Last Updated : 24 Jan, 2017 10:36 AM

 

Published : 24 Jan 2017 10:36 AM
Last Updated : 24 Jan 2017 10:36 AM

தேர்வுக்குத் தயாரா? - கூடுதல் மதிப்பெண்ணுக்குக் கைகொடுக்கும் தாள்! - 10-ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரை மதிப்பெண் உயர்வுக்கு, தமிழ் இரண்டாம் தாள் பெருமளவு கைகொடுக்கும். அதற்குச் சுலபமான பாடம் என்ற அலட்சியமின்றித் தமிழ் இரண்டாம் தாளை மாணவர்கள் படிக்கத் தொடங்க வேண்டியது அவசியம்.

பயிற்சி வினாக்களே போதும்

மொத்தம் 20 ஒரு மதிப்பெண் வினாக்களை உள்ளடக்கியது பிரிவு-1. இவற்றில் ‘உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக’, ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ ஆகியன தலா 5 மதிப்பெண்களுக்கும், ‘சுருக்கமான விடையளி’ 10 மதிப்பெண்களுக்கும் உரியவை. 2 மதிப்பெண் வினாக்கள் அடங்கிய பிரிவு-2, இலக்கணப் பகுதிக்கு உரியது. இங்குக் கேட்கப்படும் 7 வினாக்களில் இருந்து 5-க்கு பதிலளிக்க வேண்டும். அதேபோல பிரிவு-3ன் பகுதி-1, இலக்கணப் பகுதியின் 5 மதிப்பெண் வினாக்களுக்கு உரியது. இதில் ‘பா’ இலக்கணம், அணி, அலகிட்டு வாய்ப்பாடு தருதல் என 3 வினாக்களில் இருந்து ஏதேனும் 2-க்கு பதிலளிக்க வேண்டும். இவை அனைத்திலும் பாட நூலின் பயிற்சி வினாக்களைப் படிப்பதன் மூலமே தேர்வுக்குத் தயாராக முடியும்.

துணைப்பாடமே துணை

அடுத்து வரும் பகுதி-2, துணைப்பாடப் பகுதிக்கானது. கொடுக்கப்பட்ட 3-ல் இருந்து 2 கேள்விகளுக்குப் பதிலளிப்பதாய், 5 மதிப்பெண் வினாக்கள் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும். இதில் 10 துணைப்பாடங்களை 2 பாதியாகப் பிரித்துப் படிப்பதன் மூலம் நிச்சயம் 2 வினாக்களுக்கு விடையளித்து விடலாம். ஆனால் தமிழ் இரண்டாம் தாளில் அதிக மதிப்பெண்ணை எதிர்நோக்கும் மாணவர்கள் ஓரிரு மதிப்பெண் இழக்கும் 2 பகுதிகளில், இப்பகுதி முதலாவது.

இப்பகுதிக்கான விடைகளை முன்னுரை, உட்தலைப்புகள் முடிவுரை ஆகியவற்றை உள்ளடக்கி எழுத வேண்டும். இதில் முன்னுரையிலும், முடிவுரையிலும் மேற்கோள் காட்டுவது சிறப்பு. அதேபோல குறைந்தது 3 உட்தலைப்புகளுடனும், உரிய நிறுத்தற்குறிகளுடனும், சந்திப் பிழைகள் இன்றியும் பொருளுரை எழுத வேண்டும்.

தமிழாக்கத்துக்குத் தனித் தயாரிப்பு

பகுதி-3 தமிழாக்கம் தொடர்பானது. ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல், அரபு எண்களைத் தமிழ் எண்களாக மாற்றுதல், ஆங்கில உரைப் பகுதிக்குத் தமிழாக்கம் தருதல், ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி எழுதுதல் ஆகியவை இப்பகுதியில் அடங்கும். பாடநூலின் பயிற்சி வினாக்களுக்கு அப்பாற்பட்டும் ஒன்றிரண்டு கேள்விகள் இப்பகுதியில் கேட்கப்படும். ஆகவே, இப்பகுதிக்கு எனத் தனித் தயாரிப்புடன் படிப்பது நல்லது.

கதையா, கவிதையா?

அடுத்து வரும் 5 மதிப்பெண்ணுக்குரிய கதை, கவிதைப் பகுதி மாணவர்களின் படைப்பாற்றலுக்குக் களம் அமைத்துத் தரகூடியது. கதையைத் தேர்வு செய்யும் மாணவர்கள் ஆர்வ மிகுதியில் பக்கத்தை நிரப்பி, கதைவிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். ஆனால் சரியான வாக்கிய அமைப்புடன், சொற்பிழை இல்லாமல், கதைக்குரிய சுவாரசியம், முடிவு ஆகியவற்றுடன் கதையை எழுதினால் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெறலாம்.

