Published : 24 Feb 2014 12:00 PM
Last Updated : 24 Feb 2014 12:00 PM
சின்ன வயசில் கடற்கரைக்குப் போன சம்பவம் ஏதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அது தெளிவாக ஞாபகம் இல்லாவிட்டாலும், அங்கே சேகரித்த கிளிஞ்சல்கள் நிச்சயம் உங்களிடம் பத்திரமாக இருக்கும். அது அந்த நாளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
கிளிஞ்சல்கள் உயிரினங்களின் வீடாகவோ அல்லது பாதுகாப்புக் கூடாகவோ இருக்கின்றன. கிளிஞ்சல்கள் ரொம்ப கடினமாக இருப்பதற்குக் காரணம், அவற்றின் உள்ளே வாழும் உயிரினம் மிகமிக மென்மையாக இருப்பதுதான். இயற்கை இப்படிப்பட்ட பாதுகாப்பு வசதிகளை, அந்த மெல்லுடலிகளுக்கு வழங்கியுள்ளது.
கால்சியம் கார்பனேட் எனும் வேதிப் பெயர் கொண்ட சுண்ணாம்பால் கிளிஞ்சல்கள் உருவாகின்றன. தங்களுக்கான இந்தக் கூட்டை அதில் வாழும் உயிரினமே பிறந்ததில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குகிறது. காலத்துக்கேற்ப, உயிரினத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஓடும் பெரிதாகிறது. உயிரினத்தின் வடிவத்துக்கு ஏற்பவும் அந்த ஓடு அமைந்திருக்கிறது.
மொலஸ்கா எனப்படும் மெல்லுடலி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் சங்கு, சிப்பிகளில் வாழ்கின்றன. கடலில் மிக அதிகமாக வாழும் இரண்டாவது உயிரினத் தொகுதி இது. இவற்றினுடைய ஓட்டின் உட்பகுதியில் ராடுலா எனப்படும் ரிப்பன் போன்ற கூரான பற்கள் உண்டு. இந்தப் பற்களைப் பிடித்துக்கொண்டு மெல்லுடலி ஓட்டுடன் ஒட்டி கொள்கிறது.
கிளிஞ்சல்களில் அடிப்படையாக இரண்டு வகைகள் உண்டு. முதலாவது சிப்பி வகை (bivalves). முத்துச் சிப்பி என்றும் அழைக்கப்படும் இதில் மேலும் கீழுமாக இரண்டு ஓடுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். இடையில் சிப்பிப் பூச்சி வாழும். பெரும்பாலும் மண்ணுக்குள்ளோ அல்லது பாறைப் பிளவுகள், கடினமான பரப்புகளிலோ இது ஒட்டிக் கொண்டிருக்கும். கடற்கரைகளில் வாழும் சிப்பிகளில் பெரும்பாலானவை, மண்ணுக்குள் புதைந்தே கிடக்கும்.
ஒரு துளை வழியாக நீரை உறிஞ்சி, மற்றொரு பக்கம் உள்ள துளை வழியாக நீரை வடிகட்டி அனுப்புவதன் மூலம் தண்ணீரில் உள்ள நுண்ணுயிர்களைச் சாப்பிட்டுச் சிப்பிப் பூச்சி வாழ்கிறது. சில நேரங்களில் ஓர் உயிரினம் கடல் நீரில் மிதக்கவும்கூடக் கிளிஞ்சல்கள் உதவுகின்றன.
மற்றொன்று சங்கு வகை (gastropod). இவற்றுக்கு இரண்டு ஓடுகள் கிடையாது, இவை ஒரே ஓட்டால் ஆனவை. அந்த ஓடு பெரும்பாலும் சுருள்சுருளாக இருக்கும். இந்த ஓடுகளின் வடிவம், அளவு, வண்ணம், நுணுக்கமான வடிவமைப்பு போன்றவை இயற்கை எனும் பெருஞ்சிற்பி வடித்த சிற்பங்களைப் போலிருக்கும். சங்குகளிலும் சிறியதாக, கூம்பு வடிவம் அல்லாத மற்ற வடிவங்களில் அமைந்தவை சோவி எனப்படுகின்றன.
பழங்காலத்தில் இந்தச் சங்குகளில் இருந்து வளையல்கள் உருவாக்கப்பட்டன. சங்குகள் வளைந்து வளைந்து இருப்பதால், அவற்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட அணிகலன் வளையல் எனப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT