

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், அது மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. தற்போது அவர், சர்வதேச ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். விராட் கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 27.4 கோடி ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்று முன்தினம் இரவு திடீரென்று முடங்கியது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ரசிகர்கள் அணுகியபோது கிடைக்கவில்லை என்று காண்பித்தது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் விராட் கோலியின் சகோதரர் விகாஸின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டிருந்தது.இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று
காலை 8.30 மணியளவில் அவ ரது இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.