Last Updated : 16 Apr, 2019 10:00 AM

 

Published : 16 Apr 2019 10:00 AM
Last Updated : 16 Apr 2019 10:00 AM

பயனுள்ள விடுமுறை: வாழ்க்கையை உயர்த்தும் வாசிப்பு

பள்ளி மாணவர்கள் மத்தியில் அருகிவரும் வாசிப்புப் பழக்கத்தை இந்தக் கோடை விடுமுறையில் வளர்த்துக்கொள்வதன் அவசியத்தைப் பார்ப்போம்.

பாடங்களுக்கு அப்பாலும் வாசிப்பு

புதிய வினாத்தாள் மாதிரிகளிலிருந்து வழக்கமான வினாக்களுக்கு அப்பால் பாடங்களின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன என்பதை அறிந்தோம். எனவே, பாடப் புத்தகங்களுக்கு அப்பால் விரிவடையும் மாணவர்களின் வாசிப்புப் பயிற்சி, பாடங்களைக் கற்பதற்கு அடிப்படையான வாசிப்புத் திறனையும் மேம்படுத்தும்.

பொதுவாக வாசிப்பு ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றவர்களைவிடப் பாடங்களை வாசிப்பதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருப்பார்கள். பாட நெருக்கடி இல்லாத இந்த விடுமுறை நாட்களைப் பொதுவான வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செய்தித்தாள் வாசிப்போம்

மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த வகையிலிருந்து வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கலாம். அதற்கு முதல்படியாகத் தமிழ், ஆங்கிலத்தில் செய்தித்தாள் வாசிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். இதற்குத் தரமான செய்தித்தாளைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் அறிமுகப்படுத்த வேண்டும்.

 தொடக்க வகுப்பு மாணவர்கள் செய்தித்தாளில் தங்களுக்கு விருப்பமான செய்திகளை வாய்விட்டு வாசித்துப் பழகலாம். வயதுக்கேற்ற வகையில் அன்றாடச் செய்திகள் தொடங்கி, ஆழமான கட்டுரைகள்வரை தங்கள் ஆர்வத்தின் பாதையில் வாசிப்பை விரிவுபடுத்தலாம்.

அகராதி பழகுவோம்

வாசிப்புப் பழக்கத்தின் ஓர் அம்சமாகக் குறிப்புகள் எடுத்துக்கொள்வதையும் பழகுவது நல்லது. அன்றாடச் செய்திகளின் தலைப்புகள், பயனுள்ள தகவல்கள் ஆகியவற்றுடன் எதிர்ப்படும் புதிய வார்த்தைகளையும் குறித்துக்கொள்ள வேண்டும். அகராதி உதவியுடன் அவற்றுக்கான உரிய பொருளை அறிந்து அதையும் குறிப்பேட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

இம்முறையில் வாசிப்புப் பழக்கத்துடன், அகராதியைப் பயன்படுத்தும் ஆற்றல், சொல் அறிவு உள்ளிட்டவையும் வாய்க்கப்பெறும். அறிந்துகொண்ட புதிய சொற்களை அவ்வப்போது திருப்பிப் பார்ப்பதுடன் அவற்றைப் பேசும்போதும், எழுதும்போதும் பயன்படுத்தப் பழகுவதும் அவசியம்.

கோடை விடுமுறை நெடுக வாசிப்பைப் பழகினால், பின்னாளில் அதுவே மாணவரின் இயல்பாகிவிடும். பாடம் சார்ந்து அரசியல், பொருளாதாரம், அறிவியல் ஆகிய தலைப்புகளிலான வாசிப்பு, மதிப்பெண் உயர்வுக்கு மட்டுமன்றி மேற்கல்விக்கான வாய்ப்புகளைச் சுயமாகத் தேர்ந்தெடுக்கவும் உதவும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்போது இந்த வாசிப்புப் பின்புலம் பெரிதும் கைகொடுக்கும்.

வாசிப்பை ஊக்குவிக்கும் நூலகம்payanulla-2jpgright

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள நூலகம் சிறப்பாக உதவும். விடுமுறை நாட்களில் நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தை நூலகத்தில் கழிக்கப் பழகலாம். தொடக்கத்தில் பெரியவர்களும் உடன் சென்று வருவது, நூலக உறுப்பினராக்குவது என மாணவருக்கு உதவலாம். நூலகத்தின் அமைதியான சூழலும் அங்கு வாசிக்கத் திரளும் வாசகர்களுமே மாணவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை ஊட்டிவிடுவார்கள்.

குவிந்து கிடக்கும் செய்தித்தாள்கள், இதழ்கள், பல தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இரவலுக்கான நூல்கள், குவிந்திருக்கும் குறிப்புதவிக்கான நூல்கள் போன்றவை மாணவர்களை அரவணைத்துக்கொள்ளும். சிறார் கதைகளில் தொடங்கி அறிவியல் நூல்கள்வரை மாணவர்கள் தாங்கள் விரும்பியதில் வாசிப்பைத் தொடங்கலாம்.

வாசிப்பு பழகியவர்களுக்கு மயங்கொலிப் பிழைகள், கருத்துப் பிழைகள், எழுத்துப் பிழைகள் போன்ற பிழைகள் இல்லாத எழுத்துப் பயிற்சியும் இயல்பாகக் கைவரப்பெறும். வாசிப்புப் பழக்கம் கணிசமாகக் கூடும்போது சிந்தனைத் திறன், படைப்பூக்கம் போன்றவையும் வாய்க்கும்.

கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றல் போன்றவற்றிலும் ஆர்வம் பிறக்கும். ஒட்டுமொத்தமாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே மாணவப் பருவத்தில் உண்டாகும் வாசிப்புத் திறன் கைகொடுக்கும்.

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் தொடர்பான வாசிப்பு, கேட்டல் திறன்களை மேம்படுத்த ஆங்கிலச் செய்தித்தாள், கதைகள் வாசிப்பது உதவும். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் செல்ஃபோன் செயலியில் (The Hindu) செய்திகளின் வாசிப்பு அனுபவத்தை, அதன் உச்சரிப்பைக் கேட்டவாறே பெறும் வசதி உள்ளது. வீட்டிலிருந்தவாறே வாசிப்பு, உச்சரிப்பு, சொற்பெருக்கம் மேம்பட இந்தச் செயலி உதவும்.

- வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர், அரியலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x