

வித்யா ராம்ராஜ்
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 54.75 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து தேசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் (54.31) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், கஜகஸ்தானின் அடலினா ஜெம்ஸ் (54.58) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
கடந்த 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பி.டி. உஷா 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலக்கை 55.42 விநாடிகளில் எட்டியிருந்தார். இதுவே இந்திய வீராங்கனை ஒருவரின் சிறந்த செயல் திறனாக இருந்தது. இதை 42 வருடங்களுக்கு பின்னர் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் வித்யா ராம்ராஜ். 28 வயதான வித்யா ராம்ராஜ் தமிழகத்தின் கோவை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் வித்யா ராம்ராஜுக்கு இது 2-வது பதக்கமாக அமைந்தது. அவர், 4x400 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி.உஷா 1984-ம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வித்யா ராம்ராஜ் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையை படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும். அவரது சிறப்பான சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.