

இந்த ஐபிஎல் தொடரிலேயே அருமையான போட்டி நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் / குஜராத் டைட்டன்ஸ் போட்டிதான் என்றால் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. வெற்றி பெறவே முடியாத நிலையிலிருந்து டேவிட் மில்லர் வெளுத்து வாங்கி வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து கடைசியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ‘சோக்கர்’ ஆகத்தான் இருப்பார் என்ற கருத்துக்கே அவர் வலு சேர்க்க நேரிட்டது.
ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஜாஸ் பட்லர் அதிரடியில் டெல்லியின் சிறிய மைதானத்தில் 210 ரன்களை குஜராத் குவித்தது. இலக்கை விரட்டுகையில் டெல்லி தரப்பில் கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 92 ரன்களை விளாச, பதும் நிசாங்கா தன் பங்குக்கு 24 பந்துகளில் 41 ரன்களை விளாச 8 ஓவர்களில் 76/0 என்ற அருமையான தொடக்கம் கண்டது டெல்லி.
ஆனால் ஸ்கோர் 101 ரன்களில் இருந்போது நிதிஷ் ராணா மற்றும் பார்மில் இருக்கும் டெல்லி பேட்டிங் வரிசையின் முதுகெலும்பான சமீர் ரிஸ்வி ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ரஷீத் கான் வீழ்த்தினார். டேவிட் மில்லர் இறங்கினார், ஆனால் 13வது ஓவருக்கு முன்பாக மருத்துவ சிகிச்சை பெற்றார் டேவிட் மில்லர். அடுத்த ஓவரில் பிரசித் கிருஷ்ணாவை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசினார் ஆனால் கைக் காயம் அதிகரித்தது. 10 பந்துகளில் 12 ரன்கள் இருந்த போது ரிட்டையர் ஆனார்.
ஒரு கட்டத்தில் 42 பந்துகளில் 81 ரன்கள் கிட்டத்தட்ட ஓவருக்கு 12 ரன்கள் தேவை டெல்லி வெற்றிக்கு. இம்பாக்ட் வீரர் உள்ள இந்த ஆட்டங்களில் சேசிங்கில் இது ஒன்றும் பெரிய காரியமல்ல. மேலும் ராகுல் அப்போது 39 பந்துகளில் 67 என்று அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார்.
ஆனால் ரஷீத் கான் குஜராத்திற்காக திருப்பு முனை ஏற்படுத்தினார், அக்சர் படேலை வீட்டுக்கு அனுப்பினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சாய் சுதர்சனின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரிட்டையர்ட் ஹர்ட் ஆன டேவிட் மில்லர் மீண்டும் இறங்கினார். ஆனால் இவர் இறங்கியதும் கே.எல்.ராகுல் சிராஜ் பந்தில் வெளியேற 3 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ரபாடா ஓவரை பவுண்டரியுடன் முடித்தவுடன் 12 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற கடினமான நிலை ஏற்பட்டது.
அப்போதுதான் சிராஜ் படுமோசமான ஓவரை வைடுடன் தொடங்கினார், பிறகு மில்லர் அவரை 2 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாச நிகாம் ஒரு பவுண்டரி விளாச மொத்தம் 23 ரன்களை அந்த ஓவரில் வாரி வழங்க கடைசி ஓவரில் 12 ரன்களை தடுக்கும் பொறுப்பு பிரசித் கிருஷ்ணா தலையில் விழுந்தது. ஆனால் மில்லர் ஸ்ட்ரைக்கில் இல்லை நிகாம் தான் இருந்தார், அவர் முதல் பந்தை தூக்கி பவுண்டரி விளாசி அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குல்தீப் யாதவ் இறங்கினார். மில்லர் கையில் ஸ்ட்ரைக் வந்தால்தான் வெற்றி சாத்தியமாகும். குல்தீப் யாதவ் சிங்கிள் எடுத்து மில்லர் கையில் கொடுத்தார்.
3 பந்துகளில் 8 ரன்கள் தேவை. இந்த சமயங்களில் யார்க்கர் கை கொடுக்கும் ஆனால் துல்லிய யார்க்கராக இருக்க வேண்டும், இல்லையெனில் ஃபுல் டாசாகவோ, ஸ்லாட் பந்தாகவோ மாறிவிடும், அப்படித்தான் பிரசித் கிருஷ்னா தவறிழைக்க மில்லர் அந்தப் பந்தை 106 மீ சிக்சருக்கு அனுப்பினார். 2 பந்துகளில் 2 ரன்கள் இருந்த போது.
5வது பந்தில் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பு வந்தால் எடுக்க வேண்டியதுதான் மேட்ச் டை நிலையில் கடைசி ஒரு பந்து குல்தீப் யாதவ் ஸ்ட்ரைக்கில் இருப்பார் இது என்னவேண்டுமானாலும் ஆகியிருக்கலாம், ஆனால் சிங்கிள் எடுக்காமல் மில்லர் ஸ்ட்ரைக்கில் இருந்தால் வென்று விட முடியும். இந்த இரண்டு தெரிவுகளில் மில்லர் சிங்கிள் எடுக்க வேண்டாம் என்ற தெரிவை எடுத்தார்.
ஷார்ட் பந்தை டீப் ஸ்கொயர் லெக் பகுதிக்கு அடித்தும் சிங்கிள் எடுக்காமல் மில்லர் கடைசி பந்தை வெற்றியாக மாற்றலாம் என்று எதிர்பார்த்தார், அதோடு யார்க்கராகலாம், யார்க்கர் மிஸ் ஆகி புல் லெந்த் ஆகலாம், ஸ்லாட் பந்தாகலாம் என்றெல்லாம் அவர் எதிர்பார்த்தார், ஆனால் பிரசித் கிருஷ்ணா மிகப் புத்திசாலித்தனமாக ஒரு ஸ்லோ பவுன்சரை வீசினார், சற்றும் எதிர்பாராத மில்லர் ஷாட்டை மிஸ் செய்தார்.
இதோடு டை ஆவது செய்யலாம் என்று விழுந்தடித்துக் கொண்டு ஒரு ‘பை’ ரன் ஓடலாம் என்று பார்க்க குல்தீப் ரன் அவுட் ஆக டெல்லி ஒரு ரன்னில் தோற்றுப் போய்விட்டது. தென் ஆப்பிரிக்கா போலவே மில்லர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ‘டெஸ்பரேட் சோக்கர்ஸ்’ ஆக்கிவிட்டார்.