கதை நகரும் விதம், பாத்திரப் படைப்புகள் ஆகியவற்றுக்கும் கவனம் தர வேண்டும். ஒரு கதைக்குள்ளே அதிகக் கிளைக் கதைகளை எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது. கவிதையைத் தேர்வு செய்பவர்கள், கொடுக்கப்பட்ட 2 தலைப்புகளில் தங்களுடைய கவித்துவத்தையும் படைப்புத்திறனையும் பறைசாற்றும் வகையில் கவிதை படைக்கலாம்.

சுயமாக எழுதலாம்

பகுதி-5, ‘பா’வகை நயம் பாராட்டலுக்கு உரியது. கொடுக்கப்பட்ட பாடலின் திரண்ட கருத்தினை இதில் எழுத வேண்டும். அதனுடன் எதுகை, மோனை, இயைபு, அணி, சந்தம், பொருள் உள்ளிட்ட நயங்களில் ஏதேனும் ஐந்தினை எழுதுவது மூலம் இதில் 5 மதிப்பெண்களையும் பெறலாம். பகுதி-6, 5 மதிப்பெண்ணுடன் படிவம் பூர்த்தி செய்தலுக்கானது. இணைக்கப்பட்ட படிவங்களில் உரியதைத் தேர்ந்தெடுத்து, எளிமையாகப் பூர்த்தி செய்து இதில் 5 மதிப்பெண் பெறலாம். பகுதி-7 வாழ்வியல் கல்வி, வாழ்வியல் மதிப்புக் கல்விக்கானது. 5 மதிப்பெண்ணுக்குரிய இப்பகுதியில், தனியாகப் படிக்க அவசியமின்றிச் சுய அறிவினைக்கொண்டே பதிலளித்து முழு மதிப்பெண் பெறலாம்.

கடிதமும் கட்டுரையும்

தலா 10 மதிப்பெண்களுடன் கூடிய பிரிவு-4 கடிதம், பொதுக் கட்டுரைக்கானது. மாணவர்கள் கவனக் குறைவால் ஒன்றிரண்டு மதிப்பெண்களை இழக்க வாய்ப்புள்ளது 2-வது பகுதி ஆகும். கடிதப் பகுதியில், விண்ணப்பம், நண்பனுக்குக் கடிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்து எழுதலாம். படிநிலைகளில் உறுதியாகக் கிடைக்கும் மதிப்பெண்களுக்காக, விண்ணப்பக் கடிதத்தையே அதிகப்படியான மாணவர்கள் தேர்வுசெய்து எழுதுகிறார்கள்.

இதில் தேர்வுத்தாள் மதிப்பீட்டாளர் மதிப்பெண்ணைக் குறைப்பது சிரமம் என்பதும் ஒரு காரணம். பொதுக் கட்டுரை எழுதுவோர், உரிய தலைப்புகள் இட்டுத் தேவையான பத்திகளில் கட்டுரையை அமைக்க வேண்டும். மேற்கோள்கள், உவமைத் தொடர், மரபுத் தொடர், அறிஞர்களின் கருத்து ஆகியவற்றை எழுதும்போது, அவற்றை தனித்துக் காட்டும் வகையில் மை வண்ணத்தை மாற்றி எழுதுவது சிறப்பு. நிறைவாகக் கட்டுரையின் நிறுத்தற்குறிகள், எழுத்துப் பிழைகளைச் சரிபார்ப்பது அவசியம்.

தேர்ச்சி எளிது

தமிழ் இரண்டாம் தாளில் தேர்ச்சி என்பதுக்கு அப்பால், சுலபமாக 50 மதிப்பெண்களைப் பெறலாம். பாட நூலின் பயிற்சி வினாக்களிலிருந்து ஒரு மதிப்பெண் வினாக்களைத் தினந்தோறும் திருப்புதல், 2 மதிப்பெண் இலக்கண வினாக்களில் ‘எத்தனை வகைகள்?, அவை யாவை?’ என்பது போன்ற வினாக்களைக் குறித்துவைத்துப் படிப்பது போன்ற எளிமையான தயாரிப்புகளை மேற்கொள்ளலாம். தமிழாக்கம் செய்யும் பகுதி, விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்தல், வாழ்வியல் சூழல் பகுதி உள்ளிட்டவை தவற விடக்கூடாதவை.

(பாடக் குறிப்புகளை வழங்கியவர் கு.தனபாக்கியம்,
தமிழாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, அய்யம்பாளையம், ஈரோடு மாவட்டம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x