Published : 07 Oct 2013 02:57 PM
Last Updated : 07 Oct 2013 02:57 PM

டிப்ளமா படித்தால் ரயில்வே வேலை

உலகிலேயே அதிகப் பணியாளர்களைக் கொண்ட மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமை இந்திய ரயில்வே துறைக்கு உண்டு. இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 14 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள்.

ரயில்வே உயர் அதிகாரிகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுசெய்யப்பட்டுவரும் நிலையில், குரூப்-பி அதிகாரிகளும் குரூப்-சி ஊழியர்களும், குரூப்- டி பணியாளர்களும் அந்தந்த மண்டல ரயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ரயில்வே பணி என்பது மத்திய அரசு வேலையாக இருப்பது மட்டுமில்லாமல் பயணச் சலுகைகள், கல்வி, மருத்துவ வசதிகள், போனஸ் போன்ற மற்ற பலன்களும் இருப்பதால் பலரும் ரயில்வே வேலையில் சேரப் பெரிதும் ஆசைப்படுகிறார்கள்.

ரயில்வே தேர்வு வாரியம் வேலைக்கு ஆட்களைத் தேர்வுசெய்யும்போது, குறிப்பிட்ட சில கல்வித் தகுதிகளைக் கொண்டிருப்போருக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கிறது. பலரும் அது குறித்து அறியாமல் உள்ளனர். அத்தகைய படிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ரயில்வே போக்குவரத்து நிறுவனம் என்பது ரயில்வே அமைச்சகத்தின் அனுமதி பெற்ற ஒரு கல்வி நிறுவனம். இந்த நிறுவனம் ரயில் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, கண்டெய்னர் மேலாண்மை சம்பந்தப்பட்ட பட்டயப் படிப்புகளை அஞ்சல்வழியில் வழங்குகிறது.

ரயில்வே டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட், மல்டி-மோடல் டிரான்ஸ்போர்ட் (கண்டெய்னரைசேஷன்) லாஜிஸ்டிக்ஸ், டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் ஆகிய 3 டிப்ளமோ படிப்புகளும் ஓராண்டு கால பட்டயப் படிப்புகள். இவற்றில் பட்டதாரிகள், டிப்ளமோ என்ஜினியர்கள், பிளஸ்-2 முடித்துவிட்டு அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றிவருபவர்கள் சேரலாம். பயிற்சி கட்டணம் மிகக் குறைவு. ரூ.4,000 மட்டுமே.

அஞ்சல் வழியிலேயே பாடங்களைப் பெறலாம். பாடங்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். குறிப்பிட்ட நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட மையங்களில் நேர்முக வகுப்புகள் நடத்தப்படும். ரயில்வே பணியாளர் பயிற்சி கல்லூரி பேராசிரியர்கள், துறை நிபுணர்கள் வகுப்பு எடுப்பார்கள்.

ரயில்வே துறையில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர், டிராபிக், கமர்சியல் அப்ரண்டீஸ் பணிகளுக்கும், எலெக்ட்ரிகல், மெக்கானிகல், சிவில் உள்ளிட்ட துறைகளில் மேற்பார்வையாளர் நிலை பணிகளுக்கும் ரயில்வே டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் படிப்பு விரும்பத்தக்க தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் மல்டி-மோடல் டிரான்ஸ்போர்ட் (கண்டெய்னரைசேஷன்) லாஜிஸ்டிக்ஸ், டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் படித்திருந்தால் ரயில்வே துறையில் வர்த்தக செயல்பாடு தொடர்பான பணிகளிலும், எலெக்ட்ரிகல், மெக்கானிகல், சிவில் என்ஜினியரிங் துறை வேலைகளிலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மேலும், மல்டி-மோடல் டிரான்ஸ்போர்ட் (கண்டெய்னரைசேஷன்) லாஜிஸ்டிக்ஸ் படித்தவர்களுக்கு கார்கோ, ஷிப்பிங், கண்டெய்னர்களைக் கையாளும் நிறுவனங்களிலும் சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

ரயில்வே டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆண்டுதோறும் மே மாதம் தொடங்குகிறது. இதர 2 படிப்புகளும் மார்ச் மாதம் ஆரம்பிக்கும். பயிற்சி தொடங்குவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பாக நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மேலும் விண்ணப்பம், பயிற்சி, தேர்வு முதலான அனைத்து விவரங்களையும் www.irt-india.com என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட 3 டிப்ளமோ படிப்புகள் மட்டுமின்றி போர்ட் டெவலப்மென்ட் மற்றும் மேனேஜ்மென்ட் என்ற 2 ஆண்டு கால டிப்ளமோ படிப்பையும் ரயில் போக்குவரத்து நிறுவனம் வழங்குகிறது. மேற்சொன்ன படிப்புகளுக்கான கல்வித்தகுதியேதான் இதற்கும். பயிற்சி கட்டணம் ரூ.6,000. இதற்கான வகுப்பு ஆண்டுதோறும் மே மாதம் தொடங்குகிறது. கடுமையான போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு உலகில் நமது கல்வித்தகுதிகளையும், திறமைகளையும் உயர்த்திக்கொண்டால் நிச்சயம் இது போன்ற வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x