

புதுடெல்லி: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வரும் ஜனவரி 6-ம் தேதி மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கவுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் தங்கள் மாநிலம் சார்ந்த அணிக்காக களமிறங்கி விளையாடி வருகின்றனர். அதன்படி விராட் கோலி, டெல்லி அணிக்காக கடந்த வாரம் 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசினார்.
இந்நிலையில் வரும் 6-ம் தேதி டெல்லி அணி பெங்களூருவில் உள்ள மைதானத்தில் ரயில்வேஸ் அணியுடன் மோதுகிறது. இதில் விராட் கோலி, டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்தத் தகவலை டெல்லி கிரிக்கெட் சங்கத்தலைவர் ரோஹன் ஜேட்லி தெரிவித்தார்.