

காலத்தை வெல்வது ஒரு சாதனையாளருக்கு அவசியமானது. காலத்தை வெல்வது என்பது அதன் எதிர்த் தரப்பில் இருப்பதல்ல; காலத்தின் ஒரு பாகமாக இருந்து மாறிவரும் காலத்தை எதிர்கொண்டு தன் துறையில் சாதிப்பது. அப்படிக் காலத்தைக் கூர்ந்து கவனித்துச் சாதித்தவர்களில் ஒருவர்தான் விஷ்ணுகுமார்.
கோயம்புத்தூர் அருகே அவினாசியைச் சேர்ந்தவர் விஷ்ணு. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். படித்தது பொறியியல். ஆனால், அந்தப் பணிக்குச் செல்லாமல் தன் சுற்றம் சார்ந்த தொழிலைத்தான் விஷ்ணு தேர்வுசெய்துள்ளார். முதலில் அரிசி, மளிகை வியாபாரத்தில் இறங்கியுள்ளார். அந்தத் தொழிலில் பல சோதனைகளைச் சந்தித்து வெற்றி கண்டுள்ளார். அந்த வியாபாரத்தை உலக அளவில் விரித்துள்ளார்.
தொடக்கத்தில் தடுமாற்றம்
2000-ம் ஆண்டுக்குப் பிறகு சிறு தானியங்கள் மீது உருவான ஈர்ப்பை விஷ்ணு கூர்ந்து கவனித்து வந்துள்ளார். இந்தப் புதிய வியாபாரத்தைத் தொடங்கலாம் என முடிவெடுத்தார். முதலில் கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானிய வகையை விற்பனை செய்துள்ளார்.
இதை விற்பனை செய்வதற்காகத் தனியாக ‘நேடிவ் ஃபுட் ஸ்டோர்’ (http://www.nativefoodstore.com) என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால், எதிர்பார்த்தபடி சிறுதானிய விற்பனை நடக்கவில்லை. “சிறுதானியம் சாப்பிட்டு வளர்ந்த தலைமுறையினர் எங்களது பொருட்களை விருப்பத்துடன் வாங்கினர். ஆனால், இளம் தலைமுறையினர் இதை வாங்க அதிகம் நாட்டம் காட்டவில்லை” என்கிறார் விஷ்ணு. இதனால் தொடக்கத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவு தொழில் நடைபெறவில்லை.
வகைவகையான வடிவில்
விற்பனையாகாத பொருட்களைச் சேமித்துவைப்பதிலும் சிக்கல் இருந்துள்ளது. இந்தப் பின்னணியில் இப்படிச் சிறு தானியத்தை வெறுமனே விற்பது சரியல்ல என முடிவெடுத்துள்ளார் விஷ்ணு. சிறுதானியங்களை இன்றைய தலைமுறையினர் விரும்பிச் சாப்பிடும் வகையில் நூடுல்ஸ், தோசை மிக்ஸ் போன்ற வடிவில் விற்கலாம் என மாற்றி யோசித்துள்ளார். அதன்படி கிட்டத்தட்ட 100 வகையை உருவாக்கியுள்ளார்.
காலை உணவாக கார்ன் ஃபிப்ளேக்ஸ் சாப்பிடும் வழக்கம் இப்போது பரவலாகியுள்ளதால் இவர் சிறுதானிய ஃபிப்ளேக்ஸை உருவாக்கி இருக்கிறார். இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருவதாகச் சொல்கிறார் விஷ்ணு.
யோசனை வேண்டுமா?
இந்தச் சிறுதானியப் பொருட்களையும் விஷ்ணு உலக அளவில் சந்தைப்படுத்த விரும்புகிறார். அதனால் அவர்கள் தயாரிப்பு அல்லாத இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்கள், செக்கில் ஆட்டிய சமையல் எண்ணெய் போன்றவற்றைத் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கித் தனது இணையதளம் மூலம் விற்றுவருகிறார். இதுபோன்ற இயற்கை முறையிலான பொருட்கள் தயாரிப்பில் உள்ளவர்கள் தங்களது பொருட்களை விற்பதற்கான யோசனைகளையும் வழங்கத் தயாராகவுள்ளார் விஷ்ணு.
இவரது பொருட்கள் இணையதளம் அல்லாது கடைகளிலும் கிடைக்கின்றன. இப்போது முதற்கட்டமாக 15 கடைகளில் தங்களது விற்பனையைத் தொடங்கியுள்ளார். விரைவில் அதைத் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவாக்கும் திட்டமும் விஷ்ணுவுக்கு இருக்கிறது.
- கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in