

ரிமோட் சென்சிங் (தொலையுணர்வு) மற்றும் ஜியோஇன்பர்மேடிக்ஸ் என்பது நேரடியாக அணுகாமல் தொலைவில் உள்ள ஒரு பொருளையோ அல்லது இடத்தையோ பற்றி ஆராயும் படிப்பாகும். இது அறிவியலும் தொழில்நுட்பமும் கலந்த படிப்பு என்றாலும், ஆர்வமுள்ளவர்களுக்கு சவாலான படிப்பு
ஆவலுக்குத் தீனி தரும் ரிமோட் சென்சிங், ஜியோஇன்பர்மேடிக்ஸ் துறைகள் சார்ந்த படிப்பை எல்லாப் பல்கலைக்கழங்களும் கல்லூரிகளும் வழங்குவதில்லை. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதலான சில பல்கலைக்கழகங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதைத் தவிர டேராடூன், புனே, ஐதராபாத் நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் ரிமேட் சென்சிங் துறைகள் உள்ளன.
முதுகலை அளவில் மட்டுமே இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பில் சேர ஏதாவது ஒரு இளங்கலை அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வழங்கப்படும் படிப்புகள்:
ரிமோட் சென்சிங், ஜியோஇன்பர்மேடிக்ஸ், இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் எம்.எஸ்சி. பட்டப் படிப்பு.
ரிமோட் சென்சிங் மற்றும் ஜி.ஐ.எஸ். பயன்பாடு என்ற துறையில் எம்.டெக்.
ஜியோ இன்பர்மேடிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் பி.எச்.டி. ஆய்வுக்கான பாடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சில பல்கலைக்கழகங்களில் ஜியோடெக்னாலஜி, ஜியோஇன்பர்மேடிக்ஸ் என்ற 3 ஆண்டுகள் பி.டெக். விரைவுப் படிப்பும் இப்போது வழங்கப்படுகின்றன.
குறுகிய காலப் படிப்புகள்:
டேராடூனில் உள்ள இந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் ரிமோட் சென்சிங் மற்றும் இமேஜ் இன்டர்ப்ரடேஷன் என்ற பிரிவில் 8 வார காலச் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.
மேலும் 3 மாதங்கள், 4 மாதங்கள், 10 மாதங்கள் என முதுநிலை பட்டயப் படிப்பும் (டிப்ளமோ) இங்கு வழங்கப்படுகின்றன.
வேலை வாய்ப்புகள்
ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோ இன்பர்மேடிக்ஸ் பயன்பாடுகளை அறிந்து தேர்ச்சி பெறுவதன் மூலம், வரைப்படங்கள் (மேப்) தயாரித்தல், வான்வெளி ஆய்வு, வானிலை ஆய்வு, விவசாய நில ஆய்வு, வன ஆய்வு என அரசுத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
"ரிமோட் சென்சிங் படிப்புகளை படிப்பதன் மூலம், இயற்கை வள ஆய்வுகள், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்கள், கடல் பற்றிய ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய ஆய்வுகளை உலகளவில் மேற்கொள்ள முடியும். இதனால் இப்படிப்புக்கு வெளிநாடுகளிலும் அதிகம் வரவேற்பு உள்ளது" என்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ரிமோட் சென்சிங் மைய இயக்குனர் சி.ஜே. குமணன்.
இப்படிப்பைப் படிப்பதன் மூலம் நில நடுக்கம் தொடர்பாக அக்குவேறு, ஆனிவேறாக ஆய்வு செய்ய முடியும். மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவைத் தடுப்பதற்கு ஆலோசனையும் வழங்க முடியும். நிலத்துக்குள் என்னென்ன வளங்கள் மறைந்துக் கிடக்கின்றன என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.