

ஜெய்ப்பூர்: ஒரு ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 500 மற்றும் அதற்கு அதிகமாக ரன்கள் குவித்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 93 ரன்களை (10 சிக்ஸர், 7 பவுண்டரி) விளாசித் தள்ளினார். இதன்மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்த இளம் வயது வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி எட்டினார். 15 வயதிலேயே இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.
இதற்கு முன்பு 2018-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த், குறைந்த வயதில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்த இளம் வீரர் என்ற சாதனையைச் செய்திருந்தார். அப்போது ரிஷப் பந்த்துக்கு வயது 20 ஆகும். தற்போது அந்த சாதனையை, வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். மேலும், ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்லது அதற்கு அதிகமான ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் அதிகமான ஸ்டிரைக் ரேட்டை (236.3) வைபவ் சூர்யவன்ஷி வைத்துள்ளார்.
இந்த வரிசையில் 2-வது இடத்தில் 2019-ல் ஆந்த்ரே ரஸ்ஸல் (204.8 ஸ்டிரைக் ரேட்), 3-வது இடத்தில் 2026-ல் அபிஷேக் சர்மா (202.0 ஸ்டிரைக் ரேட்), 4-வது இடத்தில் 2025-ல் நிக்கோலஸ் பூரன் (196.2 ஸ்டிரைக் ரேட்), 5-வது இடத்தில் 2024-ல் டிராவிஸ் ஹெட் (191.2 ஸ்டிரைக் ரேட்), 6-வது இடத்தில் 2014-ல் கிளென் மேக்ஸ்வெல் (187.7 ஸ்டிரைக் ரேட்) ஆகியோர் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் வரிசையில் 2-வது இடத்தை சூர்யவன்ஷி பிடித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை அவர் 53 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவர் 2012 சீசனில் 59 சிக்ஸர்களை அடித்திருந்தார். 2019-ல் ஆந்த்ரேரஸ்ஸல் 52 சிக்ஸர்களையும், 2013-ல் கிறிஸ் கெயில் 51 சிக்ஸர்களையும், 2022-ல் ஜாஸ் பட்லர் 45 சிக்ஸர்களையும், 2011-ல் கிறிஸ் கெயில் 44 சிக்ஸர்களையும், 2024-ல் அபிஷேக் சர்மா 42 சிக்ஸர்களையும் விளாசி அதற்கு அடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.