

யுகி பாம்ப்ரி
புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்தியா - கொரியா அணிகள் வரும் 19-ம் தேதி மோத உள்ளன. இந்த ஆட்டம் சியோல் நகரில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் கலந்துகொள்வதற்காக இந்திய அணியின் ஒரு குழுவினர் நேற்று முன்தினம் சியோல் புறப்பட்டுச் சென்றனர். இதில் இரட்டையர் பிரிவு வீரரான யுகி பாம்ப்ரி பயணிக்கவில்லை.
அமெரிக்க ஓபன் பிரதான சுற்றுக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்ட போது யுகி பாம்ப்ரிக்கு வலது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் யுகி பாம்ப்ரி, டேவிஸ் கோப்பையில் கலந்துகொள்வாரா என்பது சந்தேகமாகி உள்ளது.
இதற்கிடையே மாற்று ஏற்பாடாக அனிருத் சந்திரசேகரை இந்திய அணியுடன் இணையுமாறு அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.