

இந்த வயசுல இனிமே நான் என்னத்தைப் படிச்சு பரீட்சை எழுதுவது? எனச் சிலர் சலித்துக் கொள்வார்கள். அவர்கள் 100 வயதை அடைந்த முதியவர் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதற்காகப் பல்கலைக்கழகம் செல்கிறார்.
படிப்பதற்கு வயது ஒரு எல்லை கிடையாது என அவர் கூறுகிறார் என்று கேள்விப்பட்டால் என்ன செய்வார்கள்?. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போலோராம் தாசு என்பவர் தனது 100-வது பிறந்தநாளை கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததன் மூலம் கடந்த ஆண்டு கொண்டாடினார் அவர்தான் இந்தியாவின் மிக வயதான மாணவர்.
“என் மகன் 55 வயதில் முனைவர் பட்டம் பெற்றார், என்னால் ஏன் முடியாது?” என திரு தாஸ் வினவினார். 1930 -ம் ஆண்டில் தனது 19 -வது வயதில் இவர் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்.
பின்னர் ஆசிரியராக, வழக்கறிஞராகப் பணியாற்றி அசாம் மாவட்ட நீதிபதியாக 1971 -ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். முனைவர் பட்டத்திற்காக நவ வைணவம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
அசாமில் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க இத்தத்துவம் பயன்பட்டுள்ளது என இவர் நம்புகிறார்.
பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.ஓ,கே.மேதி. “ராம் ஒரு நல்ல முன் உதாரணம்” எனத் தெரிவித்தார். போலோராமுக்கு ஐந்து மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பத்து பேரன், பேத்திகளும் ஒரு கொள்ளுப் பேரக் குழந்தையும் உள்ளனர். அவர்களோடு இந்தத் தாத்தாவும் டாக்டர் பட்டத்துக்குப் படிக்கிறார்.