

வணக்கம் செழியன்,
உனக்குக் கடிதம் எழுதி ரொம்ப நாளாச்சு. என்னோட பேராசிரியரைப் பார்க்கிறதுக்காகச் சீக்கிரமா புறப்பட்டு வர வேண்டியதாப் போச்சு. அதனாலதான் இந்தக் கடிதம்.
அசோகரின் பெருமைகளைப் பத்தியும் அவரோட ஆட்சிக் காலத்துல மக்கள் வாழ்க்கை எப்படி இருந்ததுங்கிறதையும் பத்தி நாம பேசியிருந்தோம். வட இந்தியாவுல அசோகர் புகழ்பெற்றிருந்ததைப் போலவே, தமிழகத்தில் புகழ்பெற்ற அரசர்களும் இருந்தாங்க. அவங்களோட பேரெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும்.
மதுரைக்காரியான என்னைவிட, தஞ்சைத் தரணியச் சேர்ந்த உனக்கு சோழர்கள் பத்தி நல்லாவே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும், இடைக்காலச் சோழர்கள் பத்தி நான் சொல்லப் போறேன்.
தமிழகத்தின் வட மாவட்டங்கள்ல பல்லவர்களோட ஆட்சி பொ.ஆ. 7-ம் நூற்றாண்டில் பலம் பொருந்தியதா மாறுச்சு. அவங்களோட ஆட்சியின் கீழே மத்திய தமிழகப் பகுதியை முத்தரையர்கள் ஆட்சி புரிஞ்சுக்கிட்டிருந்தாங்க.
அவங்கள்ட்ட இருந்து விஜயாலய சோழன் 850-ல் தஞ்சாவூரைக் கைப்பற்றி இடைக்காலச் சோழ ஆட்சியை நிறுவினார். அவருடைய மகன் முதலாம் ஆதித்யன் பல்லவர்களையும் பாண்டியர்களையும் அதே நூற்றாண்டில் வீழ்த்திப் பேரரசை விரிவாக்கினார்.
இவங்க இப்படி அமைச்சுத் தந்த அடித்தளத்துலதான் முதலாம் ராஜராஜனும் (985-1014) முதலாம் ராஜேந்திரனும் (1012-1044) சோழப் பேரரசைக் கடல் எல்லை கடந்து விரிவுபடுத்தினாங்க, பல்வேறு கலைச் சாதனைகளையும் புரிஞ்சாங்க.
கடற்படையின் வலிமை
சோழர் ஆட்சியில வலுவான போர்ப் படையும் கடற்படையும் இருந்துச்சு. சேர நாடு, பாண்டிய நாடு, தக்காணம், மைசூர் எனத் தென்னிந்தியாவோட பல பகுதிகளை ராஜராஜன் வென்றார். தொடர்ந்து இலங்கை, மாலத்தீவு போன்ற அயல் தேசங்களையும் வென்றார். போர் புரியறதுக்கு மட்டுமில்லாம வர்த்தகத்துக்கும் வலுவான கடற்படை அவசியம்னு அவருக்குத் தெரிஞ்சிருந்தது. தூரக் கிழக்கு நாடுகளுக்குச் சென்ற சோழ வர்த்தகக் கப்பல்களுக்குச் சோழர் கடற்படை பாதுகாப்பு தந்துச்சு.
ராஜராஜனோட மகன் ராஜேந்திர சோழன் கங்கைவரை போய் மேற்கத்திய சாளுக்கியர்களையும், வங்கத்தின் பாலப் பேரரசையும் வீழ்த்தினார். இதனால ‘கங்கைகொண்டான்’, ‘ஜெயங்கொண்டான்’ போன்ற பட்டப் பெயர்களை அவருக்குச் சூட்டினாங்க.
மலேய தீபகற்பத்தைச் சேர்ந்த அரசன் ஸ்ரீவிஜயனின் கடற்படை சோழ வர்த்தகர்களின் கப்பல்களைத் தாக்கிக்கிட்டிருந்துச்சு. அதையடுத்து ராஜேந்திர சோழனின் கடற்படை அங்கே போய், ஸ்ரீவிஜயனின் படைகளை வீழ்த்திச்சு. அதேபோல சுமத்திரா பகுதியை வென்றதால, ‘கடாரம் கொண்டான்‘ என்ற பெயரை ராஜேந்திர சோழன் பெற்றார்.
செல்வம் தந்த கோயில்கள்
இப்படிப் போர் வெற்றிகள் ஒரு பக்கம் தொடர்ந்துகிட்டிருந்த அதேநேரம் தமிழகம், கேரளம், இலங்கை, மாலத்தீவு ஆகிய பகுதிகள் வழியா நடைபெற்ற கடல்வழி வர்த்தகத்தைச் சோழர்கள் கையகப்படுத்தியிருந்தாங்க. இதன் மூலமா கிடைச்ச செல்வத்தைக்கொண்டு முதலாம் ராஜராஜன் பெரிய கோயில், முதலாம் ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் போன்ற பெரும் கோயில்களைக் கட்டினாங்க.
ரெண்டு கோயிலுமே கிட்டத்தட்ட ஒண்ணு போலவே இருக்கும். இதுல ஒரு சுவாரசியம் என்னன்னா, கங்கைகொண்ட சோழபுரத்துல அமைக்கப்பட்ட கோயில் குளத்துக்குக் கங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான பெரிய பாத்திரங்கள்ல கொண்டுவரப்பட்ட தண்ணியை ஊத்தியிருக்காங்க.
ஒன்பதாம் நூற்றாண்டுல தொடங்கின இடைக்கால சோழர் ஆட்சி 13-ம் நூற்றாண்டுவரை வலுவாக இருந்துச்சு. தென்னிந்தியாவுல நீண்ட காலம் ஆட்சில இருந்த அரச வம்சங்கள்ல ஒண்ணு இது.
அதேநேரம், தென்னிந்தியப் பேரரசர்களோட வீழ்ச்சிக்குக் காரணம், தொடர்ந்து ஒருவருக்கு எதிராக மற்றொருவர் போரிட்டுக்கிட்டு இருந்ததுதான். சாளுக்கியர்களைப் பல்லவர்கள் வீழ்த்தினாங்க, பல்லவர்களைச் சோழர்கள் வீழ்த்தினாங்க, 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு விஜயநகரப் பேரரசு தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிருச்சு.
அன்புடன்,
குழலி
அது என்ன கோரமண்டல் கடற்கரை?
பண்டைத் தமிழகத்தில் சோழர்கள் ஆண்ட பகுதி சோழமண்டலம் என்று அறியப்பட்டது. ஆங்கிலேயர்களின் வாயில் இந்தப் பெயர் நுழையாததால், ‘கோரமண்டல்' என்று அதை அழைத்தனர். இன்றைக்கும் ஒடிஷாவிலிருந்து தமிழகம் வரையிலான கடற்கரை, சோழமண்டலக் கடற்கரை என்றே அறியப்படுகிறது.
யாருக்கு உதவும்? போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம் |
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in