய தியரி பாடங்களைப் படித்து 169 ஆக மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ளலாம். இவற்றுடன், அலகு 2-லிருந்து பத்து மார்க் கேள்விகள் அனைத்தையும் படித்தால் முழு மதிப்பெண்கள் சாத்தியமாகும். 3,4,5 ஆகிய பாடங்களில் 10, 20 மார்க் கேள்விகளைத் தவிர்த்துவிடலாம்.

3. மின் இயந்திரங்களும் சாதனங்களும்

அ.ந. தனசேகரன், யு.டி.வி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி

இந்தப் பாடத்தைப் பொறுத்தவரை, நேர முன் திட்டத்துடன் தேர்வெழுதிப் பழகுதல் வேண்டும். 1 மார்க் பகுதிக்கு 30 நிமிடம்; 4,10 மார்க் கேள்விகளுக்கு மொத்தமாய் 1 மணி நேரம்; 20 மார்க் பகுதிக்கு 1.15 மணி நேரம்; இவற்றுடன் திருப்புதலுக்கு 15 நிமிடங்கள் என்ற காலவரையறைக்குள் எழுதிப் பழக வேண்டும்.

மொத்தமுள்ள 5 பத்து மார்க் கேள்விகளில், 1,2,7,11 ஆகிய பாடங்களில் இருந்து தலா 1 கேள்வியும், 16-ம் பாடத்தின் ‘மின்மாற்றியின் பண்புகள்’ என்ற கேள்வியையும் சேர்த்து 10 மார்க் பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெறலாம். 4 இருபது மதிப்பெண் கேள்விகளை எதிர்கொள்ள, 3,6,9 ஆகிய பாடங்களில் இருந்து 10 இருபது மார்க் கேள்விகளைப் படித்து, நிச்சயமாக அவற்றில் 3 இருபது மார்க் கேள்விகளை எதிர்பார்க்கலாம். இவற்றுடன் பாடம் 5-ல் வைண்டிங் தொடர்பான 3 படங்களையும் வரைவதில் தேறினால், 20 மார்க் பகுதியில் முழு மதிப்பெண் நிச்சயம்.

10, 20 மார்க் கேள்விகளைப் பொறுத்தவரை, படத்தைத் தெளிவாக வரைந்தாலே பாதி மார்க் கிடைத்துவிடும். 4 மார்க் கேள்விகளை அனைத்துப் பாடங்களிலும் இருந்து கலந்து கேட்பார்கள் என்பதால், அதற்கேற்றவாறு தயாராக வேண்டும். 1 மார்க் பகுதியில் அதிகளவில் மாணவர்கள் தவறிழைப்பது நடக்கிறது என்பதால், அந்தப் பகுதிக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கித் தேர்வுக்குத் தயாராகலாம்.

4. நெசவுத் தொழில்நுட்பம்

ப. கிருஷ்ணமூர்த்தி, அரசு மேல்நிலைப் பள்ளி, வேம்படிதாளம், சேலம்

20 மார்க் பகுதியில் 6-லிருந்து 4 எனச் சாய்ஸுடன் பதிலளிப்பதாக இருக்கும். இதற்கு 1.2, 1.3, 1.4 பாடங்களில் இருந்து கேள்வி எண் 50; 2.5, 2.7, 2.8 ஆகிய பாடங்களில் இருந்து கேள்வி எண்கள் 51 மற்றும் 52; 3.2, 3.3 ஆகியவற்றிலிருந்து கேள்வி எண் 53; 3.5-ன் 9 வடிவமைப்பு கேள்விகளைப் படிப்பதன் மூலம் கேள்வி எண் 54, 3.9-ன் 3 கணக்குகளைப் படித்துக் கேள்வி எண் 55 ஆகியவற்றை எதிர்கொள்ளலாம். இந்த வகையில் 5 இருபது மார்க் கேள்விகளில் தயாராகி, அவற்றில் நன்கு தெரிந்த 4 கேள்விகளுக்குப் பதிலளிக்கலாம்.

10 மார்க் கேள்விகளை எதிர்கொள்ள, 1.8, 2.1, 2.9, 3.3 ஆகியவற்றிலிருந்து 4 பத்து மார்க் கேள்விகள் மற்றும், 1.1, 1.3 பாடங்களிலிருந்து 1 கேள்வி என 5 பத்து மார்க் கேள்விகளை முழுமையாக எழுதலாம். 10, 20 மார்க் கேள்விகளில் படம் வரைய வேண்டியிருந்தால், அவற்றைத் தவிர்த்துவிட்டுச் சிறப்பம்சங்கள், வேறுபாடுகள் தொடர்பான கேள்விகளைத் தேர்வு செய்து பதிலளித்தால் நேர விரயத்தை தவிர்க்கலாம்.

படம் வரையும்போது பாகங்களை அருகிலேயே குறிப்பது நல்லது. செய்முறை எழுதும்போது வேதிப்பொருள் பெயர்களைத் தனித்து அடையாளம் இடலாம். 1 மார்க் பகுதிக்கு எனத் தனியாகப் படிப்பதைவிட, 4, 10, 20 மார்க் கேள்விகளைப் படிக்கும்போதே அவற்றில் பொதிந்திருக்கும் 1 மார்க் கேள்விகளை அடையாளம் கண்டு படிப்பது நல்ல உத்தி. சில நேரம் 20 மார்க் கேள்விகளை 10 மார்க் பகுதியில் கேட்கும்போது, மொத்தப் பதிலையும் எழுதிக்கொண்டிருக்காமல் முக்கியமான 10 பாயிண்ட்களை மட்டுமே எழுதினால் போதும்.

(இதர தொழிற்கல்வி பாடங்கள், அடுத்த வாரம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x