Last Updated : 26 Jun, 2018 11:48 AM

 

Published : 26 Jun 2018 11:48 AM
Last Updated : 26 Jun 2018 11:48 AM

ஆயிரம் வாசல் 11: ‘நானே செய்தது பார்!’

‘குழந்தைகளுக்கு இணக்கமான பள்ளிகள் நகரங்களில் மட்டுமே இருக்கும் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான். இதை உடைத்து கிராமத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது ஒரு பள்ளி.

‘எனக்கு இப்படி நடந்தால்...’ என்ற பாடம் அந்தப் பள்ளியின் இரண்டாம் வகுப்புக் குழந்தைகளின் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பாடத்தில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் நம்மை நெருங்கினால், அடிபட்டால், யாராவது நம்மை அடித்தால், பெரியவர்கள் யாராவது எதாவது செய்தால் என்பது உள்ளிட்ட அம்சங்கள் விவாதத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதன்மூலம் பாலியல் தொல்லை உட்படப் பலவற்றை ஏழு வயது குழந்தைகள்கூடப் புரிந்துகொண்டு, அது குறித்துப் பேச முன்வரும் சூழல் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேனூர் கிராமத்தில் உள்ள ‘பயிர்’ பள்ளியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை வளர்த்தெடுக்க மாலைக் கல்வி மையமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘பயிர்’ அமைப்பு. பிறகு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கான சிறப்புக் கல்வித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்துப் பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிக்கான சுகாதாரம், உடல்நலம் தொடர்பான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. 2014-ல் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முறைப்படுத்தி ‘பயிர்’ பள்ளிக்கூடமாகச் செயல்படத் தொடங்கியது.

20CH_Ayiram1 பச்சைமுத்து புதியன தேடும் ஆசிரியர்கள்

“எங்களிடம் விளிம்புநிலைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிக் குழந்தைகள், கற்றல் குறைபாடுடைய குழந்தைகள், வித்தியாசமான கல்விமுறையை எதிர்பார்க்கும் பெற்றோர்களின் குழந்தைகள் ஆகியோர் படித்துவருகின்றனர். இது ஆரம்பப் பள்ளி என்பதால் விளையாட்டு, கைவினை, செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். சமச்சீர் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறோம்.

அதைத் திறம்பட மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்க ஆசிரியர்களுக்குத் தொடர் பயிற்சிகள் அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். மாற்றுக் கல்வி முறைகளைக் கடைப்பிடிக்கும் பள்ளிகளுக்கு எங்களுடைய ஆசிரியர்கள் செல்கிறார்கள். அங்குள்ள செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு எங்கள் மாணவர்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன” என்கிறார் ‘பயிர்’ பள்ளியின் தலைமையாசிரியர் பச்சைமுத்து.

‘காகிதத்தில் பொம்மைகள் வடிவமைத்தல்’ என்பது போன்ற ஒரு பாடப் பகுதியை எடுத்துக்கொண்டு மாணவர்களுக்குத் தொப்பி, கூடை, மயில், குருவி, கொக்கு, படகு, பட்டாம்பூச்சி, பூ...என வடிவமைக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகள் குழந்தைகளுக்குள் இருக்கும் படைப்பாற்றலைத் தூண்டுகின்றன.

“இது போன்ற செயல்பாடுகளை முழுப் பள்ளிக்குமான பயிற்சி, பயிலரங்கமாக நடத்துவோம். தான் ரசித்து வடிவமைத்ததை ஒவ்வொரு குழந்தையும் சக குழந்தையிடம், ‘நானே செய்தது பார்!’ என்று தன்னம்பிக்கையோடு காட்டுவதைப் பார்க்கிறோம். ஒரு குழந்தை மற்றொரு குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பதும் இதன்மூலம் நிகழ்கிறது. குழந்தையிடமிருந்து ஆசிரியர் கற்றுக்கொள்வதையும் காண முடிகிறது” என்கிறார் பச்சைமுத்து.

வெற்றி பொருட்டல்ல

ஒரு குழந்தைக்குக் காயம்பட்டால் பெரிய காயமா சின்ன காயமா என்பதைப் பொறுத்து மூலிகை எண்ணெய் எடுத்துத் தடவுதல், காயத்தைச் சுத்தப்படுத்தும் முறை…இது போன்ற செயல்பாடுகளும், பாடல்கள் மூலமாக இங்கே கற்றுத் தரப்படுகிறது. சுகாதாரம், சத்துணவு, மரபு உணவு, இயற்கை உணவு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறுகிறார்கள்.

20CH_Ayiram2 ப்ரீத்தி right

“எங்களுடைய மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டு, யோகா, கராத்தே போட்டிகளில் கலந்துகொள்வதும் பரிசு பெறுவதும் வழக்கம். ஆனால் போட்டியை, பரீட்சையை, வெற்றி தோல்வியை நம்பாத நிலையில் இதுபோன்ற போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்புவது சரியா என்கிற கேள்வி எங்களுக்குள் ஆரம்பத்தில் எழுந்தது.

இருந்தாலும், மாவட்ட அளவிலான பரிசைப் பெறும்போது, அது அவர்களுக்கு முக்கிய அனுபவமாகவும் அடையாளத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாறுகிறது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால், வெற்றி பெற்றுத்தான் ஆக வேண்டும் என்றோ வெற்றிதான் முக்கியம் என்பது போன்ற நம்பிக்கைகளை உடைக்கும் உரையாடலைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்” என்கிறார் பயிற்றுநர் ப்ரீத்தி.

இந்தப் பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஆண்டு விழாவில் பெரியவர்கள், ஆசிரியர்கள் என ஒருவர்கூட இருப்பதில்லை. மாணவர்கள் மட்டுமே அனைத்தையும் ஒருங்கிணைத்து அழகாக நடத்தி முடிக்கின்றனர். இப்படிக் கிராமத்தில் இருக்கும் இவர்களுக்கு இந்தத் திறமை எல்லாம் எப்படி வந்தது என்று வியக்கும்படி இருக்கும்.

பள்ளியைத் தொடர்புகொள்ள: 76396 11282
கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x