Last Updated : 14 May, 2019 12:39 PM

 

Published : 14 May 2019 12:39 PM
Last Updated : 14 May 2019 12:39 PM

பயனுள்ள விடுமுறை: கோடையில் விளையாடிக் களிப்போம்

பள்ளி மாணவப் பருவத்தில் விடுமுறை என்றாலே விளையாட்டு தான். அதிலும் கோடை போன்ற நீண்ட விடுமுறைகளில் எப்போதும் விளையாடிக் களித்திருப்பார்கள். பொதுவாக மாலையில் விளையாடுவதையே வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், கடும் கோடையில் பூமி தான் உறிஞ்சிய வெப்பத்தை மாலை நேரத்தில் வெளியிடத் தொடங்கும்.

வெயிலின் உக்கிரமும் தாமதமாகவே வடியும். இதனால் மாலையில் விளையாடுபவர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். வேறு சிலர் இரவில் மின்னொளி வெளிச்சத்தில் நீண்ட நேரம் விளையாடுவார்கள். இந்தப் போக்கால் காலையில் தாமதமாக எழுவது பழக்கமாகும். பள்ளி திறந்த பிறகும் இந்தத் தாமதப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது தவிப்பார்கள்.

எனவே, மாலையில் விளையாட்டைக் குறைத்துக்கொண்டு, காலையில் அதிக நேரம் விளையாடப் பழகலாம். வெயில் நாளில் விடியல் விரைவாகத் தோன்றும்  என்பதால் அதிகாலையில் எழுந்து விளையாடத் தயாராகலாம். அப்போதைய காற்றும் விளையாடத் தோதாக வெப்பமின்றி இருக்கும். அதிகாலை எழுவதும் பழகும்.

பிடித்ததை விளையாடுவோம்

விடுமுறையில் இதுதான் விளையாடுவது என்றில்லாமல் பிடித்ததை, உற்சாகம் தரும் விளையாட்டுகளைத் தொடரலாம். வழக்கமான விளையாட்டுகளுக்கு அப்பால் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டும் விளையாடலாம். பள்ளி நாட்களில் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சியாகச் சிலதை விளையாடுவார்கள். விடுமுறையில் அவற்றைக் குறைத்துக் கொண்டு புதிய விளையாட்டுகளை முயலலாம். இதனால் விளையாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொடர்ந்து விளையாடவும் ஊக்கமாகும்.

கூடி விளையாடுவோம்

புதிய நண்பர்களைச் சேர்க்கக் கோடை விடுமுறை சிறப்பாக வாய்ப்பளிக்கும். கூடி விளையாடும்போது குழு மனப்பான்மை, தலைமைப் பண்பு, விட்டுக்கொடுத்தல், வெற்றி தோல்விகளை எளிதில் அணுகுதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பண்புகள் பழகும்.

காலை மாலை தவிர்த்துப் பிற வேளைகளில் உள்ளரங்க விளையாட்டுகளாகவும் கூடி விளையாடலாம். கேரம், சதுரங்கம் போன்ற அறிந்த விளையாட்டுகள் மட்டுமன்றி அவரவர் அறிந்த பாரம்பரிய விளையாட்டுகள், விதிமுறைகள் அற்ற சுவாரசியமான எளிய வேடிக்கை விளையாட்டுகளையும் விளையாடலாம்.

 

பாதுகாப்பாய் விளையாடுவோம்

# கோடையில் விளையாடும்போது உடல் நீர்ச் சத்தை விரைவில் இழந்துவிடும். எனவே, சோர்வடைந்தாலோ மயக்கம் வருவதாகத் தோன்றினாலோ உடனடியாக விளையாட்டிலிருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும். அம்மாதிரியானவர்கள் வெயில் நேரத்தில் விளையாடுவதை அறவே தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எலுமிச்சைச் சாறு, குளுக்கோஸ் கலந்த நீர் அருந்துவது நல்லது.

# விளையாடி வியர்த்ததும் உடனடியாக நீர் அருந்துவதோ ஏசி அறைக்குள் பிரவேசிப்பதோ கூடாது. மின்விசிறிக் காற்றில் தளர்வாக அமர்ந்து உடலைத் துடைப்பதும் தேவையெனில் வேர்வையில் நனைந்த ஆடையை மாற்றுவதும் உதவும். ஃபிரிட்ஜ் ‘சில்’ நீரைத் தவிர்க்க வேண்டும். பானைத் தண்ணீர் சிறப்பு.

# கோடைக்கு உகந்த ‘டயட்’டைப் பின்பற்றுவதும், கோடையில் கிடைக்கும் பழங்களை உண்பதும் உதவும். இயன்றவரை பருத்தி ஆடைகளையே அணிக.

# விளையாடுவதற்கு முன்பாக ‘வார்ம் அப்’ செய்வது போல, ‘வார்ம் டௌன்’ வாயிலாக விளையாட்டை முடிக்க வேண்டும். உடற்கட்டுப் பேணலுக்காகத் தினமும் கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர், கோடையில் அவற்றைச் சற்றுக் குறைத்துக்கொள்ளலாம்.

# விளையாடி முடித்து வேர்வை அகன்றதும் குளிப்பதும், குறைந்தது கை கால்களைச் சுத்தம் செய்வதும் அவசியம்.

# முதலுதவிக்கான அடிப்படை மருத்துவப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லது.

# தடகளப் போட்டிகள், குழு விளையாட்டுகள் எனத் தனிப்பட்ட பயிற்சிகளில் இருப்பவர்கள், இந்தக் கோடை விடுமுறையில் அந்த விளையாட்டுகளை மைதானத்துக்கு வெளியே கற்றுக்கொள்ளப் பழகலாம். உள்ளூர் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுடன் சந்திப்பு, பெருநகரங்களுக்கான பயணங்களில் அங்குள்ள நவீன மைதானங்களை நேரில் பார்வையிடுவதும் உதவும்.

# கோடையில் நீர் சார்ந்த விளையாட்டுகளில் மாணவர் களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும். தினமும் குறிப்பிட்ட நேரத்தை நீச்சல் குளத்தில் கழிக்கலாம். ஆனால், போதிய பயிற்சி, பெரியவர்களின் கண்காணிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். வாய்ப்புக் கிடைத்தால் கிராமப்புறங்களின் வயல்வெளி வாய்க்கால், பம்புசெட் தொட்டிகள் போன்றவையும் புது அனுபவத்தைத் தரும்.

- ஆர்.ரமேஷ், முதுகலை ஆசிரியர் மற்றும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர், விழுப்புரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x