

வெலிங்டன்: நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 75 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஷாய் ஹோப் 48, ஜான் கேம்பல் 44, பிரண்டன் கிங் 33, கேப்டன் ராஸ்டன் சேஸ் 29, டெவின் இம்லாக் 16, ஜஸ்டின் கிரீவ்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கவேம் ஹாட்ஜ், கேமர் ரோச், ஓஜய் ஷீல்ட்ஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது கடைசி 7 விக்கெட்களை 52 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் பிளேர் டிக்னர் 4, அறிமுக வீரரான மைக்கேல் ரே 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. டேவன் கான்வே 16, கேப்டன் டாம் லேதம் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 181 ரன்கள் பின்தங்கியுள்ள நியூஸிலாந்து அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.