

வங்கத்தில் விக்ரமபூர் என்ற சிற்றூரில் ஜகதீச சந்திர போஸ் 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி பிறந்தார். இயற்கையிலேயே எதையும் உற்று நோக்கும் குணமும் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தன.
பட்டப் படிப்பை முடித்தவுடன் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியலைக் கற்க ஆரம்பித்தார். அறிவியலின் மூன்று பிரிவுகளையும் படித்தார்.
கல்லூரியில் இன வெறி
படிப்பு முடிந்ததும் அரசின் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பேராசிரியராகப் பணியாற்றும் ஆங்கிலேயருக்கு மாதம் ரூபாய் 300 ஊதியம் தரப்பட்டது. ஆனால் ஜகதீச சந்திர போஸூக்கு ரூபாய் 200 தான் தரப்பட்டது. அவர் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளாமலே வேலை பார்த்தார்.
இவரது அறிவியல் புலமையும், கற்பிக்கும் முறையும் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தன. அதனால் தவறை உணர்ந்த கல்லூரி நிர்வாகம், அவருடைய பதவியை நிரந்தரமாக்கியது. மூன்றாண்டுக்கான சம்பளத்தை மொத்தமாக வழங்கியது.
தன் வீட்டிலேயே ஆராய்ச்சிக் கூடம் அமைத்து மாலை நேரங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். வாழ்க்கை முழுவதையும் ஆராய்ச்சிகளுக்காகவே அர்ப்பணிப்பது என்று முடிவு செய்தார்.
இயற்பியலில் சாதனை
முதலில் மின்சாரத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார். மின்சார அலைகள் ஒளி அலைகளை ஒத்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தார். மின்சாரத்தைப் பற்றித் தான் கண்டறிந்த உண்மைகளை வைத்து ‘மின்சார ஒளி முறிவு’ என்னும் தலைப்பில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரை இங்கிலாந்தில் இருக்கும் ‘ராயல் சொசைட்டி’ வெளியிடும் இதழில் பிரசுரமானது.
லண்டன் பல்கலைக்கழகம் ஜகதீச சந்திர போஸூக்கு ‘டாக்டர் ஆஃப் சயின்ஸ்’ பட்டத்தை வழங்கியது.
இங்கிலாந்து மட்டுமல்லாமல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் போய் அங்கெல்லாம் தம் ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்கிச் சொற்பொழிவுகளை நடத்தினார். அவரால் இந்தியாவின் புகழ் ஓங்கியது.
தாவரங்களின் உயிரை உணர்த்தியவர்
இயற்பியல் துறைக்குப் பின் தாவரவியலின் பக்கம் திரும்பினார். பாரீசில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதைத் தக்க ஆதாரங் களுடன் நிரூபித்துக் காட்டினார். மயக்க மருந்து கொடுத்தால், மனிதரைப் போலவே தாவரங்களும் மயக்கம் அடையும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
“பிராணிகளைப் போலவே தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு. மகிழ்ச்சி ஏற்படும்போது, தழைத்து வளர்கின்றன. துயரம் ஏற்படும்போது, வாடு கின்றன. வெட்டும்போதும் அறுபடும்போதும் வலியால் வேதனைப்படுகின்றன” என்பன போன்ற அரிய பல உண்மைகளை அவர் கண்டறிந்தார். இரவும் பகலும் பாடுபட்டு, தாவரங்களின் உணர்ச்சிகளைக் கண்கூடாகக் காட்ட உதவும் “ரெஸோனண்ட் ரிகார்டர்” என்ற கருவியையும், அதன் வளர்ச்சியைக் காட்ட உதவும் “கிரஸகோகிராப்” என்ற கருவியையும் கண்டுபிடித்தார்.
தேடிவந்த கவுரவம்
மிகச் சிறந்த விஞ்ஞானியான அவருக்குப் பல பட்டங்கள் வழங்கப்பட்டன. இங்கிலாந்து ஜார்ஜ் மன்னர் சி.எஸ்.ஐ. பட்டம் வழங்கினார். ‘சர்’ பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. ராயல் சொசைட்டியின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் உறுப்பினராவது மிகப் பெரிய கவுரவமாகக் கருதப்பட்டது.
ஆய்வுக்கூடம் மட்டு மல்லாமல், கங்கை நதிக் கரையில் ஜிப்ஜேரியா என்ற இடத்தில் பயிர்த் தொழில் ஆய்வுச் சாலையையும் போஸ் நிறுவினார். டார்ஜிலிங்கில் மாயாபுரி ஆய்வுச் சாலையையும் நிறுவினார்.
தன் இறுதி மூச்சு வரை அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல அரிய உண்மைகளைக் கண்டறிந்த இவர் தனது 78வது வயதில் 1937 நவம்பர் 23-ந் தேதி மாரடைப்பால் காலமானார்.