Published : 21 Nov 2017 10:46 AM
Last Updated : 21 Nov 2017 10:46 AM

கேள்வி நேரம் 10: ஊர்களும் பட்டப் பெயர்களும்

1. கட்டிடங்களுக்கு அதிகமாக அடிக்கப்பட்ட வண்ணம் காரணமாக ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. வேல்ஸ் இளவரசர் ஏழாம் எட்வர்டை வரவேற்பதற்காக 1876-ல் இந்த நகரத்தில் உள்ள கட்டிடங்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணத்தை அடிக்கச் சொன்னார் மன்னர் சவாய் ராம் சிங். இன்றைக்கும் பல்வேறு கட்டிடங்கள் அதே இளஞ்சிவப்பு நிறத்தில் எஞ்சியிருப்பதால், இளஞ்சிவப்பு நகரம் என்ற பட்டப் பெயர் நிலைத்துவிட்டது. இந்த ஊருக்கு இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அந்தப் பெயர் என்ன?

2. இந்தியாவின் வைர நகரம் அல்லது ஜவுளி நகரம் என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் தேசிய அளவில் சேலைகள், துணி விற்பனை மையமாக அமைந்திருக்கும் இந்த நகரத்தின் பெயர் என்ன?

3. மகாராஷ்டிரத்தில் ‘மல்யுத்த வீரர்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் இந்த ஊரில், தேசிய மல்யுத்த மைதானம் அமைந்திருக்கிறது. இயற்கைச் சாயங்களால் எருமைத் தோல் பதப்படுத்தப்பட்டு, கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்படும் செருப்பும் இந்த ஊரில் புகழ்பெற்றது. இரண்டு பெருமைகளையும் கொண்ட அந்த ஊர் எது?

4. பெரிய நூல் மில்கள், ஜவுளித் தொழிற்சாலைகளுக்குப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் மான்செஸ்டரைத் தொடர்ந்து ‘இந்தியாவின் மான்செஸ்டர்’ என்று மும்பையும் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்று கோயம்புத்தூரும் அழைக்கப்பட்டன. தற்போது ‘இந்தியாவின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படும் நகரம் எது? சமீபத்தில் இந்த நகரம் யுனெஸ்கோவின் மரபு நகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

5. நீர்ப்பாதைகள், பாலங்கள் காரணமாக ‘நீர் நகரம்‘, ‘மிதக்கும் நகரம்’ என்ற பட்டப் பெயர்களால் புகழ்பெற்றது வெனிஸ் நகரம். ‘கிழக்குப் பகுதியின் வெனிஸ்’ எனப் புகழ்பெற்ற நகரம் இந்தியாவில் இருக்கிறது. இந்த ஊருக்கு ஏரிகளின் நகரம், வெள்ளை நகரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அது எந்த நகரம்?

6. மும்பைக்குக் கனவு நகரம், இந்தியாவின் வாயில், பொருளாதாரத் தலைநகரம், இந்தியாவின் ஹாலிவுட், ஏழு தீவுகளின் நகரம் என்று பல்வேறு பட்டப் பெயர்கள் உண்டு. மக்களின் வாழ்க்கை முறை, நகரத்தின் பணக்காரத்தன்மை காரணமாக ‘மினி மும்பை’ என்றழைக்கப்படும் நகரம் எது?

7. கல்வி நிறுவனங்கள் செழித்துள்ளதால் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்னும் பட்டப் பெயரைப் பெற்றது பாளையங்கோட்டை. அதேநேரம் ‘கிழக்குப் பகுதியின் ஆக்ஸ்போர்டு’ என்று அழைக்கப்படுகிறது பூனே. இந்த ஊரில் 1887-ல் தொடங்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகமே, இந்தப் பெயரைப் பெறுவதற்குக் காரணம். முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும் இந்த ஊரை அப்படி அழைத்திருக்கிறார். தக்காண பீடபூமியின் சிறந்த நகரமாகக் கருதப்படும் இந்த ஊருக்கு இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அது என்ன?

8. சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, 30 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை வளர்த்துள்ள நகரம் எது? உலகிலேயே பசுமையான நகரங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

9. ஆந்திரத்தில் உள்ள பிரபல நகரம் விஜயவாடா. இந்தப் பெயருக்கான அர்த்தம் என்ன?

10. குளிரான தட்பவெப்பநிலை, அருமையான சுற்றுச்சூழல் காரணமாக ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’, ‘கிழக்குப் பகுதியின் ஸ்காட்லாந்து’ என இரண்டு இந்தியப் பகுதிகள் அழைக்கப்படுகின்றன. அவற்றின் பெயர் என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x