Published : 25 Jun 2019 10:52 AM
Last Updated : 25 Jun 2019 10:52 AM

வேலை வேண்டுமா? - 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசுப் பணி

தமிழக அரசின் அமைச்சுப் பணியில் கிராம நிர்வாக அலுவலர், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), வரித்தண்டலர் (கிரேடு-1), நிலஅளவை மற்றும் நிலப்பதிவேடுகள் துறையில் நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 6,491 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டிருக்கிறது.

கல்வித் தகுதி, வயது வரம்பு

இத்தேர்வுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் கூடுதலாகத் தொழில்நுட்பத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு, கிராம நிர்வாக அலுவலர் பதவிக்குக் குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 30 வயதுவரை இருக்கலாம்.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. இதர பதவிகளுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பு 18. அதிகபட்ச வயது எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 35. பி.சி., எம்.பி.சி. வகுப்பினருக்கு 32. பொதுப் பிரிவினருக்கு 30. எனினும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி (பிளஸ் 2) பெற்றிருந்தால் அவர்களுக்கு வயது உச்சவரம்பு ஏதும் கிடையாது.

தேர்வுமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் வெவ்வேறு பதவிகளுக்குத் தேர்வுசெய்யப் படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது.

தேர்வர்கள் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் - இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம்.

தமிழ்வழிக்கு 20 சதவீதம்

அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்டுள்ள மொத்தக் காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியான 10-ம் வகுப்பைத் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். இதற்குப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:

14 ஜூலை 2019

எழுத்துத் தேர்வு: 1 செப்டம்பர் 2019

காலிப்பணியிடங்கள் விவரம்

# கிராம நிர்வாக அலுவலர் - 397

# இளநிலை உதவியாளர் - 2,792

# வரித்தண்டலர் - 34

# நிலஅளவர் - 509

# வரைவாளர் - 74

# தட்டச்சர் - 1,901

# சுருக்கெழுத்து தட்டச்சர் - 784

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x