நியூஸிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணி பதிலடி

ஜெய்ஸ்வால் 85, கே.எல்.ராகுல் 52* ரன்கள் விளாசல்
நியூஸிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணி பதிலடி
Updated on: 
2 min read

வெலிங்டன்: நியூஸிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. ஹென்றி நிக்கோல்ஸ் 113, கிளென் பிலிப்ஸ் 94 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 121 ஓவர்களில் 368 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தனது 2-வது சதத்தை விளாசிய கிளென் பிலிப்ஸ் 216 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோல்ஸுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 216 ரன்கள் சேர்த்தார் கிளென் பிலிப்ஸ்.

இதையடுத்து களமிறங்கிய நேதன் ஸ்மித் 14, கைல் ஜேமிசன் 11, மேட் ஹென்றி 1, ஜேக்கப் டஃபி 4 ரன்களில் வெளியேறினர். ஹென்றி நிக்கோல்ஸ் 335 பந்துகளில், 21 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர், ஒட்டுமொத்தமாக சுமார் 10 மணி நேரம் களத்தில் செலவிட்டு இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4, ஆகாஷ் தீப் 3, அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி அற்புதமான தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. தனது 14-வது அரை சதத்தை கடந்த ஜெய்ஸ்வால் 89 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசிய நிலையில் மேட் ஹென்றி பந்தில் விக்கெட் கீப்பர் டாம் பிளண்டலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் இணைந்து ஜெய்ஸ்வால் 27.5 ஓவர்களில் 130 ரன்கள் குவித்தார். இதையடுத்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 99 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் தனது 22-வது அரை சதத்தை கடந்தார்.

நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 39 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 52, தேவ்தத் படிக்கல் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 209 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

விராட் கோலியை முந்தினார் ஜெய்ஸ்வால்

வெலிங்டன்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 85 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2023-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜெய்ஸ்

வால், இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 32 ஆட்டங்களில் 58 இன்னிங்ஸ்களில் விளையாடி 2,672 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் வாயிலாக இந்திய வீரர்களில் 5-வது இடத்தில் இருந்த விராட் கோலியை(69 இன்னிங்ஸ்களில் 2,617 ரன்கள்) பின்னுக்குதள்ளி உள்ளார் ஜெய்ஸ்வால். இந்த வகை சாதனையில் இந்திய வீரர்களில் ரிஷப் பந்த் (2,947 ரன்கள்), ஷுப்மன் கில் (2,917), ரோஹித் சர்மா (2,716), ரவீந்திர ஜடேஜா (2,675) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

32 வருடங்களுக்கு பிறகு

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.

நியூஸிலாந்து மண்ணில் இந்திய தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவிக்கும் நிகழ்வு 32 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நடைபெற்றுள்ளது. கடைசியாக 1994-ம் ஆண்டு ஹாமில்டன் டெஸ்டில் இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து, நயன் மோங்கியா ஜோடி 102 ரன்கள் எடுத்திருந்தது.

நியூஸிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணி பதிலடி
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

X