

வேலையில்லாத காலத்துக்கு அரசு வழங்கும் நிவாரணத்தொகை இருந்தால் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து குறிப்பிட்ட ஆண்டுகள் ஆகியும் வேலையில்லாமல் சிரமப்படும் பதிவுதாரர்களுக்கு அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு ஒருசில விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எனில் ஓராண்டு போதும். பதிவு மூப்பு நடப்பில் இருக்க வேண்டும். வயது 40-க்கு மேல் இருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எந்த வேலையிலும் இருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்தைத் தாண்டக் கூடாது.
மேற்கண்ட தகுதிகள் உடைய பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.150-ம், பிளஸ்-2 முடித்திருந்தால் ரூ.200-ம், பட்டதாரியாக இருந்தால் ரூ.300-ம் மாதம்தோறும் வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை 5 ஆண்டுகள் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை பெறலாம். உதவித்தொகை பெறும் பதிவுதாரர்கள் ஆண்டுதோறும் உறுதிமொழி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து வரவேண்டும். அப்போதுதான் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும்.