Published : 28 May 2019 11:37 AM
Last Updated : 28 May 2019 11:37 AM

அந்த நாள் 34: முகலாய அரசிகளின் ஆட்சி

“குழலி, முகலாய ஆட்சில பெண்களின் இடம் என்னவா இருந்துச்சு? ரொம்ப நாளா இந்தக் கேள்வியக் கேட்கணும்னு நினைச்சிருந்தேன்”

“முகலாயர் ஆட்சில பெண்களின் நிலை கலவையா இருந்தது செழியன். ஒரு பக்கம் அரசவைப் பெண்கள் அந்தப்புரங்கள்ல இருந்து வெளியே வர முடியாத நிலை இருந்துச்சு. இன்னொரு பக்கம் நூர்ஜஹான் போன்ற அரசிகள் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சியே நடத்தியிருக்காங்க.”

“இரண்டும் எதிரெதிர் முனையா இருக்கே!”

“ஆமா, அப்படித்தான் இருந்துச்சு. முகலாய அந்தப்புரங்களுக்கு ‘மஹால்’னு பெயர். அந்தப்புரங்கள்ல பணிபுரிஞ்சவங்க எல்லாருமே பெண்களாகவோ இல்லேன்னா திருநங்கைகளாகவோ இருந்தாங்க. வெளியே பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தாங்க.

தனித்தனி வீடு, பெண் ஊழியர்கள், தோட்டங்கள், நீரூற்றுகள், பொழுதுபோக்கு, மூடப்பட்ட வண்டிகள்ல பயணம்னு எல்லா வசதியும் அந்தப்புரத்தில் வாழ்ந்தவங்களுக்குக் கிடைச்சது.

இப்படி ராணிகள், இளவரசிகள், அந்தப்புரப் பெண்கள் சொகுசு வசதிகளோட வாழ்ந்தாலும்கூட, அவங்களுக்கு எந்தச் சுதந்திரமும் இருக்கலை. அரசரோட அனுமதி இல்லாம புதிய நபர்கள் யாரையும் அவங்க சந்திக்க முடியாது. இப்படிக் கட்டுப்பாடுகளோட அவங்க வாழ்ந்த பகுதி ‘ஹரம்சரா’-னு அழைக்கப்பட்டுச்சு.”

“இப்படி இருந்தா அவங்களோட வாழ்க்கை சலிப்பா இருக்காதா?”

“திகட்டும் அளவுக்குச் சொகுசு வசதிகள் இருந்தாலும், சுவாரசியம் குறைந்த, தனிமையும் சோம்பேறித்தனமுமான வாழ்க்கையாவே அவங்களுக்கு இருந்துச்சு. தையல் வேலைப்பாடு, சீட்டாட்டம் போன்றவைதான் அவங்களோட பொழுதுபோக்கு.

அந்தப்புரப் பெண்களோட வாழ்க்கை யின் ஒரே குறிக்கோள், ஒரு மகனைப் பெற்றெடுப்பதன் மூலமா தங்கள் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் உயர்த்திக்கிறதா இருந்துச்சு.”

“ஆனா, நூர்ஜஹான் மட்டும் எப்படி ஆட்சி நடத்தினாங்க?”

“ஜஹாங்கிரின் விருப்பத்துக்குரிய அரசியா நூர்ஜஹான் இருந்தார். ஜஹாங்கிரின் அப்பா அக்பர் காலத்துலயே முகலாய ஆட்சி இந்தியாவுல நிலைபெற்றுடுச்சு. அதனால ஜஹாங்கிருக்குப் பெரிய பிரச்சினைகள் இல்ல.

10jpg

அரசவைக்கு வர்றதைவிடச் சொகுசு வசதிகளிலேயே அவர் அதிகமா திளைச்சுக்கிட்டிருந்தார். அந்த நிலைலதான் நூர்ஜஹானின் கைக்கு அதிகாரம் வந்துச்சு. இஸ்லாமிய முறைப்படி ஒரு திரைக்குப் பின்னால் இருந்தபடியே அரசவையையும் அவர் நடத்தியிருக்கார்.”

“நூர்ஜஹானுக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பு கிடைச்சதா?”

