Published : 07 Oct 2013 03:30 PM
Last Updated : 07 Oct 2013 03:30 PM

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகும்

தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

2,881 காலி இடங்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். தேர்வுக்கான தாற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது.

மதிப்பீடு பணி வீடியோவில் பதிவு

இந்த விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அது தொடர்பான விவரங்களை ஆகஸ்டு 5-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, தேர்வு எழுதிய பலரும் தனியார் பயிற்சி மைய நிர்வாகிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு விளக்கங்களை அனுப்பினார்கள். உரிய ஆவணங்களுடன் வந்த விளக்கங்களை மூத்த ஆசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்தது.

இதற்கிடையே, அனைத்து விடைத்தாள்களும் கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. இப்பணி முழுவதும் வீடியோவில் கண்காணிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, தேர்வு முடிவு வெளியிடப்பட இருந்தது. இந்த நிலையில், தமிழ் பாடத்தில் 47 கேள்விகள் தவறாக இருப்பதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. மறு தேர்வு நடத்தலாமா அல்லது உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா என்று அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஓரிரு நாளில் முடிவு

தமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவை வெளியிட தடை ஏதும் இல்லாததால் அவற்றுக்கான முடிவுகளை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

பிரச்சினை ஒரு பாடத்துக்கு மட்டுமே இருப்பதால், மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவு வெளியிடுவது பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

39 ஆயிரம் பேர்

அறிவிக்கப்பட்ட மொத்த காலிபணியிடங்களில் (2,881) சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழ் பாடத்துக்குத்தான் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகம் (606 பணியிடங்கள்) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பாடத்தில் மட்டும் 39 ஆயிரம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x