

மாணவர்களுக்கு என 14 வகை திட்டங்களை செயல்படுத்தும் ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஆற்காடு நாராயணசாமி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.ம்.சின்னையா கலந்துகொண்டு, 685 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
“நாட்டிலேயே பள்ளியிலும் கல்லூருயிலும் படிக்கின்ற மாணவ- மாணவிகளை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு 14 வகை திட்டங்களை வழங்கும் ஒரே மாநிலமாக நம்முடைய தமிழகம்தான் திகழ்கிறது. வேற்ய் எந்த மாநிலத்திலும் காண முடியாத காட்சி இது வாகும். மாணவர்களுக்கான நலத்திட்டங்களை மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து பின்பற்றுகின்றன.
தமிழகத்தில் வழங்கப்படும் மடிக்கணினி திட்டத்தை, உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்படுத்த அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் முயற்சி எடுத்துவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். 3 மாதங்கள் வழங்கிய பிறகு, அந்த மாநில அரசால் அந்தத் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமா்க செயல்படுத்தமுடியவில்லை. மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதைப் பார்த்து இந்தியத் திருநாடே பார்த்து வியக்கிறது.
மாணவர்களுக்கு 14 வகை திட்டங்களை இடை நிற்றல் இல்லாது தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று மாணவர்கள் நினைத்தால், நன்றாக படித்து 100 சதவீத தேர்ச்சி அடைந்து, அவரது புகழை மேலும் உயர்த்துங்கள்” என்றார் அவர்.
விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் காஞ்சி பன்னீர் செல்வம், எம்எல்ஏக்கள் வி.சோமசுந்தரம், பா.கணேசன், நகர மன்றத் தலைவர் டி.மைதிலி, பள்ளி தலைமை ஆசிரியை வே.ஜிக்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.