“இல்ல, பல ராணிகளும் இளவரசிகளும் அரசருக்கு ஆலோசனை வழங்கும் நம்பகமான நபர்களா இருந்திருக்காங்க. நூர்ஜஹானுக்கு முன்னாடி அக்பரின் தாய் ஹமிதா பானு பேகமும் அரசு ஆவணங்களை வாசிக்கும் அதிகாரத் தைப் பெற்றிருந்தார்.

அக்பரின் ராணி மரியம் அஸ் ஸமானி பல கப்பல்கள் மூலமா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி வணிகம் செஞ்சிருக்கார். நூர்ஜஹானைப் போலவே இன்னொரு இளவரசியும் ஆட்சிப் பொறுப்புகளைக் கவனிச்சிருக்கார்”

“அது யாரு, நான் கேள்விப்பட்ட தில்லையே?”

“தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜஹானின் மகள் ஜஹனாரா தான் அவர். கற்றறிந்தவராவும் கவிஞராவும் இருந்த அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து மனுக்களை விசாரித்து அறிவுரை வழங்கும் பணியைச் செய்ததால், ‘பேகம் சாகிப்’னு மரியாதையோட அவரை அழைச்சாங்க.

அரசு ஆணைகளில் முத்திரை பதிப்பதற்கு அதிகாரமுடைய ‘ஃபிர்மான்’ எனப்பட்ட மோதிரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்துச்சு. ஜஹனாராவுக்கு ஷாஜஹான் ஒரு முறை வழங்கின பிறந்தநாள் பரிசை மறக்கவே முடியாது. ஜஹனாராவின் வெற்றிலை போடும் செலவுக்காக மட்டும் சூரத் துறைமுகத்தை ஷாஜஹான் எழுதி வெச்சார்னா பார்த்துக்கோயேன்.”

“அப்ப பொது நம்பிக்கைக்கு மாறா முகலாய ஆட்சில பெண்களோட பங்கு கணிசமா இருந்திருக்குங்கிறதுதான் உண்மை, இல்லையா?”

“முகலாய ஆட்சில பெண்களோட பங்கு நிச்சயமா பெருசுதான். ஆனா, சிக்கல்களும் இருக்கத்தான் செஞ்சது. முகலாய அரசர்களிலேயே ரொம்ப முற்போக்குவாதியா இருந்த அக்பர், முகலாய இளவரசிகள் திருமணம் செஞ்சுக்கத் தடை விதிச்சிருந்தார்.

மருமகன்கள் சிம்மாசனத்தைப் பிடிக்கப் போட்டியா வந்துடக் கூடாதுங்கிறதே அவரோட எண்ணம். ஔரங்கசீப் காலத்துலதான் இந்தத் தடை விலக்கப்பட்டது.”

“அரசவைப் பெண்களின் வாழ்க்கை சரி, சாதாரணப் பெண்களும் இதேபோல மேம்பட்டிருந்தாங்களா குழலி?”

“இந்துப் பெண்களைவிட இஸ்லாமியப் பெண்களுக்குப் படிக்கிறதுக்கு அதிக வாய்ப்பு கிடைச்சது. அதேநேரம் இந்துப் பெண்களோட கணவர் இறந்துட்டா, கணவரின் சிதையோடு மனைவியையும் சேர்த்து எரிக்கும் சதி எனும் மூடத்தனமான வழக்கம் அன்னைக்கு இருந்துச்சு.

அதைத் தடை செய்ய அக்பர் முயற்சி செஞ்சார். ஆனால், அவரால அது முடியல. பின்னாடி ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரைக்கும் தொடர்ந்த அந்த முட்டாள்தனத்தை ராஜாராம் மோகன்ராய் போராடி நிறுத்தியதெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும் செழியன்.”

 

# அக்பரின் ராணி மரியம் அஸ் ஸமானிக்கு, ஜோத் பாய் என்றொரு பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

# ஜஹனாராவைப் போலவே ஔரங்கசீப்பின் மகன் ஸேப் உன்னிசா கவிஞராகவும் அறிஞராகவும் இருந்தார்.

# முகலாய அந்தப்புரத்தில் வாழ்ந்தவர்களுக்காகவே ‘மீனா பசார்’ என்ற சிறப்புச் சந்தை நடத்தப்பட்டது. அக்பர் காலத்திலிருந்தே இது நடத்தப்பட்டதாகக் கேள்வி.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி,

7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x