Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

ரேடியோ, வீடியோ, டிஸ்க் ஜாக்கி தொழிற் படிப்புகள்

இசை ஆர்வம், குரல் வளம் மற்றும் பேச்சாற்றல் கொண் டவர்களுக்கு ரேடியோ ஜாக்கி, வீடியோ ஜாக்கி, டிஸ்க் ஜாக்கி ஆகிய தொழிற் படிப்புகள் சிறந்த எதிர்காலத்தை அளிக்கின்றன. பணமும் புகழும் ஒருங்கே பெற்றுத் தரும் துறை இது. இதற்காக 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலான பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன.

கல்லூரி விழாக்கள், திருமணங் கள், நட்சத்திர ஹோட்டல்கள், பப், கோயில் விழாக்கள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என பல்வேறு விழாக்களில் இசைக் கச்சேரி பிரதான இடத்தை பிடித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாகவே நவீன இசைக் கருவிகளின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது தனி நபர்கூட நவீன தொழில் நுட்பம் மூலம் இசை அமைத்து ஆல்பம் தயாரிக்க முடியும். ரேடியோ, வீடியோ, டிஸ்க் ஜாக்கி பயிற்சிகளில் மேற்கண்ட நவீன தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனை கற்றுத் தேருபவர்கள் எஃப்.எம். ரேடியோ, தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் மற்றும் இசை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றலாம்.

டெல்லியில் உள்ள தி ஜேடி குரூப் கல்வி நிறுவனத்தில் 6 மாதம் இசை மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கின்றனர். சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பிரிட்டிஷ் கவுன்சில், மைலாப்பூரில் இருக்கும் அகாடமி ஆஃப் ரேடியோ ஸ்டெடிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மேற்கண்ட படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. வீடியோ ஜாக்கி மற்றும் டிஸ்க் ஜாக்கி படிப்புகள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் ஏராளமான தனியார் நிறுவனங்களிலும் கற்பிக்கப்படுகின்றன. ஆன் லைனில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் உண்டு. இப்பயிற்சிகளுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேற்கண்ட படிப்புகளைப் படிக்க பட்டப் படிப்பு தேவையில்லை. 10வது அல்லது பிளஸ் 2 என குறைந்தபட்ச படிப்பே போதுமானது.

இப்படிப்புகளை முடித்தவர்கள் தனியாக நிகழ்ச்சி செய்ய விரும்பினால், ரூ.8 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை முதலீடு செய்து இசைக் கருவிகளை வாங்க வேண்டியிருக்கும். ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் வருவாய் அளிக்கக் கூடிய தொழில் இது. அவ்வளவு பணம் முதலீடு செய்ய முடியாது என்பவர்களுக்கு வாடகைக்கு இசைக் கருவிகள் கிடைக்கின்றன.

இசை நிகழ்ச்சிக்கு சென்று சம்பாதிக்க விரும்பு பவர்கள் அவர்களின் தனித் திறமை, அனுபவம் மற்றும் புகழைப் பொறுத்து நாள் ஒன்றுக்கு ரூ.3,000 தொடங்கி ரூ.50,000 வரை சம்பாதிக்க முடியும். தவிர, தொலைக்காட்சி மற்றும் எஃப்.எம். நிறுவனங்களில் நிகழ்ச்சியை தொகுக்கும் தொகுப்பாளர் ஆகலாம். இவை தவிர சினிமாத் துறையிலும் இவர்களுக்கான வரவேற்பு அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x