Published : 23 Jan 2018 11:32 AM
Last Updated : 23 Jan 2018 11:32 AM

தொழில் தொடங்கலாம் வாங்க 49: ஓடாத படத்தை யாராவது தயாரிப்பார்களா?

கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறேன். இதை விரிவுபடுத்த யோசனை கூறுங்கள்.

- கண்ணன், ஆவடி.

உங்கள் கம்ப்யூட்டர் சென்டர் எங்கே செயல்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் தொழில் வியூகம் அமைக்க வேண்டும். நகரங்களில் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடத் தற்காலத்திலும் வருங்காலத்திலும் தேவைப்படும் திறன்களைக் கற்றுத்தர வேண்டும். கிராமப்புறம் என்றால் அடிப்படைகளைக் கற்கவே இன்னும் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். சகலமும் மின்னணு மயமாகும் இந்த யுகத்தில் கிராமப்புறங்களில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தினால் மத்திய அரசாங்கம் மானியம், கடன், இதர உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளது. டெல்லியில் இயங்கிவரும் நேஷனல் ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனை (National Skill Development Corporation – NSDC ) அணுகுங்கள். கம்ப்யூட்டர் சென்டர் மட்டுமல்ல; பல கிராமப்புறத் திறன் சார்ந்த பயிற்சிகள் பற்றிய முழு விவரங்களை அவர்கள் வலைத்தளத்தில் காணலாம்.

எனக்கு சினிமா எடுக்க ஆசை. நண்பர்கள் சிலரும் பார்ட்னர் ஆக முன்வந்துள்ளனர். ஆனால், பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடுவதாகக் கேள்விப்படுகிறேன். அதிலும், ‘கந்துவட்டிப் பிரச்சினையால் தயாரிப்பாளர் தற்கொலை’ போன்ற செய்திகள் மேலும் நம்பிக்கை இழக்கச்செய்கின்றன. எந்தப் படம் ஓடும், எது ஓடாது என்று ஒரு தயாரிப்பாளராக எப்படிக் கண்டுபிடிப்பது?

- கே.எஸ்.ஆர், சேலம்.

திரைப்படத் துறையில் 90 சதவீதப் படங்கள் தயாரித்து வெளிவராமலும், வந்தால் தோல்வி அடைவதும் நிஜம். ஒரு ஆண்டில் பத்துக்குக் குறைவான தமிழ்ப் படங்களே நல்ல லாபம் பார்க்கின்றன. இருந்தும் வருடத்துக்கு நூற்றுக்கும் மேலான படங்கள் போட்டியில் உள்ளன. இது நிதர்சனம்.

சினிமாத் தொழில் பற்றி எந்த அறிவும் அனுபவமும் இல்லாமல் குறுகிய கால லாப நோக்கில் கடன் வாங்கித் தயாரிக்கப்படும் பெரும்பாலான படங்கள் தோல்வியைத்தான் தருகின்றன. தவிர, மற்ற உற்பத்திக் கூடத்தில் இருக்கும் முதிர்ச்சி இந்தத் தொழிலில் இல்லை. அடிமட்டத் தொழிலாளிகளின் ஊதியம் சீராக இருந்தாலும், சற்று முகம் தெரிந்த நடிகர்கள் அல்லது பிரபலத் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்றால் அவர்கள் சம்பளம் எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாமல் தாறுமாறாக உயர்ந்திருக்கும். சொன்ன கதையைக் குறிப்பிட்ட காலத்தில் அதிகச் சேதாரம் இல்லாமல் எடுத்துத் தருவது இயக்குநரது பொறுப்பு. பட்ஜெட்டுக்கு மிகாமல் படத்தை முடிப்பதுதான் முதல் சாமர்த்தியம். பின்னர், தியேட்டர் பிடித்து, பப்பிளிசிட்டி செய்யத் தனி பட்ஜெட்டும் திறமையும் தேவை.

அதுவும் நடந்து, உங்கள் படம் பற்றி நல்ல விமர்சனம் முதல்நாள் பரவினால், முதல்வாரக் கடைசியில் டீசென்டான கலெக்ஷன் கிடைத்தால் படம் காப்பற்றப்படும். ரிலீஸ் அன்று சுனாமி, பணமதிப்பு நீக்கம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்று எதுவும் நடைபெறாமல் இருக்க குலதெய்வத்தைத்தான் கும்பிட வேண்டும்!

புதிய தயாரிப்பாளருக்கு என் அறிவுரை: சினிமா அனுபவம் மிக்க ஆளுமைகள் துணையுடன், குறைந்த செலவில் நல்ல கதை என்று நம்பப்படும் படத்தை எடுத்து, சிறிய லாபத்தில் முதலில் கையை மாற்றி விற்றுவிடுங்கள் அதிகபட்ச பாதுகாப்பு இதுதான். ஒரு படம் ஓடுமா ஓடாதா என்று கேட்டால் அப்படி ஒரு ‘தங்க விதி’ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது தெரிந்தால், ஓடாத படத்தை யாராவது தயாரிப்பார்களா?

கணித ஆசிரியரான நான் வீட்டிலேயே டியூஷன் எடுத்துவருகிறேன். பத்தாவது, பிளஸ் டூ மாணவர்கள் மட்டும் 80 பேர் என்னிடம் படிக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி கிடைக்கும் சம்பளத்தைவிட பலமடங்கு வருமானம் வருகிறது. பெரிய ஸ்டடி சென்டர் ஆரம்பித்து முழு நேரம் இதைச் செய்யலாமா? வேலையைவிட வேண்டாம் என்று வீட்டில் சொல்கிறார்கள். எனக்கு வயது 46. நிரந்தர வருமானத்தை இழப்பதில் கொஞ்சம் தயக்கம் உள்ளது.

- திருவேங்கடம், சென்னை.

தனி ஆளாய் நின்று சமைத்து, பரிமாறி நடத்தப்படும் மெஸ் வேறு. ஓட்டல் வேறு. அதுபோலதான் உங்கள் டியூஷன் வகுப்பும் ஸ்டடி சென்டர் எண்ணமும். தற்போது உள்ள அமைப்பில் உங்கள் நேரமும் அறிவும்தான் மூலதனம். ஆனால், ஒரு சென்டர் அமைத்தால், உங்களைப் போன்ற தேர்ச்சியான ஆசிரியர்களைக் கொண்டுவருவது முதல் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம்வரை அனைத்து நிர்வாகப் பணிகளும் உங்கள் தலையில்.

லாபத்தை மறந்துவிட்டு யோசியுங்கள், எது உங்களுக்குத் திருப்தி தரும் என்று. நிரந்தர வருமானத்தை இழக்க விரும்பாத சூழலில், பகுதி நேரத்தில் தொழில் நடத்துவது கடினம். ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் உங்களுக்கு உதவியாக அமர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிகிறதா என்று ஒரு வருடம் பாருங்கள். தரம் குறையாமல், பிறரை வைத்து இதை லாபகரமாக நடத்த முடியும் என்று உங்களுக்கு நீங்களே நிரூபித்த பின்பு, பெரிய அளவுக்கு இதைக் கொண்டு செல்லுங்கள்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

‘தொழில் தொடங்கலாம் வாங்க!’

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் டாக்டர். ஆர். கார்த்திகேயன் வாசகர்கள் தங்களுடைய தொழில் முயற்சிகள் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x